வெள்ளி, 1 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 5:52 AM


ஒருவேளை நீயற்றிருத்தல் பற்றியவோர் கவிதையாக
இது மாறிவிடக்கூடும் என்ற அச்சமிருந்தது
எனினும் சொல்லப்பட்ட வார்த்தைகளின் கூட்டத்தில் இதனை
கண்டபோது வார்த்தைகளை நம்பியதைப் போலவே அதனையும் நம்பத்தொடங்கினேன்

மொளனத்தின்
கள்ள முகத்தை பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா ?
விஷ கத்திகளால் மழித்து எடுக்கப்பட்டது அது
எங்கிருந்து என்பது இரகசியமானது,

மெளனத்தின் கள்ள முகம்
கனதியானது கருக்கல் இருளின் மிகஅடர்த்தியான இடங்களில் ராணித்தேனீகளின் கொடுக்குளை கொண்டு உறிஞ்சியெடுத்து செய்ததைபோல்
பக்குவமான கறுப்பது

தொடுதலை பொறுத்து விதம் விதமாய் நைந்து உருமாறி கைகளில்
கொழகொழக்கும் அதனுடல்
முகத்தில் அப்பிக்கொள்ள மட்டும் முகத்திற்கானது.
நான் அதனை கடித்திருக்கிறேன்
உதட்டில் ஒட்டிகொண்டது ,பற்களில் படிந்து அண்ணத்தில் வழிந்து தொண்டைவரை இறங்கி
திண்மமென உறைந்து மூச்சடைத்தது


விஷக்குப்பிகளுக்கு தேவையன வார்த்தைகளை உமிழும்போதுமட்டும் மூச்சுக்கும் வார்த்தைக்கும் வழிவிட்டது
உன்னுடைய வார்த்தைகளை நெஞ்சைக் கிழித்த போது உபரியாய் வெடித்த தொண்டக்குழிக்குள் இருந்து நழுவி வீழ்ந்து
கடலானது அந்த முகம்
ஒரு கடலை எங்கனம் உவமிப்பது
மெளனமாக
முகமாக
இருளாகவிருந்த
அது கடலாக ஆனதென்றா. ?


ப்ரியகி
கடலை எடுத்துக்கொள்.
போய்விடு
கடலற்றவென் உலகம் வெந்தழியும்
என்றெண்ணாமல் போ
ஏற்றகவே வானில் மேகத்தினறிகுறிகள்
பிரிவின் நிலமெல்லாம்
புனித மெளனத்தின் விதைகள் .

.-யதார்த்தன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக