திரைப்படம் ஆற்றல் வாய்ந்த ஒரு கட்புலக்கலை . 1930 இல் வெளிவந்த "மகாகவி காளிதாஸ் " எனும் படைப்புடன் ஆரம்பமான தமிழ்த் திரைப்படக்கலை யானது தமிழ்க்கலைப்பாரம்பரியத்தில் பெரும் மாற்றங்களுடன் காத்திரமான இடத்தினை பிடித்துக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு ஊடகம் என்பதனைத்தாண்டி நம் சமுதாயத் தின் போக்கில் மாற்றங்களை சிருஸ்டிக்க தக்க ஆற்றலினையும் இக்கலை பெற்றிருப்பதை யும் யாரும் மறுப்பதற்கில்லை.பல நூற்றுக்கணக்கான தாயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் , ஒளிப்பதிவாளர்கள் ,இசையமைப்பளர்கள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள், நடிகர்கள் முதலானவர்களின் உழைப்பினை உறிஞ்சி திரைக்கலை விருட்சம் இன்று விஸ்வரூபம் பெற்றுள்ளது .
தமிழில் தலைசிறந்த திரைப்படங்கள் வெளிவந்த காலம் என்று ஒன்று உண்டு . பீம்சிங்,ஸ்ரீதர் , பாலச்சந்தர் , பாரதிராஜா ,பாலுமகேந்திரா , மகேந்திரன் , பாசில் என்று தலைசிறந்த இயக்குனர்களின் படைப்புக்கள் வெளிவந்த காலத்தில் தமிழ் திரைக்கலை உச்சமான தொரு இடத்தினைப்பெற்று இருந்தது. காதல் கதை தொடங்கி மண்வாசனை ,பெண்ணியம் , என்று அக்கால திரைப்படங்கள் நேர்த்தியானதும் உறுதியானதுமான கதை ,திரைக்கதை ,வசனம் ,இயக்கம் , ஒளிப்பதிவு ,இசையமைப்புடன் போற்றுதற்குரிய இடத்தினைப்பெற்றன.
ஆனால் இன்றைய நிலையில் தமிழ்த் திரைக்கலை தனக்குரிய தகுதியையையும் சிறப்பினையும் தக்கவைத்துள்ளதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமகாலத்தில் நவீன தொழிநுட்பங்கள் திரைக்கலைக்குள் பிரவேசித்து இருந்தாலும் கூட பின்வரும் விடயங்கள் தமிழ்த்திரைக்கலையின் தனித்துவத்தை யும் சிறப்பையும் கேடுத்துக் கொண்டு இருக்கின்றன.
1. கதை அம்சமே இல்லாத திரைக்கதை.
2. வெளிநாட்டார் படைப்புக்களினை படியெடுத்தல் [COPYING] .
3. காதைச்செவிடாக்கும் இசை / புரியாத வசனங்களுடன் பாடல்கள்.
4. தனிமனித துதி பாடுதலும் வன்முறையும்
5. பண்பாட்டினை விகாரமாக்கல்
என்று பல பிறழ்வுகளுடன் வெறும் வியாபார நோக்கத்துடன் இன்றைய இளைய சமுதாயத்தை குட்டிச்சுவராக்கும் வகையில் திரைப்படங்கள் வெளிவருகின்றன. இவற்றை சற்றுவிரிவாக நோக்கிகுதல் பயனுடையதாகும்.
சமீக காலமாக வெளிவரும் பெரும் பாலான தமிழ்த் திரைப்படங்களில் கதை அம்சத்தினை தேடிப்பிடிப்பதே பகீரத பிரயத்தன மாகிவிட்டது. பணம் இருந்தால் யாரும் படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு கதை என்று ஒன்று பெரிதாய் முக்கியம் இல்லாத அளவிற்கு படம் எடுக்கின்றர். ஐந்து பாடல்அதில் இரண்டு குத்து பாடல்கள் , நான்கு சண்டைக்காட்சி , இவைமட்டும் போதும் படம் ஒன்றிற்கு எனும் நிலைதான் இன்று . அதிலும் குறிப்பாக தாங்கள் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனர் கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த இயக்குனர்களே கதை அம்சம் இல்லாத படங்களினை இயக்குவது தான் பெரும் வருத்தத்தை தருகிறது
இக்கால தமிழ்திரைப் படங்கள் பற்றி அதிகமாக விமர்சிக்கப்படும் ஒரு விடயம் வெளிநாட்டர் திரைப்படங்களில் இருந்து கதை , காட்சிகளினை படி எடுக்கப்படு கின்றது [copying] என்பதாகும். அமெரிக்க , ஈரானிய, கிரேக்க திரைப்படங்களில் இருந்து உரிமையுள்ளவர்களின் அனுமதி இல்லாமல் கதைகள் , காட்சி நுணுக்கங்களை எடுத்து சிற்சில மாற்றங்களுடன் தமிழ் திரைப்படங்களில் புகுத்துகின்றனர் என்று , விடயம் அறிந்தவர்கள் ஆதாரங்களுடன் குற்றம் சுமத்துகின்றனர்..ஆனால் சர்வதேச திரைக்கலை ஓட்டத்தில் பரிச்சமில்லாத திரைப்பட இரசிகர்கள் படி எடுக்கப்பட்ட இவ்வாறான திரைப்படங்களை வியந்து பாராட்டி அவற்றை வியாபார அளவில் பெரும் வெற்றி பெறவும் செய்து விடுவது ஜீரணிக்க முடியாத கவலை. இத்தகைய இழிவான செயல் ஒட்டுமொத்த தமிழ் திரைக்கலையை கொச்சைப் படுத்தி ,அதன் தரத்தினை தாழ்தி விட்டுகிறது என்பதே உண்மை .
இவறுடன் திரைப்படங்களின் உயிரோட்டத்தை தீர்மானிக்கும் திரை இசையும் பல பிறழ்வுகளுடன் காணப்படுகிறது. குறிப்பாக மேலைத்தேச இசையை தமிழில் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் காதைசெவிடாக்கும் இசை அமைப்பாளர்களும் தமிழ் சினிமாவில் காணப்படுகின்றனர். இசைக்கலவை என்ற பெயரின் பழம் பெரும் திரை இசைப்பாடல்களினை சிதைத்து விடுவதும் , தமிழில் அருமையான கவிஞர்கள் இருந்தும் புரியாத வரிகளுடன் முகாரி ராகங்களில் நாக்கு முக்கா பாடல்கள் திரை இசையையும் கொச்சைப்படுத்தி விடுவதும் சமகாலத்தில் இயல்பாகி விட்டதொரு கொடுமை. அத்துடன் புகழ்மிகு திரை இசை அமைப்பாளர்களின் பின்னணி இசை பாலஸ்தீனம் , ஈரான் முதலிய நாட்டவர்களின் இசை துணுக்குகளினை படி எடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனினும் சமகாலதில் இளையராஜா , ஏ.ஆர்.ரகுமான் , இமான் , ஜிப்ரான் முதலிய சில தலைசிறந்த இசையமைப்பாளர்கள் தமிழிசை யின் தனித்துவம் கெடாமல் பாதுகாப்பது ஓரளவு நின்மதி அளிக்கிறது.
சமகால திரைப்படங்களில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய வேடிக்கைத்தனம் கதாநாயகன் எனும் தனிமனிதனின் துதி பாடுதல் ஆகும் .நம்முடைய வரலாற்றிலும் ,காவியங்களிலும் சித்தரிக்கப்படும் அசகாய சூரன் களாயும் தன்னிகரில்லா தலைவன்களாகவும் தமிழ் திரைப்படங்களில் தமிழ் கதாநாயகர்கள் நம்ப முடியாத அளவிற்கு சித்திரிக்கப்படுகின்றனர் . இத்தகைய கதாநாயக விம்பத்தால் பாதிக்கப்பட்ட நம் இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் , போதை, என்று இரத்த வெறியுடன் தாதாக்களாய் அலையும் அளவிற்கு போய்விட்டனர். அத்துடன் தங்கள் அபிமான கதாநாயக , கதாநாயகியின் படங்கள் வெளியாகும் போது அவர்களின் உருவங்களுக்கு பாலாபிசேகம் செய்தல், காவடி எடுத்தல் ஏன் அவர்களுக்கு கோயில் கட்டும் அளவிற்கு கூட கோமாளித்தனங்கள் செய்வது உணர்ச்சிமிகு கோபத்தை உண்டு பண்ணுகின்றது.
இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் நம் பண்பாடினை முழுதாய் சிதைத்து விடுகின்றன. குறிப்பாக பெண்களை இழிவான நிலையில் சித்திரித்தல், குடும்ப உறவுகள்,காதல் , நட்பு ,சமய நெறி முறைகள் என்பவற்றைக் கொச்சைப்படுத் தல் முதலான பண்பாட்டுக் கொலைகளினை தாராளமாகச் செய்கின்றன நம் பல தமிழ் த் திரைப்படங்கள்.
அத்துடன் சமீபத்திய திரைப்படங்களில் இரட்டை அர்த்தமும் ஆபாசங்களும் மிக்க நாகரீகமில்லாத வசனங்களும் , நகைச்சுவைக் காட்சிகளும் அதிகமாக இடம் பெறுகின்றமை பலரையும் முகம் சுழிக்கவைக்கின்றது.
.ஆயினும் தமிழில் ஓரு சில தலை சிறந்த இயக்குனர்கள் திரைக்கலையை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்ல பெருமுயற்சி செய்கின்றமை ஆறுதல் தருகின்றது.
இயக்குனர்களான பாலா, பாலாஜி சக்திவேல் , சேரன் ,வசந்தபாலன் ,வெற்றிமாறன், பாண்டிராஜ் , மிஷ்கின் ,பிரபு சாலமன் , திருமுருகன் , சற்குணம் , ராம் , ராதாமோகன் முதலான படைப்பாளிகளின்திரைப்படங்கள் சமூகதிற்கு பயன் தரக்க்கூடிய வகையில் அமைவதனைக்காணலாம். யதார்த மான கதையோட்டத்திற்கு முதன்மை கொடுத்து தமிழ்ப் பண்பாட்டினை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காட்சி படுத்துவதில் இவ் இளம் இயக்குனர்கள் காட்டுகின்ற ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் எதிர்காலத்தில் தமிழ்த்திரைக்கலை உயிர்ப்புடன் இயங்கும் என நம்பிக்கை தருகிறது அத்தடன் திரைகலை யினை முறையாய் பயின்று குறும் படங்கள் மூலம் புகழ்பெற்று பெரிய திரைக்குவரும் பாலாஜி {காதலில் சொதப்புவது எப்படி } , சரவணன் {எங்கேயும் எப்போதும் } , கார்த்திக் சுப்ராஜ் { பீட்சா },லக்ஷ்மி ராமகிருஸ்ணன் {ஆரோகணம் } முதலான அறிமுக இயக்குனர்களும் தம் நல்ல படைப்புக்களால் நம்பிக்கை தருகின்றனர் . அத்தோடு சாருநிவேதிதா , அ. ராமசாமி முதலிய தரமான விமர்சகர்களின் விமர்சனங்களும் திரைக்கலையை உன்னத நிலைக்கு இட்டுச்செல்ல உதவுகின்றமை பாராட்டத்தக்கது.
கன்னடம் , மலையாளம் முதலிய அயல் மொழிகளில் கலை ,இலக்கிய உண்மைகள், யதார்தம் என்பன சுவறிய நல்ல படைப்புக்கள் வெளிவருகின்றன.அனால் தமிழில் அத்தகைய படைப்புக்கள் ஒப்பீட்டு அளவில் சொற்பமாகவே வெளி வருகின் றமை வருத்தத்திற்கு உரியது
தமிழில் தரம் மிக்க இலக்கியங்கள் , நாவல்கள் ,சிறுகதைகள் , உள்ளன இவற்றில் இருந்து கதைக்கருக்களை எடுத்து திரைப்பட மாக்கும் முயற்சிகள் செய்யப்பட்டால் தமிழில் குறைபாடுகள் குறைவான படைப்புக்களை எதிர்பார்க்க இயலும். இது இன்றைய பொழுதுகளில் திரைக்கலையில் வேண்டப்படும் ஒன்றாகும். அத்துடன் வெளிநாட்டார் படைப்புக்களை நம் மொழியில் கொண்டுவர விரும்பினால் அதற்கான உரிமையை உரியமுறையில் பெற்று அதனைச்செய்வதே நாகரிகமான செயலாகும். அத்துடன் திரைப்பட இரசிகர்கள் இத்தகைய பிறழ்வான திரைப்படங்களை புறக்கணித்து நல்ல படைப்புகளுக்கு வரவேற்பு கொடுத்தால் படைப்பளிகளும் தங்கள் பொறுப்பு உணர்ந்து தங்கள் திரைப்படங்களை வெளிக்கொண்டு வருவர் என்பது ம் அறிவுறுத்த அவசியமானது.
எழுத்து ; கு .பிரதீப் [ யதார்தன் ]
யாழ்.பல்கலைக்கழகம் [M R T C]
supper
பதிலளிநீக்கு