சனி, 16 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 6:51 PM
சுஜி
அழகான பெண்ணாய் இருந்தாய்
புன்னகை வரையப்பட்ட முகம் உனக்கு
இரவை ஒரு அழுக்காக
இரவை ஓர் மூச்சடக்கும் வாயுவாக
இரவை முழியை தோண்டும் கோட்டான்களின் விசுவாசியாக
இரவை
நீ பற்றிய துர்கனவாக
ஆக்கி கொண்டேன்
இரவை உன் பொருட்டு வெறுத்தல்
தகும்
கந்தகம் பூசப்பட்ட இரவு
இருப்புத்துண்டுகளாக
உன்னை நெருங்கியப்போது
நான் அதற்கெதிரெ
நிற்காததொரு கோளைத்தனம்
சுஜி
இரவொரு பெருவீரன்
இரவு என்னிடமிருந்து
எல்லாவறையும் எடுத்துக்கொண்டது
அல்லது பறித்துக்கொண்டது
நான் மிகத்தனித்திருக்கின்றேன்
இரவினை
என் பொருட்டு வஞ்சிக்கவும்
உன் பொருட்டு
மன்னிக்கவும்
காத்திருக்கிறேன்
உன்னுடைய
புன்னைகையை
இரவின் பின் இங்கே வீசுவேன்
கறுப்பின் மீது முளைத்து
பகலைக் காடாக்கும்
அது.
சுஜி புன்னகை வரையப்பட்ட முகம் உனக்கு.
-ய-
(புன்னகை பற்றி சொல்லிதந்த தோழி சுஜிபாவிற்கு)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக