சனி, 16 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 7:39 PM




நீ உன்னுடைய ஆன்மாவை
கண்டறிந்தாய்.

உன்னுடைய ஆன்மா
பாசறையில் இருந்து வெளிப்பட்டது 
அது தன்னை ஒரு யன்னலாக மாற்றிக்கொண்டது
சுதந்திரமான காற்று
பறவைகளை அழைத்துக்கொண்டு உன் ஆன்மாவிற்குள் நுழைந்து பறந்தது
காற்றின் ஆன்மா பறவைகளாய் இருந்தது

கடல்
மீன்களிடம்
தனதான்மாவை ஒப்படைத்திருந்தது
மீன்கள் யன்னலை அலைகளின் மேல் போட்டன
கடல்மேலது
உவர்த்து லேசாய் பாசி பிடிக்க ;
பசியாறின மீன்கள்

யன்னல்
நிலத்தினை பற்றி கனவுடன் இருந்தது
நிலம் கடலின் புண்ணாக
புடைத்து நின்றது
இரத்தமும் சீழும்
கொடுங்கண்ணீரும்
மற்றும் அவர்களும்
நிலத்தின் மீதிருந்தனர்

ஆயினும்
யன்னலிற்கு
நிலம் ஒரு கனவாயிருந்தது

யன்னலில்
நுழைந்து பறந்த பறவைகள்
நிலத்தின்
கொடுங்கனவுகளை
மட்டும் எடுத்து வந்தன


நிலத்தில்
ஆன்மா ஒரு சொல்லாக
மட்டும் இருந்தது
பறவைகள் உயிரற்ற சொல்லை
கொத்திவர தயங்கின.

யன்னலில் எட்டிப்பார்த்த மீன்கள்
நிலத்தில் ஆன்மா இல்லையென்றன


மீன்கள்
அலையுடன் போய்
நிலத்தை
கவ்வி கடலிற்கு இழுத்தன
நிலம் சலனமற்று கிடந்தது


யன்னல் நிலத்தை
இன்னும் நம்பியது

யன்னல்
பறவைகளிடம்
அப்பிள் விதைகளை
கொடுத்து விட்டது.

யன்னல் கடல் பாம்புகளை
தரைக்கு அனுப்பியது

யன்னல் நிலத்தின் ஆன்மாவிற்கு காத்திருந்தது.

-யதார்த்தன் -



0 கருத்துகள்:

கருத்துரையிடுக