ஞாயிறு, 4 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 4:13 AM



அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமாகவும்  இருக்கிறாள் . இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டமையால் மனுஷி என்று அழைக்கப்படுவாள் என்றான்
                                                 -ஆதியாகமம் 2 : 23

அவளை அன்று தற்செயலாகத்தான் கண்டேன், வெள்ளை உடையில்  அந்த மழைநாளின் மாலைப்பொழுதில் எங்கோ போய்க்கொண்டிருந்தாள். சந்தடி இல்லாமல் அவளை பின் தொடர எனக்கு வாய்ப்புகள் அப்போது அதிகம் இருந்தன.

மழைதொடங்கி ஒரு மாதமாகிவிட்டது  . அன்றைய மழை அப்போதுதான்  ஓய்ந்திருந்தது. மேகங்கள் விலகாத வானில்  ஓரிரண்டு பறவைக்கூட்டங்கள் கடந்து சென்றுகொண்டிருந்தன. கரிய நிறப்பறவைகள் தெளிவாய் தெரிந்தன.பெரும்பாலும் அவை நீர்க்காகங்களாக இருக்க வேண்டும்   அல்லது நான் அப்பிடி நினைத்துக்கொள்கிறேன்.வறண்டு கிடந்த தரவைகளெல்லாம் நிரம்பியிருக்கும் எனவே நீர்க்காகங்கள் அதிகம் பறந்துசெல்கின்றன போலும் .எங்கேயோ எதையோ தொலைத்து விட்டு தேடும் மெல்லிய காற்று  அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. செங்கிரவல் பாதை மழையிலூறி ஈரத்தில் பூத்திருந்தது. கால் வைக்க மெதுவாய் சிதைந்து நிலம். ஈரம் நீராய் தெரியுமளவிற்கு அன்று மழை இறங்கியிருந்தது.

டிசெம்பர் 2012

“எனக்கு மழை பிடிக்கும்டா ”
“எனக்கும் பிடிக்கும்”
“ஒரு நாள் நனைவமா ?”
“ம்ம் ஓகே”
“எனக்கு ஐஸ்கிறீம் வாங்கி தருவியா ?”
“ஐஸ்கிறீம் ? என்னடி தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி ?”
“போடா பேய் . நான் போறன்  ”
“சரி சரி வாங்கி தாறன்”
“எவ்ளோ ?”
“எவ்ளோ வேணும்”
“இவ்ளோ கை நிறைய ”



 குளிர்ந்து கிடந்த பச்சை பற்றைக்காட்டுக்கு நடுவேயோடுமந்த செங்கிரவல் பாதை எதிரே நடந்து செல்லுமவளின் ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்தியது. பெரும்பாலும் அடிக்கடி பார்த்தவொன்று , அஹ் .. ஞாபகித்து விட்டேன். அடிக்கடி பார்க்கும் ஒன்று தான். எப்போதாவது அழும்போது மெதுவாய் மெல் விரல்களென் நெஞ்சு ரொமத்தை வருட அவள் சாய்ந்து கொள்வாள் , தன்னிச்சையாய் என் உதடுகள் இறங்கியவள் நேற்றியின் முடிவில் அல்லது  உச்சந்தலையில்  முத்தமிடும் போது நாசி அவள் கேசத்தின் நெடியை நறுமணமாய் உணரும். கண்கள் அவள் வகிட்டில் நிலைக்கும்.  ஆமாம் , அந்த செங்கிரவல் பாதை அவளுடைய கேசத்தை பிரித்தோடும் நெற்றி வகிடை போலத்தான் ஒடியது.

ஏப்ரல் 2013

“ஏண்டா எப்பவும் உச்சில கொஞ்சுறனி ?”
“ குழந்தையின்ர உச்சில கொஞ்சி இருக்கிறியா எப்பவாவது ?”
“ஓம் ஏன் ?”
“அதில் ஒரு துடிப்பு இருக்கும் கண்டிருக்கிறியா ?”
“ஓ அதில தொடக்கூடாதுன்னு சொல்லுவினம்”
“எனக்கு அதில முத்தம் குடுக்க பிடிக்கும் ”
“அதுக்கு என்ர உச்சந்தலையிலும் துடிக்குதோ ?”
”ம்ம் நீ குழந்தை தானே ”
“போடா”


ஈர கிரவலில் புதைந்து புதைந்து நடக்கும் அவளின் வெற்றுபாதங்கள்  விட்டுச்சென்ற சுவடுகளை பின் பற்றினேன். அவளின் மென் காலின் நகர்வுச்சந்தத்தை என் காலுக்குள் திணிக்க பார்த்தேன் . அதே பாதச்சுவடுகளை என் செருப்பணிந்த  கொடுங்காலால் அதன் மீது வைத்து வைத்து நடந்தேன். அவளின் சுவட்டை மிதித்து நடக்கிறேன் என்றொரு பரவசம் பாதங்களில் ஆரம்பித்து இதயம் வரை மேலெழுந்து வந்து காணாமல் போனது.
 பத்தோ பன்னிரண்டோ அடிகளுக்கு பிறகுதான் மனத்திலொன்று உதைத்தது. செங்கிரவல் நிலத்தில் வரையப்படும் அவள் பாதம் நிகழ்த்தும்  ஓவியங்களை சிதைத்தபடி நடக்கிறேன். திரும்ப்பி பார்த்தேன் எவ்வளவு சித்திர தடங்கள் சிதைந்து போய்விட்டன. என் பாவம் , ஒவ்வொரு தடத்தின் குழியிலும் நீரூறி நின்றது. நிலமழுதிருக்கும். இனியும் அவள் பாத ஓவியங்களை சிதைத்தபடி நடந்தால் மேற்படி செங்கிரவலென்னை சபிக்கும். விலகினேன்.

யூன் 2013

”உனர கால தாடி ? “
“ஏண்டா  போ தரமாட்டன்”
“ஏன் ?”
“நீ ஆம்பிளை பெடியனெல்லோ “
“இப்ப தர போறியா இல்லையா ?”
“டேய் நீ படம் பாத்து கெட்டு போன”
“நான் என்ன பம்பரமே விட்டனான் ?”
“சீ நாய்”
”தாடி”
“ம்ம் என்ன கொலிசு போட போறியோ ?”
“இல்ல எனக்கு கொலிசு பிடிக்காது”
“ஏன் ?”
“பிடிக்காது”
“அதுதான் ஏண்டா ?”
“எனக்கு குடை மரக்கொப்புகள்ல உரசுற சத்தம் , கொலிசு சத்தம் , கிபிர் சத்தம்  மூண்டும் பிடிக்காது. கேக்கும் போது படபடப்பா  பதட்டமா ஆகிடுவன்”
“ம்ம் சரி நான் கொலிசு போடமாட்டன்”
“இல்ல போடு பரவாயில்ல”
“இல்ல போடமாட்டன்”


நிமிர்ந்து பார்த்தேன். வேகமாய் தான் போகிறாள்,  கணுக்கால் வரை இறங்கி நின்ற வெள்ளை சல்வாரின் மீது ஒரு துளி கிரவலும் தெறிக்கவில்லை. என் ஜீன்ஸின் பின் புறம் ஏறக்குறைய சிவப்பாகி விட்டது. எனக்கு அது ஒரு பொருட்டாய் தெரியவில்லை. அவளை தொடர்ந்து செல்கிறேன் என்ற பரவசம் , அந்த நிறைந்த வயிற்றுடன் என் தலைக்கு மேலே பறந்து கடக்கும் கூடுதிரும்பும் பறவைகளின் குதூகலத்தை ஒத்திருந்தது.
மெல்ல மெல்ல அவள் வேகம் அதிகப்பட்டது.  அவளுக்காக  மட்டும் தோன்றிய பாதை போல அவளை அது தாங்கிச்சென்றது.   கொஞ்சம் வேகம் கூட்டி அவளை நெருங்கினேன். நெருப்பினை நெருங்கியும் நெருங்காமலும் குளிர்காயும் ஒரு குளிர்காலத்து கிழவன் எனக்கு அப்போது எங்கிருந்தோ ஞாபகத்தில் வந்தான்.
வானம் இன்னும் கனதியாய் மேகங்களை உற்பத்தி செய்வது தெரிந்த்து. மெல்ல இன்னும் கொஞ்ச குளிர் அதிகரித்தது. தூரத்தில் ஒரு மேகத்தின் பின்னால் சிறுமின்னல் இடியின்றி எட்டிபார்ப்பதை நான் கண்டேன். அவளுக் கண்டிருக்க வேண்டும்.  பாதங்கள் அசையும் வேகத்தை சற்றே இன்னும் அதிகம் செய்தன.  பற்றை காடுகள் கடந்து கிரவல் பாதையின்  இரு மருங்கிலும் எழுந்து யாரை யார் தழுவுவது அல்லது முத்தமிடுவது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் கொன்றை மரங்களை கடந்து சென்றாள்.
 கூதல் லேசாய் வீச கொன்றைகளில் இருந்து சொரியும்  சிலுநீரின்  துமிகளையும் துளிகளையும் புறக்கணிக்க நினைந்தவளாய் ஷோலை எடுத்து  முக்காடிட்டாள்.


சனவரி 2014

” டேய் ஏண்டா மரத்த உலுப்புற ?”
“சிலு நீர் தெறிக்க நல்லா இருக்கும்  ”
“வீசிங் வந்து  செத்து போவன் பறுவாயில்லையா”
“ஓ அத மறந்திட்ட  சொறி ராட்சசி”
“ம்ம்”
“இந்தா  துடச்சு விடுறன்”
“ஹலோ எங்களுக்கும் துடைக்க தெரியும் ”
“வெவ்வ்வெவ்வே”
“டேய் ”
“என்னம்மா  ?”
“நான் உனக்கு வேணுமா ?”
“ஏண்டி இப்பிடி ஒரு கேள்வி ?”
“இல்லடா நான் வருத்தகாறி ”
“அதுக்கென்ன ? எல்லாருக்கும் எதோ வருத்தம் இருக்கு ”
“இல்லட்டா வீசிங் இருந்தா கற்ப பை வரைக்கும் பாதிக்குமாம்”
“லூசா நீ எவ்ளோ பேருக்கு இருக்கு”
“போடா  அப்பிடி ஏதும்னா  நான் உனக்கு வேணாம்”
“லூசு போல பேசாத சரியா  , இதெல்லாம் ஒரு பிரச்சினையா ?”
“இல்லடா நான் வேணாம்  உனக்கு”
”சொன்னா கேளுடி “
“இல்ல வேணாம்”
“அப்ப நான் உனக்கு வேணாம் அப்பிடிதானே ? ஏன் பிடிக்கேலயா ?”
“நான் எங்க அப்பிடி சொன்னான்  ? நான் தான் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவள் ”
“இஞ்சபார்  கடைசிவரைக்கும் நீதான் எனக்கு அத ஆரும் மாத்தேலா ”
“இல்லடா வேணாம் நான் உனக்கு”
“……..”
“விம்மாத எருமை , கடைசில என்னை கை நீட்ட வச்சிட்டல்ல , பிசாசு இனி இப்பிடி ஏதும் கதை நானே கொல்லுவன் உன்னை”
“ம்ம் ”
“விம்மாதையடி”
“ம்ம்ம்”
“நோகுதா  ?”
“அடிச்சு போட்டு நோகுதா எண்டு கேக்கிறியா ?”
“இப்பிடிகதைச்சா  அடிக்காம ?”
“ம்ம்”
“ஏய் பிளீஸ் அழாதம்மா”
“போடா”
“பிளீஸ் சொறிடா ”
“ம்ம் போ”
“இனி சத்தியமா அடிக்க மாட்டன் , பிளீஸ் உன்மேல சத்தியம்”
“இல்ல அடி , நான் இனி இப்பிடிகதைச்சா அடி , எனக்கு பிடிச்சிருக்கு ”
“இல்ல அடிக்க மாட்டன்”
“எனக்கு பிடிச்சிருக்குடா அடிடா”
”மாட்டன்”
“அப்ப கோவம் போ”

 
  மேலும் நடந்தாள்  ,  என் கால்கள் பரவசமாக தொடர்ந்தன .அப்போதுதான் ஷோலுக்கு வெளியே முதுகைக்கடந்து தொங்கும் அந்த மென் சுருள் முடிகளிலும் லேசாய் ஈரம் சொட்டுவதை கண்டேன். மழைநாளிலும் முழுகியிருக்கிறாள். என்னையறியாமல் கைகள் ஏதையொ ஞாபகத்து எண்ணின, பின் மெல்ல என் உதடுகள் புன்னகைத்துக்கொண்டன.

சனவரி 2014

”சாப்பிட்டியா ? ”
“ம்ம் “

“என்ன செய்ற ?”
“ம்ம் இருக்கிறன் சொல்லு ?”
“கோவமா ஏதும் ?”
“இல்லைடா தலையிடிக்குது ”
“முழுகின்னியா ?”
“ரொம்ப வலியா ?”
“டெய்ய்ய்”
“என்ன ?”
“உனக்கெப்பிடி ?”

“கொஞ்ச நேரம் தூங்கி எழும்பு சரியாகிடும் . Miss  you ma ”


அப்போது  அவள் பாதையை விட்டு இறங்கி அந்த பச்சை புல்வெளியில் தனியே நிற்கும் தேவாலயத்தின் துருவேறிய பழைய கேற்றை  நகர்த்திக்கொண்டு உள் நுழைந்தாள் . அந்த ஆங்கிலேயர்கால  தேவாலயத்து வளவினுள்  அவள் நுழையவும் வானத்தில் பெரு மின்னலொன்று வெட்டி இடியிடித்தது. அத்தோடு ஒரு நீர்க்காக கூட்டமொன்று வேகமாய் கடந்து தெற்கே மறைந்தது.

மார்ச் 2014

“உனக்கு என்ன பறவை பிடிக்கும் ?”
“நீர்காகம்டி”
“நீர்காகமோ ?”
“ஓம்”
“ஏண்டா ?”
” முதல் முதல் நீ என்ன பாக்க வந்தது ஞாபகம் இருக்கா?”
“ஓம்”
“எவடத்த முதல் முதல் மீட் பண்ணினம் ?”
“யாழ்ப்பாணம் டவுனுக்க ”
“எவடத்த ?”
“அந்த லைரரிக்கு கிட்ட ”
“ம்ம்  அந்த புல்லுகுளத்துக்கு பக்கத்தில , ஞாபகம் இருக்கா ?”
“ஓம் நல்லா ஞாபகம் இருக்கடா”
“அண்டைக்கு உன்ர பஸ்வர 10 மணி ஆகிட்டு  , நான் எட்டு மணிக்கே அங்க வந்திட்டன் , ”
“ஓ”
“உன்ன காணுற சந்தோசத்தில அண்டைக்கு புல்லுகுளக்கரையில இருக்கிற பெஞ்சில இருந்து குளத்த பாத்து கொண்டிருந்தன் ”
“லூசு அந்த குளம் ஓரே சாக்கடையெல்லோ ? மணக்காதோ ?”
“இல்லடி மணக்காது ”
“ஓ”
“அண்டைக்கு குளத்தில நாலஞ்சு நீர்க்காகம் மீன் பிடிச்சு கொண்டு இருந்திச்சு”
“பார்ரா”
“அதுகளை பாத்துகொண்டு இருந்தன்”
“ம்ம்”
“அதுகள் மீன் பிடிக்க ஒருக்கா தண்ணிக்குள்ள மூழ்கினா கொஞ்ச நேரம் கழிச்சு தான் தண்ணிக்கு மேல வரும்”
“தெரியும் நானும் பாத்திருக்கன்”
“எனக்கு அப்ப அது ஆச்சரியமா இருந்திச்சு , அதுட மீன் பிடிக்கிற லாவகம் ஒரு புதிர் போல எனக்கு தெரிஞ்சுது. எந்த இடத்தில மூழ்கும் எந்த இடத்தில எழும்பும் எண்டு என்னால கெஸ் பண்ணவே முடியேல்ல , நான் உன்ர பஸ் எப்ப்ப வரும் எண்டு பாத்துக்கொண்டும் இருந்தன் .
“ம்ம்”
ஏதாவது லோங்  ரிப் பஸ் வந்தா ஓடி போய் பாப்பன் நீ இறங்கிறியோ எண்டு காணவே இல்ல, தீடிர் ரெண்டு சனத்துக்குள்ள நீ இறங்கிற மாதிரி இருக்கும் , ஆனா அது நீயா இருக்க மாட்ட, இப்பிடி நிறைய பஸ்ல நீ தோன்றி தோன்றி மறையிறது போல இருந்திச்சு .சலிச்சு போனன். அப்ப அந்த நீர்க்காகத்தின்ர புதிர் போலதான் நீ எனக்கு தெரிஞ்ச ”
“ஹா ஹா”
“உன்ர பஸ் வந்து நிண்டதும் நீ  இறங்கிறத கண்டிட்டன் . வேகமா எழும்பி ஓடி வந்தன்  , நீ ஒரு சிரிப்போட வந்த , இப்பவும் ஞாபகம் இருக்கு அந்த சிரிப்பு ”
“உன்ன  கூட்டி கொண்டு வெளிக்கிடேக்க ஒருக்கா குளத்தை பாத்தன் ஒரு நீர்க்காகமும் குளத்தில இல்ல. அண்டைக்கு பிறகு நீர் காகம் எண்டா பிடிக்கும்”
“…..”
“ஏய் லூசு ஏண்டி அழுற ”
“போடா எப்ப பாத்தாலும் என்னை அழ வச்சு கொண்டு இருக்கிற”

அவள் தேவலயத்தினுள் நுழையப்போகிறாள் , மழை அப்போது மெல்ல மெல்ல தூறத்தொடங்கியிருந்த்து. தேவாலயத்தின் வெளியே இருந்த சிலுவையில் தொங்கும் தேவகுமாரனின் சொரூபத்தை சுற்றிவந்தாள் , அவருடைய கால்களில் கையை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள் ,சிறிதுநேரம் அவரின் முள்முடியில் இரத்தம் கசிந்து இறங்கும் பரம சாந்தி படைத்த முகத்தை பார்த்தபடியிருந்தாள். மழை இன்னும் லேசாய்தான் இறங்கிக்கொண்டிருந்தது.

யூன் 2015

”எனக்கு ஜீசஸ் எண்டா உயிர்டா”
“தெரியும்டி”
“எல்லா நேரமும் என்னோட ரெண்டே பேர்தாண்டா இருக்கிறவ”
“ஆர் ?”
“யேசப்பாவும்  , கண்ணீரும் ”
“சீ அழாதயடி எதுக்கெடுத்தாலும்’
“எனக்கு அழப்பிடிக்கும்டா .”
“லூசு”’
“எனக்கு அவர்தான் அப்பா ”
“ஹா ஹா  சரி அப்ப இனி உன்னை  டோட்டர் ஒப் ஜீசஸ் எண்டு கூப்பிடுறன்”
“போடா”
“ஏய்”
“என்னடா ”
“உன் கூட இப்பவும் ரெண்டு பேர்தான் இருக்கிறாங்கள் எண்டு நினைக்கிறியா ?”
“இல்லடா இப்ப மூண்டு”
“மிஸ் யூடி

வெளியே இருந்த சொரூபத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தாள் நிமிர்ந்து பாத்தேன் மெதுமெதுவாய் அந்த கறுப்பு வானம் ஒழுகத்தொடங்கிருந்தது. தேவாலயத்தின் வாசலுக்கு நேர்மேலே  மூன்று குழந்தை தேவதைகளின் சிலைகள் மூன்று திசையைப்பார்த்தவாறு நின்றிருந்தன, ஒரு தேவகுழந்தையின் கையில் அம்பும் வில்லும் , இன்னொன்றின் கையில் முள்சுற்றப்பட இதயமொன்றும்  மற்றொன்றின் கையில் விரிக்கப்பட்ட புத்தகமும் இருந்தன. பச்சையாய் பாசி படிந்துபோய் மழை நீரில் நனைந்து ஈரமாய் மூன்று தெவகுழந்தைகளும் தம் இறக்கைகளை அசைத்து பறக்கும் அந்த சிலைக்காட்சியை பார்த்தபடிநின்றேன் மூன்றாவதாய் இருந்த குழந்தையின் கையில் இருந்த புத்தகம் லேசாய் உடைந்திருந்து உள்ளே வைகக்ப்பட்டிருந்த கம்பி கறள் ஏறி வெளித்தெரிந்தபடியிருந்தது.

மார்ச் 2015

“இதான் உன் முடிவா ?”
“ஓம் , பிளீஸ் என்ன ரோச்சர் பண்ணாத ”
“நான் உன்னை ரோச்சர் பண்ணலடி , பிளீஸ் புரிஞ்சுக்கோ என்னை”
“ஐயோ உனக்கு சொன்னா விளங்காதா ?  சீ நீ என்ன மனுசன் என்ன இப்பிடி கஸ்ர படுத்துற ?”
“நான் உன்னை சரியா புரிஞ்சுகலதாண்டி , உன்னிலையும் பிழை இருக்கு ”
“ஐயோ கதைச்சதையே திரும்ப திரும்ப ஒப்பிக்காதடா , என்ன நின்மதியா இருக்க விடு ”
“நான் பண்ணதெல்லாம் பிழைதாண்டி , நான் என்னை மாத்திகிறன்.”
“ஐயோ உன்னில ஒரு பிழையும் இல்ல என்னிலதான் பிழை , பிளீஸ் என்னை விடு இப்பிடியே”
“பீளீஸ்டி என்னை புரிஞ்சுக்கோ ”
“முதல்ல இந்த டி போடுறத நிப்பாட்டு எரிச்சலா கிடக்கு”
“கொஞ்சம் நான் சொல்லுறத கேள் பிளீஸ்”
“ஐயோ பிடிக்காம உன்னை சகிச்சுகிட்டு வாழசொல்லுறியா ?”
“அப்பிடி என்னடி சகிகேலாம இருக்கு என்னில ?”
“ஐயோ பிளீஸ்”
“நீ யேசுன்ர மகள் தானே என்னை மன்னிக்க ,மாட்டியா ?”
“சீ  ஏன் இப்பிடி சினிமா டயலோக் எல்லாம் கதைக்கிற , புத்தகம் படிச்சு படம் பாத்து நீ கற்பனைலையும் கவிதைலயும் வாழுற , இதான் நீ”
“அதுல என்ன தப்பு ?”
“ஐயோ சாமி என்னை விடு பிளீஸ் , என்னை இப்பிடி ரோச்சர் பண்ணின எண்டா நான் செத்து போவன்”
“இல்ல நீ சாக வேண்டாம் நான் போறன்”
பீளீஸ் என்னை இப்பிடியே விடு
”நான் கற்பனைல  வாழல ஒரு நாள் புரிஞ்சுப்ப , உனக்கு அன்பு தெவிட்டி போச்சு ”
“பிளீஸ் பேசாத என்னோட , எனகு இதெல்லாம் பிடிக்கேல ”
”ம்”

நான் தேவகுழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் உள்ளே போய்விட்டாள். கையில் ஒரு மெழுகுதிரியை எடுத்து ஏற்றுவது தெரிந்தது. பின் மெல்ல மண்டியிட்டு பிரார்த்தனையை ஆரம்பித்தாள்.
அவள் பிரார்தனை செய்யும் அழகை பார்க்க வேண்டும் போல இருந்தது. அன்றோருநாள் , நீ பிரார்த்தனை செய்யும் போது எதிரில் நின்று நான் பார்க்க வேண்டும் என்று அவளிடம் கூறியது ஞாபகம் வந்தது கண்கள் கலங்க அவள்   தேவகுமாரனை பார்த்து  , முகம் கெஞ்ச கை விதிர் விதிர்க்க  கொழுத்தப்பட்ட மெழுகின் ஒளி அவள் முகத்தில் படிய , அவள் பெருந்தந்தையின்  கருணைமுகம் அவளுக்கும் தொற்றிக்கொள்ளும் , அந்த கணத்தில் அவள் பிரார்த்தனையை எதிரிலிருந்து தரிசிக்க வேண்டும் என்று மனச்சுவர்களை ஆசை மிருகம் கொடு நகத்தால் பிறாண்டிக்கொண்டிந்தது.
எனினும்
அகால மரணமடைந்த என் சபிக்கப்பட்ட ஆத்மா புனிதம் மிக்க தந்தையும் .மகளும் பேசிக்கொள்ளும் அந்த தூய சன்னிதானத்திற்குள் எப்படி நுழைவது ?
மழை வலுக்க நனைந்து கரைந்து  ,நீராகி , தேவாலய வளவை விட்டு வெளியே ஓடத்தொடங்கியது ஆத்ம வெள்ளம்.

-யதார்த்தன்

08 ஆகஸ்ட் 2015 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக