செவ்வாய், 29 செப்டம்பர், 2015

Posted by விகாரன் On 6:34 AM

01.

நீயற்றிருந்த
இரவு

02.

யன்னலுக்கு வெளியே அழும் மழை

03.

யன்னல்
திறக்கும் போதெல்லாம்
இரவுக்குளிருந்து வேகமாய் வந்து
கம்பிகளில் மோதி இறக்கும் செம்பறவை

04.

நொண்டிக்காலில் நிற்கும் தீச்சுவாலை
பாளமாய் வெடித்த சிமிலி
பூஞ்சணம் பிடித்த ஒளி
மேலும் இத்யாதிகள் கொண்டவந்த லாந்தர்

05.

இரவின் மீதேறிவந்து
மணக்கும்
பூவில் தேய்க்கப்பட்ட சிகரட்டின்
நெடி

06.

விழித்த பின்னும்
முடியாத துர்கனவு.

07.
கடைசியாய் வெளிச்சம் வந்த போது
கதவுகளுக்கு பின் நிறுத்தி வைத்த
நிழலின் ஓலம்

08.
குளிர்காற்றில்
உறையும்
பாதி அருந்திய தேனீர் கோப்பை

09.
கடைசி சொட்டு
மின்சாரத்தில்
விக்கி இறக்கும்
கைபேசி

10
இறுக்கி கண்களை மூடுகையில்
மெல்ல எழும் உன் தூயமுகம் ,
கருவறை இருட்டு
மூக்குத்தி வெளிச்சம்.*

-யதார்த்தன் 
(29.09.2015 அதிகாலை 03 மணி)
* கடைசி அடி – கிரிஷாந்தின் கவிதையொன்றை அடியொற்றியது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

Posted by விகாரன் On 6:34 AM




யதார்த்தன்,
வீட்டின் கணணி எதிரில்
சரசாலை சாவகச்சேரி.
09.11.2015 மதியம் 1.30

ப்ரிய அனும்மா ,


எனக்கு காய்ச்சல் அனும்மா , கை நடுங்குது டைப்பண்ணேலாம கிடக்கு ஆனாலும் இதை எழுதோணும் போல கிடக்கு.

நேற்று முந்தநாள் பேஸ்புக்க கவனிச்சியா ? கிரிஷாந் பள்ளிகூடத்தை பற்றி தொடர்ச்சியா எழுதிக்கொண்டிருக்கிறான் . யாழ்ப்பாணம் இந்துகல்லூரின்ர 125 ஆவது ஆண்டு விழாவாம். கிரியும் அவன் பள்ளிக்கூட தோழர்களும் பள்ளிகூடத்தை பற்றி எழுத்திக்கொண்டிருக்கிறார்கள். நண்பர்கள் ,பட்டபெயர்கள் , டீச்சர்கள் , குழப்படிகள் எண்டு நிறைய விசயத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு வருசத்துக்கு முதல் கிரிஷாந்தை நான் முதன் முதலில் சந்திச்சதும் அவன்ர பள்ளிகூட நிகழ்வு ஒண்டிலதான் . கிரிஷாந் எப்பவும் பள்ளிகூட வாழ்கை பற்றி சிலாகிச்சு சொல்லுவான். ஆதியும்தான். இரண்டு பேரும் செய்த அட்டகாசங்கள் எல்லாம் இப்போது சுவாரஸ்யமானதும் அப்போது சீரியசானதுமான சம்பவங்கள். கிரிஷாந் சொல்லுறது போல
“ஒரு தனி மனிதன எவ்வளவு மனிதர்கள் சேர்ந்து உருவாக்குகிறார்கள் ” எண்டுறது மாதிரிதான். அவன்ர வாழ்கையும் . எனக்கு தெரிஞ்சு கிரிய உருவாக்கினதில அவன்ர அம்மாவும் , அவனும் ,புத்தகங்களும் , ஓஷோவும் , ஜப்னா ஹிந்துவும் , தான் இருக்கிறாங்கள்.
அனுகுட்டி உனக்கு பொறாமையா இருக்கா ? எனக்கு இருக்கு .


இண்டைக்கு மத்தியானம் யோசிச்சன் என்ர பள்ளிகூட வாழ்கையை பற்றி . பள்ளிகூடம் இல்ல ,அது பன்மை ல வரோணும். பள்ளிகூடங்கள். பின்ன ஒண்டோ ரெண்டோ , முழுசா இரண்டு தாளில் லீவிங் சேட்டிபிகேட் வச்சிருக்கிற ஒரே இலங்கை குடிமகன் நானாகத்தான் இருப்பன். முடிஞ்ச வரை ஞாபகபடுத்திறன் உன்ர பிஞ்சு கையால எண்ணுபாப்பம்,


01.மட்டுவில் கமலாசனி வித்தியாலயம்.
02. சுதுமலை சின்மய பாரதி வித்தியாலயம்
03.சுதுமலை செல்லத்துரை வித்தியாலயம்
04.இணுவில் இந்து ஆரம்ப பாடசாலை
(சின்ன பள்ளிகூடம்)
05.இணுவில் இந்துகல்லூரி
(பெரிய பள்ளிகூடம்)
06.சாவகச்சேரி இந்து கல்லூரி
07.பரந்தன் இந்துமகா வித்தியாலயம்.
08.கிளிநொச்சி மகாவித்தியாலயம்.
09.தர்மபுரம் மகாவித்தியாலயம்
10.கதிர்காமர் நலன்புரி முகாம் பாடசாலை
(அதுக்கு அப்ப பேர் இல்ல ஆனா பள்ளிகூடமா இயங்கினது)
11.மன்னார் பரிகாரிகண்டல் ஜி.ரி.எம்.எஸ்
12.புத்தளம் சென்.மேரிஸ் வித்தியாலயம்
13.புத்தளம் இந்து கல்லூரி
14.மானிப்பாய் இந்துகல்லூரி.

மொத்தம் 14 பள்ளி கூடம் , ஒரு ஜிப்சியை போல இத்தன 22 வருசத்தில இந்த தேசம் என்னை எவ்வளவு பள்ளிகூட வகுப்புக்க நுழைய வச்சுது. நாட்கணக்கில் படிச்ச பள்ளிகூடம் , மாதங்கள் படிச்ச பள்ளிகூடம் சில வருசம் மட்டும் படிச்ச பள்ளிகூடம் எண்டு. இரண்டு மாகாணத்தில் நாலைஞ்சு மாவட்டத்தில் என்ர பள்ளிகூட வாழ்கை ஓடிச்சு.


இதில நான் எந்த கதைய எழுதுவன் அனு ?

டீச்சர்களை பற்றியா ?

ப்ரண்ஸ்?

குழப்படி ?

காதல் (கள்) ?

எல்லாம் கதையள் தான் சிலது சுவாரஸ்யம் சிலது மொக்கை ,


எந்த பள்ளிகூடத்திலையும் கிளாசுக்க நுழையேக்க பயமோ பதட்டமோ கொஞ்சநாள்ல எனக்கு இல்லாம போச்சு. யாரா இருந்தாலும் டக்கெண்டு பிரண்ட் ஆகிடுவாங்கள் . டீச்சர் மாரோட உடனே நெருக்கமாவன். நிறைய பேர மறந்து போனன். ஆனால் நிறையப்பேர மறக்கேலாது .

டீச்சர்கள்ல

துஜிதா மிஸ்
(முதல் முதல்ல ஒரு ஐந்தாம் வகுப்பு பெடியன அழவச்சிட்டு லண்டன் போனா)

தர்ஷினி மிஸ்
(ஒற்றைவரில எப்பிடி எழுதிறது ஒரு தேவதைய பற்றி ?)
யாசோ மிஸ்
(கணக்கு படிப்பிச்சா -கவித கவித)

காயத்ரி மிஸ்
(ஹாரி பொட்டர்னு எனக்கு பட்டம் வச்சவா)

சிட்டு குருவி
(சத்தியமா அவங்க பேர் மறந்து போச்சு )

இன்னொரு தர்ஷினி மிஸ்
(இங்லிஸ் படிப்பிச்சாங்க இப்ப வரைக்கு அவங்க தான் உலகத்தில அழகு)

ஒரு முஸ்லீம் மிஸ்
(புத்தளத்தில தமிழ் படிப்பிச்சாங்க பேர் மறந்து போச்சு)

குணசீலன் சேர்
(வாழ்கை தேர்ச்சி)

சிவனேசன் சேர்
(பரந்தன் பள்ளிகூட பிரிசிப்பல்)

யோகேஸ்வரன் சேர்
(சயன்ஸ் படிப்பிச்சார் – கிபிர் எண்டா அவரை போல ஒருத்தரும் பயபிட மாட்டாங்கள்)

சிறிதரன்
(எல்லாருக்கும் தெரியும் இப்ப எம்.பி சிறிதரன ஆனா கிளிநொச்சி மகாவிஹ்தியாலய பெடியளுக்கு தான் பிரிகேடியர் எண்ட பட்ட பெயரோட அதிபரா தெரியும்)

இப்பிடி எவ்வளவு பேர் ?

நண்பர்கள்

ஜீவனேசன் , யூட் , விமல், கலையரசன் , டக்சன் , நிருபன் , அரவிந்தன் , லக்சன் ,தனுசன் , ,ஜெனா , ஷர்மி ,ஜெருஷா சத்தியன் ,பிரவீன் மிதுனா , சுஜிபா , அருண் , யசோ , பார்த்தீபன் ,பர்சான் , சப்ரான் ,சசிராஜ் , பாணுசன் , கோகிலன் , டிலுக்சன் அல்லது டிகுட்டி இப்பிடி ஞாபப்படுத்தி தொடங்கினா இன்னும் நாலஞ்சு பேப்பர் டைப்பண்ணணும்.

ஏனோ தெரியேல்ல நான் பள்ளிகூடம் முடிக்கும் வரைக்கும் நட்புல அவ்வளவு விசுவாசமா இருந்ததே இல்லை , இடம்பெய இடம்பெய நட்பு அறுந்து அறுந்து போக புதுசு புதுசா வந்து ஒட்டும். பள்ளிகூட நட்பில இண்டு வரைக்கும் நெருக்கமா இருக்கிறது , டி குட்டி மட்டும் தான்.

அடுத்து
அப்போது காதல் என்று கருதப்பட்ட வயது கோளாறுகள்
தர்ஷிகா , அபிராமி , தர்ஷிகா 2 , ப்ரியா ,ஷாலினிதமயந்தி, உஷாந்தினி

இப்பிடி.

இந்த பேயர்கள் சம்பந்த பட்ட எத்தனை கதைகள், சம்பவங்கள், குழப்படிகள் . ஒவ்வொரு பேரும் என்னை எங்கை எங்கயோ எல்லாம் கொண்டு போகுதடி அனு.
படிச்ச பள்ளிகூடம் எல்லாம் எனக்கு என்னதந்தது , நினைவுகள் ? கதைகள் ? இப்ப நினைச்சா நல்லா இருக்கு, ஆனா அந்த அந்த நேரத்தில எனக்கு இருந்த நிறைய கனவுகள இந்த ஜிப்ஷி (நாடோடி) தனம் அழிச்சுது.

01.என்னால பெஸ்ட் பெஞ் இஸ்டூடண்டா இருக்க முடியேல்ல.
(இப்ப நாங்க லாஸ்ட் பெஞ் இஸ்டூடண்ட் எண்டு கொலர தூக்கினாலும் படிக்கும் போது பெஸ்ட் பெஞ்ச் ஒரு ஹீரோதனம் தானே)

02.எனக்கு பிரிபெக்ட் ஆகோணும் எண்டு ஆசை ஆனா ஒரு பள்ளி கூடத்தில குறஞ்சது ஐஞ்சு வருசம் படிச்சாதான் பிரிபெக்ட் ஆகலாம் . சோ எனக்கு கிடைக்கவே இல்ல.(இப்ப சிரிப்பா இருக்கு)

03.எனக்கு சயன்ஸ் மிகவும் பிடிக்கும் . ஏஎல்ல சயன்ஸ்தான் படிக்க நினைச்சன் ஆறுமாசம் படிச்சன் , அடுத்த பெயர்வு அதையும் திண்டிட்டுது.
(நல்லவேளை இப்பிடி ஒரு சோம்பேறி டொக்டர் சமூகத்துக்கு கிடைக்கல)

04.இப்ப இருக்கிற கிரி ,ஆதி , கமல் , டி குட்டி போல எனக்கு பள்ளிகூட நட்பில நெருக்கமா இருந்த யாரும் கடைசிவரை அப்பிடி இருந்ததே இல்லை டி குட்டி மட்டும் விதி விலக்கு.

இப்ப யோசிச்சா சிரிப்புதான் வரும் இரண்டு வருடத்துக்கு முதல் கிரிய சந்திக்காம இருந்திருந்தா இதெல்லாம் இப்பவும் கவலையா தான் இருக்கும் , இப்ப சிரிப்பா எல்லோ இருக்கு.

அனுக்குட்டி நான் எதை எழுதுவன் மேல சொன்ன சொல்லாத ஒவ்வொரு பெயருக்கும் எத்தினை கதையள் இருக்கு , எத்தின உப கதையள் இருக்கு , கிரிஷாந்த ,ஆதிய உருவாக்கின போல என்னை பள்ளிகூடங்கள் உருவாக்கி இருக்கா ? நினைவு படுத்தவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் பெயரற்ற பெயர்களும் கதைகளும் ஆள் மனசில சிக்கி சிக்கி உருள்றத நான் உணருறன். எப்ப என்னால இதுகள இரை மீட்க முடியும் ?
இது வரமா ?

ஒரு வேளை சாபம் ?

அல்லது இரண்டும்.
ஏன் சிரிக்கிற அனுகுட்டி ? , உன் முட்டைகண்ணை உருட்டுறத நிப்பாட்டு
எனக்கு காய்ச்சல் இன்னும் கூடுது.
இந்த கடிதத்தை கொண்டு போய் கிரிஷாந்திட்ட குடு.


பிரியமுள்ள
யதார்த்தன்