திங்கள், 25 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 2:26 AM







வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளின்
 மீது அச்சமாயிருங்கள்
 –குர் ஆன்


இந்த உலகத்தில் யாரெல்லாம் மகத்தான இலக்கியங்களை ஆக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள் , அவர்களில் பெரும்பாலானோர்  அன்பின் , உண்மையின் பக்கத்தில் நின்ற மனிதர்களே,
போன நூற்றாண்டில் எழுதப்பட்ட கெட்ட விடயங்களை சொல்கின்ற , ஒரு இலக்கியத்தை கேட்டால் உங்களால் சட்டென்று சொல்லி விடமுடியுமா ? ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா ? கால நீரோட்டத்தை நன்கு கவனியுங்கள் எல்லா காலங்களிலும் போர்கள் இருந்தன , வன்முறைகள் நிகழ்ந்தன , ஆனால் வரலாற்றிலும் இலக்கியத்திலும் அன்பும் , அறமும் மட்டுமே மகத்தானவையாக நிலைத்தன , கொண்டாடப்பட்டன . அறமுள்ளே  இல்லாமல் , தெளிவு இல்லாமல் இலக்கியம் என்றபெயரில் ஒன்றை நீங்கள் ஒரு லட்சம் பக்கத்தில் எழுதி குவித்தாலும் கால நீரோட்டம் அதனை டாய்லெட் பேப்பராக கூட பயன்படுத்தாது .
 போரை நீங்கள் எப்படி விளங்கிவைத்திருக்கின்றீர்கள் என்பது தனிப்பட்டது. ஆனால் ஒரு மனித சமூகத்தின் அகாலச்சாவுகளை , கிழிக்கப்பட்ட உடல்களை , சிதைவுற்ற மனங்களை , கண்ணீரை ,பார்க்கும்   போதும் கேட்கும் போதும் , உணரும் போதும் கண்ணீர் விட்டு அழக்கூடிய,  அநீதிக்கு எதிராக கோவம் கொள்ளக்கூடிய , தியாகங்களை , அர்ப்பணிப்பை உண்மையை மதிக்க கூடிய மனதுள்ள  மனுஷர்களை இலக்கியம் தனக்கு மிக நெருக்கமாக வைத்துக்கொள்ள பிரியப்படும்.
சமீபத்தில் இலங்கை தமிழ்இலக்கியச்சூழல்  போர்க்கால , மற்றும் பின் போர்க்கால (நான் போர் முடிந்து விட்டதாக கருதவில்லை அதன் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது , அதிகாரமும் இனத்துவேசமும் வேறு உடைகளை அடுத்த தாண்டவத்திற்காக மாற்றிக்கொண்டிருக்கின்றன என்றே கருதுகிறேன் எனவே பின் போர்க்காலம் என்று தற்போதுள்ள சூழலை அடையாளம் செய்கின்றேன் ) இதன் பிரகாரம் மேற்படி போரின் காலங்களை பற்றிய அரசியல் பொருளாதார , சமூக , பண்பாட்டு , மற்றும் மொழி முதலான சிக்கல்களை ஈழத்த்து இலக்கியப்பரப்பு பேச ஆரம்பித்த்திருக்கின்றது. இச்சூழல்களை பாடுபொருளாக்கி எழுதும் போது அவை இலக்கிய வடிவங்களாக வெளிவந்திருக்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.
  தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழம் பற்றி எழுதுபர்கள்  ஈழ நிலத்திலும்  புலம்பெயர்நிலங்களிலும் தமிழ்நாடு முதலான இடம்பெயர் சூழலிலும் இருந்து எழுதுகின்றார்கள் , இதில் புலம்பெயர்வாளர்கள்  ஈழநிலத்தை பற்றி எழுதும் விடயங்களை ஈழ இலக்கிய பரபிற்கே கொண்டுவரவேண்டிய தேவையிருக்கிறது, அவரவர் வாழும் நாடுகளின் பண்பாட்டுசூழலின் உறுத்துணர்வால் எழுதுவது  தமிழ் இலக்கிய சூழலுக்குள் அந்த நாட்டின்இலக்கியத்தின்  பெயரால் எடுத்தலே பொருந்தும்.
இந்த வகையில் நிலத்தில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற  போர்ச்சூழல் பற்றிய எழுத்துக்களில் இந்த காலம் எவற்றை அடுத்த தலைமுறைக்கான செய்திகளாகவிட்டுச்செல்லபோகின்றது என்பதை ஒட்டியே நான் இந்த பகுதியை எழுத நினைத்தேன்.
தற்பொழுது இந்திய தமிழிலக்கியச்சூழலோடு ஒப்பிடும் போது ஈழத்து இலக்கிய ஆக்கங்களும் இலக்கியச்செயற்பாடுகளும்  மிக முன்னேறி சென்றவண்ணமுள்ளன,  இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதிலும் , வாசிப்பிலும் , எழுத்துச்செயற்பாட்டிலும்  தமிழ்நாடு சிக்கல்தன்மைக்குள் நகர்ந்துள்ளது , வாசிப்பின்மையும் குழாயடி சண்டைகளும் , தனிபட்ட சந்தர்ப்பவாத அரசியலும் , விருதுப்போட்டிகளும் , இளைய சமுதாயத்தைன் நவீன பிரதியாக்கம் மீதான(சினிமா முதலானவை) பெரும் ஈர்ப்ப்பும் தமிழ்நாட்டு இலக்கியச்சூழலை உருக்குலைக்கத்தொடங்கி விட்டன.
 தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளர்களால் அடுத்த தலைமுறை இலக்கியம் என்பது எது என்பதனை தீர்க்கமாய் அடையாளம் செய்ய முடியவில்லை , ஏன் அவர்களின் பிரதியாக்கங்களும் இதுவரை அவர்கள் செய்துவந்த மொழியின் நரித்தன போலிமுகமும் உடைத்து போடப்பட்டு இருக்கின்றது. இந்த இடத்தில் தான்  ஈழத்தில் தற்போதய இலக்கிய சூழலை கவனமாக கையாள வேண்டிய தேவையை வலியுறுத்த முனைகின்றேன் , தமிழ்நாட்டின் நிலை ஈழத்து பரப்பிற்கு வரலாம் ஆனால் போரின் பின்னர் உணரப்படும் இலக்கிய மற்றும் இலக்கிய செயற்பாட்டுக்கான சூழலின் தேவை அதிகமானது , இந்த இடத்தில் ஈழத்து இலக்கியம் தன் பிரதியாக்கத்தை பொருத்தமானதாக செய்யாத பட்சத்தில் ஈழத்தமிழ்ச்சூழல் நிஜமாக தோற்றுப்போனதாகவும்  வஞ்சிக்கப்பட்டதாகவும் கருதப்படும்.
சமீபத்தில் எழுதப்பட்ட ஈழத்தின் போர்ச்சூழல்பற்றிய பிரதியாக்கங்கள் உண்மையும் நேர்மையும் சுவறிய பொருத்தான  கருத்து நிலை மொழிதல்முறையுடன்  வெளிவருகின்றன.
எல்லோருக்கும் அரசியல் இருக்கிறது தீர்மானமெடுக்கும் உரிமையிருக்கிறது பிரதியாக்கும் உரிமையிருக்கிறது , ஆனால் ஒரு இலக்கிய செயற்பாட்டாளர் அரசியல்வாதியல்ல , அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்வாதி எப்படி குட்டிக்கரணம் போடுகின்றானோ அப்படி இலக்கிய சூழலில் ஒரு இடத்தை கைப்பற்ற குட்டிக்கரணம் போடத்தேவையில்லை , சொந்த அரசியலை இலக்கியத்தில் திணிக்கதேவையில்லை , இலக்கியம் மக்களின் பக்கத்தில் நிற்கவேண்டும் , யேசுராசா சொன்னது போல் இலக்கியம் உண்மையின் பக்கம் நிற்கவேண்டும் அதன் படைப்பாளர் அதன் அருகிலேயே  இருக்கவேண்டும் .
ஈழத்து இலக்கியச்சூழலில் வெளிவந்த இலக்கியங்களில் இதுவரைக்கும் வந்த இலக்கியங்களில் நான் வாசித்தவற்றில் சாத்திரியின் ஆயுத எழுத்தையும், தமிழ்க்கவியின் ஊழிக்காலத்தையும் மோசமானது என்று பல இடங்களில் அடித்து கூறுகின்றேன். இப்படியான ஆக்கங்களை கண்டு நான் பயப்படுகின்றேன்.
நல்ல இலக்கியங்கள் என்று அடையாளம் செய்யும் பிரதிகளில்  புலி எதிப்புடையவர்கள் இருக்கிறார்கள் , ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள் , இரண்டின் பக்கமும் அற்று வெளியே வேறு நிலைப்படுகளில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்  ஆனால் அவர் தெளிவாக உணமையின் பக்கம் நிற்கின்றார் , அவர் தவறுகளின் மீது கேள்வி கெட்கின்றார் தியாகங்களை கொச்சை செய்யவில்லை , போராட்டம்  இயக்கங்களினதோ தலைவர்களினதோ இல்லை , அது மக்களினுடையது , ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பிள்ளைகளின் போராட்டம் இதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் , அவர்களிடம் அன்பிருக்கிறது , அறமிருக்கிறது  : குற்றவுணர்வு கூட இருக்கின்றது.

தலைமைகள் , அரசியல் , சந்தர்ப்பம் முதலானவற்றின் அடியாக ஏற்பட்ட  தவறுகளின் , துரோகங்களின் , பலிகளின் , வஞ்சனைகளின் , பாவங்களின் சிலுவைகள் தேசத்திற்காக எந்த உள் நோக்கம்மும் அற்று கனவுடன்  போய் மாண்ட ஆயிரக்கணக்கான போராளிகளினதும் , இன்னும் தடுப்பிலும் அல்லது வெளிவந்து செக்குரிட்டிகளாகவும் , மிதிவெடி கிண்டுபவர்களாகவும் , கூலித்தொழிளாகிகளாகவும் , ஊனமுற்றவர்களாகவும்  மாறிபோயிருக்கும் போராள்களின் மற்றும் மக்களின்  ஆன்மாவின் மேல் ஏற்றிவைக்கின்றன .

இங்கே சிங்கள மக்களை இனவாதிகள் என்று ஒரு கூடைக்குள்ளும் , தமிழர்களை ஒரு கூடைக்குள்ளும் , முஸ்லீம்களை ஒரு கூடைக்குள்ளும் , துக்கிப்போட்டு மக்களை பிரித்து அரசும் அதன் அதிகார கரமும் செய்யும் சுரண்டலுக்கு ஏதுவாக நாமும் மக்களிடையே வன்மத்தையும் குரோதததையும் வளர்க்கின்றோம். பலர் விளங்கி வைத்திருப்பதைப்போல  “சிங்களவன் –தமிழன் ” பிரச்சினை யாக இதனை சித்தரிக்கின்றோம். உண்மையில் நாம் போராட வேண்டியது சிங்கள சூழலையோ முஸ்லீம் சூழலையோ எதிர்த்து அல்ல அரசின் பிரித்தாளும் நரித்தனத்தை எதிர்த்தே.


தவறுகள் நிகழாத புரட்சிகள் கிடையாது போராட்டங்கள் கிடையாது , போராட்டம் எதையும் தராமல் போகவில்லை , அது தொடந்து போர் செய்ய நிறைய சந்தர்பங்களை வழங்கியுள்ளது , ஆயுத வன்முறையற்ற அதிகாரத்திற்கு எதிரான  போரை அது தொடங்கியுள்ளது , அன்பை , மனிதத்துவத்தை போராட்டம் விட்டுச்சென்றுள்ளது.  தவறுசெய்வதவர்களை எங்கே மன்னிப்பது எங்கே அவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்று நேர்மையும் , அறமும் உள்ள இலக்கிய மனத்திற்கு தெளிவாக தெரியும் .
சில இலக்கியங்கள்(என்று சொல்லப்படுபவை ) ,தங்கள் கடந்த காலங்களை சந்தர்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு , தம் தக்கன பிழைத்தலுக்காக இலக்கியங்கள் மூலம் புது நியாயங்களை கற்பிக்க முனைகின்றனர் சிலர், ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை மனதில் அறமும் தெளிவான பார்வையும் உள்ள  எந்தவாசகபிரக்ஞையும் பிரதிக்குள் ஊடுருவி ஓடி அவர்களினுடைய பச்சோந்தி உடல்களையும் நரி முகங்களையும்  கண்டுபிடித்துவிடும்

போரின் நேரடியான பதிப்புக்களால் இன்று உழல்கின்ற குழந்தைகளில் நானும் ஒருவன் , என்னிடமும் ஆயிரம் கதைகள் இருக்கின்றன ,அனால் என்னிடம் தெளிவில்லை ,கடந்தகாலம்  பற்றி பொருத்தமான வாசிப்பு எனக்கில்லை ,  உணர்ச்சிவசப்படும்  ஒருத்தன் நான் போர்பற்றிய எழுத்தில் சின்னச்சின்ன எழுத்து பரிசோதனைகள் மட்டும் மேற்கொண்டேன் , என்னால் உயிருள்ளதாக வற்றை பிரதியாக்க முடியவில்லை , ஆனால் என்னால் போர்பற்றிய நல்ல இலக்கியங்களை அடையாளம் காணமுடிகின்றது, புலி எதிர்ப்போ ஆதாரவோ என்பதெல்லாம் அங்கே இல்ல அங்கே அன்பு இருக்கிறது , கடந்த காலத்தின் நிகழ்காலத்தின் கண்ணீர் இருக்கிறது , அங்கே நான் மனிதர்களை காண்கின்றேன் செய்திகளை சொல்லும் மனிதர்கள் அவர்கள் , என்னை அழவைக்கின்றார்கள் , யோசிக்க வைக்கின்றார்கள் , உள்ளே கருணையும் அன்பும் அடைகின்றது , என்னால் அவற்றை மகத்தான இலக்கியங்காளாக அடையாளம் செய்யமுடிகின்றது , பிரதி செய்பவரை கொண்டாட தோன்றுகின்றது .
போரை அதன் உபகூறுகளை பாடுபொருளாக செய்ய நினைக்கும் அல்லது செய்யும் எல்லாரிடமும் சொல்லி கொள்ள நினைப்பது ஒன்றுதான்.
உண்மை நெஞ்சில் இல்லாதவிடத்து உங்களால் மொழித்தாடனத்தை கொண்டு மிகச்சிறந்த அமைப்புள்ள இலக்கியத்தை ஆக்க முடியும் ஆனால் உங்களால் அதற்கு உயிர் கொடுக்கமுடியாது. உங்களுடைய இலக்கியம் ஒரு பிணம் நல்ல வாசகன் அதனை இனம்காணும் போது  அதன் துர்நாற்றம் அப்பட்டமாக வெளிப்படும்.  காலம் உங்களை கேலிக்குள்ளாக்கும் .ஒரு வேளை எப்போதாவது நீங்கள் கண்டுபிடிக்கும்  உங்களுடைய மனசாட்சி உங்களை கொன்றுவிடும்.

ஆமேன்.

-யதார்த்தன்

(மேற்படி பிரதியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நானே பொறுப்பானவன்  இதுதொடர்பான நிலைப்பாடில் முன்வைக்கப்படும் எந்த காத்திரமான கருத்தையும்  பிரதி என் பெயரால் தாங்கும் . பிரதியில் தெரியும் நான் எனும் அகங்காரம் ஒழிக்கபட்ட வேண்டிய ஒன்றும் கூட.)


2 கருத்துகள்:

  1. ஆக யதார்த்தன் ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்டான்..வாழ்த்துக்கள் மச்சி

    பதிலளிநீக்கு
  2. ஆக யதார்த்தன் ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்டான்..வாழ்த்துக்கள் மச்சி

    பதிலளிநீக்கு