மூன்று தர்ஷிகாக்களை மொழிபெயர்த்தல்
(முதல் தர்ஷிகா )
...............................................................................
பின்நவீனதுவத்தில் இருக்கிறோம் என்று சொல்லித்திரியும் எனக்கு.மூடநம்பிக்கைகள் பெரும்பாலும் இல்லையென்றே நம்புகிறேன்.எனினும் பெயர் பற்றிய மூடநம்பிக்கை எனக்கு உண்டு பழைய நினைவுகளில் என்னை கடுமையாக பாதித்தவை பெயர்கள் தான் என்று நம்புகிறேன்.அதிலும் குறிப்பாக
தர்ஷிகா
தர்ஷனம் என்றால் அலங்கரித்தல் என்றும் இதுவொரு சமஸ்கிரத சொல் என்றும் ஏ .எல் படிகும் போது தமிழ் சேரிடம் இன்போமேசன் பேற்றுக்கொண்டேன். மொத்தமாக 4 தர்ஷிகா அல்லது தர்ஷினி என்ற பெயர் பற்றிய நினைவுகளை ஹாரி பொட்டர் நாவலில் சேமித்து வைப்பது போல என் நினைவுகளில் சேமித்து வைத்திருக்கிறேன் .முதலாவது தர்ஷினி என்னுடைய ஆங்கில டீச்சர்.
எனக்கு தெரிஞ்சு என்சார்ந்தவர்களிடம் தர்ஷினி மிஸ் பற்றி புழுகிப்புழுகி சொல்லி இருக்கிறேன் மீண்டும் தர்ஷினி மிஸ் என்று ஆரம்பித்தால் கண்டிப்பாய் என்னை அவர்கள் கொன்று விடக்கூடும் எனினும் என் புதுதோழர்களுக்காக இந்த இணைப்பு , மிஸ் பற்றி நான் எழுதிய பத்தி ஒன்று.
http://maatram.org/?p=1863
முதல் தர்ஷிகா
ஹாரிபோட்டர் என்று முதல் பந்தியில் குறிப்பிட்டது எதெட்சையானதல்ல திட்டமிட்டது தான். முதல் தர்ஷிகாவை உள்ளே வரச்செய்த பெருமை சாட்சாத் ஹாரி பொட்டரையே சாரும்.
அபோது நான் கிளிநொச்சியில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.மந்திர தந்திர கதைகள் ,அலிபாபாவும் 40 திருடர்களும் ,டெக்ஸ்வில்லர் ,மாயாவி என்பவற்றோடு எனக்கு ஹாரி பொட்டர் மேல் நான் வெறியனாக இருந்த காலம் அது.ஹாரிபொட்டர் படம் போட்ட பென்சில் தொடக்கம் டீசேட்வரை சேகரித்து வைத்திருப்பேன்.
அப்பதான் நான் கிளிநொச்சி பள்ளிகூடத்தில் சேர்ந்திருந்தேன். முதல் முதல் அண்டைக்கு முயற்சியாண்மை பாடத்திற்கு செல்கின்றேன். நான் சி வகுப்பு எங்கட வகுப்பில் நான் மட்டும் தான் அந்த பாடம் எடுத்தேன். எனைய பிரிவுகளிலும் குறைவான பிள்ளையள் தான் முயற்சியாண்மை பாடம் எடுப்பதுண்டு.எனவே எல்லா வகுப்பில் இருந்தும் முயற்சியாண்மை எடுக்கும் மாணவர்கள் ஒரே வகுப்பில் ஒன்று கூடுவோம்.என் முதல் நாள் விஜயத்திலும் அதுதான் நடந்தது.
எல்லா பிள்ளையளும் புதுசா ஒரு பள்ளிகூடம் போறதெண்டா ஒரு மாதிரி அன்னியமா உணர்ந்தபடி முழித்து கொண்டிருப்பார்கள் .நான் கொஞ்சம் விதிவிலக்கு இது வரைக்கும் மொத்தமாக 13 பள்ளிகூடத்தில் படிக்கும் பாக்கியத்தை என் நாட்டின் அரசியல் சூழ்நிலை எனக்கு பெற்றுதந்திருக்கிறது.எனவே நான் கேசுவலாக வகுப்பை நோட்டமிட்டேன்.
அபோது ஒரு வெள்ளை கையில் இருந்த நோட்புக்கில் ஹாரிபொட்டரும் ஹார்மோயின் கிரேஞ்சரும் மந்திர குச்சியுடன் நின்று கொண்டிருந்தனர் . நிமிர்ந்து பார்த்தேன் முதல் தர்ஷிகா. எனக்கு அழகாக தெரிந்தாள்.
அதற்கு பிறகு அவளுடன் எபோதும் ஏதாவது வம்பிளுத்த படி இருந்தேன்
பிச்சுமணி என்று பட்டம் வைத்தேன்
வகுப்பில இருக்கிறதிலையே சுமாரான பையன் பெயரை அவளுக்கு
(பல்லைகடித்து கொண்டு) பட்டம் தெளித்தேன்
அந்த பொண்னு நல்லா படிக்கும் எனவே படித்தேன்(குறிப்பாக சயன்சு)
இப்படியாக ஒவ்வாத ஏற்றங்களே ஒன்றையொன்று கவருமென்ற தியரியை அப்ளே செய்து கொண்ருந்தேன்.
கிளிநொச்சியில் முதல் ஷெல் விழுந்தது
இடம்பெயர்ந்து தர்மபுரம் (முல்லைதீவு மாவட்டம்) போனோம் அங்கே இயங்கிய எங்கள் பள்ளிகூடத்திலேயெ மீண்டும் சேர்ந்தோம் .நான் பழைய தியரியை தொடர்ந்தும் அப்ளே செய்தேன்.
தர்மபுரத்திலும் ஷெல் வீழ்ந்தது.
எல்லாம் நொறுங்கிப்போனது,
நான் மறுபடியும் முதல் தர்ஷியை பற்றி கேள்விப்படும் போது மற்ற இரண்டு தர்ஷிகளையும் சந்தித்து இருந்தேன்.
(இந்த கதையை முடித்து விட்டு அவ் உபகதைகளை சொல்கிறேன்)
மூன்று முகாம்கள் மாற்றப்பட்டு செட்டிகுளம் இராமநாதன் முகாமில் எங்களை கொண்டுவந்து விட்டார்கள்.முள்ளிவாய்க்கால் முடிந்து எச்சம் எல்லாம் முகாம் வந்து சேர்ந்திருந்தார்கள்.நாங்கள் பேரவலத்தின் ஆரம்ப பகுதியில் வெளியேறிவிட்டதால் முகாமில் எங்களுக்கு சீனியாரிட்டி. அந்த முகாமில் மட்டும் 70000 சனம் இருந்தது, பக்கத்தில் ஆனந்தகுமாரசாமி முகாம்.ஒவ்வொரு நாளும் தண்ணீருக்கும் சாப்பாட்டிற்ற்கும் சண்டையிடும் நேரம் போக மீதி நேரங்களில் நான் உறவுகளையும் நண்பர்களையும் தேடி என்னுடைய முகாமிற்கும் பக்கத்தில் உள்ள ஆனந்த குமாரசுவாமி முகாமிற்கும் நதீசன் எனும் நண்பனுடன் போய் வருவேன்.
என் சகோதரி மன்னார் முகாமில் இருந்தாள் எனவே நாங்கள் அவளிடம் போவதற்கு விண்ணப்பித்து விட்டு காத்திருந்தோம்.அக்கா இருந்த முகாம் கொஞ்சம் வசதி கூடினது, வெளியில் சென்று வரலாம் , பள்ளிகூடம் பொகலாம் என்று அக்கா கடிதம் போட்டிருந்தாள் அதைவிட இரண்டு வருடமாக அவளைப்பார்க்கவில்லை எனவே அங்கே போவது எங்களுக்கு அவசியமாக இருந்தது,எனவே காத்திருந்தோம்
அன்று வழமைபோல் எங்கள் முகாமில் நடந்து வந்து கொண்டிருந்தேன் ,தகிக்கும் வெயிலில் காலில் செருப்பில்லை,தலைமுழுவதும் முகாமின் செங்கிரவல் மண்ணின் தூசி படிந்து என் தலையை இளம் சிவப்பு ஆக்கியிருந்தது.மெலிந்த தேகம் ,மிகக்கறுத்த உருவம் நான்.(என் புரபில் பிக்சர் அந்த கோலத்திற்கு ஆயிரம் வருடம் பிற்பட்டதாகும்)
தீடிரென பின்னால் இருந்து ஒரு உருவம் கட்டியணைத்தது
”டேய் ஹாரி பொட்டர் ”
(உண்மையில் அபோது தான் எனக்கு அந்த பெயர் பொருந்தியது ,ஒரு சின்ன மாற்றம் வடமொழி “ஹ”வை எடுத்துவிட்டு தமிழ் “க” போடவேண்டும்).திரும்பிப்பார்த்தேன்
“டேய் சாரு”
சாரு என் பள்ளி தோழர்களில் ஒருவன் ,எனக்கு ஹரி பொட்டர் டிவிடி கொண்டுவந்து தரும் ஜீவன்.
கையில் கட்டு போட்டிருந்தான் அவனுக்கு கைவிரல் ஒன்று இல்லை.
“என்ன நடந்ததடா ?”
”வரேக்க பீஸ் ஒண்டு அடிச்சிட்டு டா”
ஒருவிரல் போனதை அவன் சாதாரணமாகச்சொன்னான்.அங்கே அப்போது அப்படித்தான்.
”டேய் பிரவீன் ஷெல்விழுந்து செத்தது தெரியுமா ?”
“ம்ம் தெரியும் டா”
“சுஜீபா ?”
“ஓமடா உடையார் கட்டில் இருக்கேக்க கேள்விபட்டனான்.”
“நாங்கள் செத்த வீட்ட போனம்”
“நான் வரேல்லாம போச்சடா”
“டேய் தர்சிகா அழுத அழுகையடா ”
(சுஜீபா தர்ஷியின் ஆருயிர் தோழி .)
“டேய் ஒண்டும் சொல்லாதையடா பிளீஸ்”
“சரி விடு பிச்சுமணியை கண்டனியே ?”
“இல்லை… எங்கையடா ?” பரபரத்தேன்
“நேற்று கண்டனான். ஆனந்த குமார சாமி முகாம்”
எந்த பிளாக் ?
அதெல்லாம் கேக்கேலையடா
தண்ணி எடுக்கிற இடத்தில் கண்டன்
அவன் விடைபெற்றான்.
நான் நடந்தேன் இல்லை ஏறக்குறைய பறந்தேன். செருப்பற்ற என் கால்களில் பீட்டர்பானின் பறக்கும் சப்பாத்துகள் மாட்டியிருப்பது போல.
அன்றிலிருந்து ஆனந்த குமாரசுவாமி முகாம் முழுவதும் சுத்தினேன். தண்ணீர் எடுக்கும் இடங்களில் எல்லாம் நேரசூசியுடன் காத்திருந்து கவனித்தேன். ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்கு செல்வதற்கு கம்பிவேலி ஒன்றை தாண்ட வேண்டும் ஒரிரு முறை கால்களில் கீறி கிழித்தன கம்பிகள்.
(இதை டைப்பும் போது அவ்வடுக்களை தொட்டு பார்க்கிறேன்.)
ஒருமுறை இராணுவவீரன் ஒருவனிடம் சிக்கி கொண்டு அடிவாங்கவும் பார்த்தேன் எனினும் .செல்வதை நிறுத்தவில்லை
15 நாட்கள் கருந்துளைக்குள் நுழைந்தது போல் கரைந்து போயின எனினும் அவளை கண்டு பிடிக்கவேயில்லை நான்.எனினும் விக்கிரமன் மனம் முருங்கை மரமேறுவதை நிறுத்துவதயில்லை.
அன்று மதியம் ஆனந்தகுமாரசாமிக்கு போய் விட்டு மதிய சாப்பாட்டுற்கு என் கூடாரம் திரும்பினேன்.அம்மா முகத்தில் சூரியனை பூட்டிக்கொண்டு நிண்டா .
“தம்பி நாளைக்கு அக்காட்ட போகலாமாம்”
எனக்கு தூக்கி வாரிபோட்டது.
அம்மாவும் அப்பாவும் தம்பியும் வெளிநாட்டுநிறுவனங்கள் அள்ளிகொட்டிய நிவாரண சாமான் எல்லாவற்றையும் கட்ட தொடங்கினர், எனக்கு என்ன செயவதென்றே புரியவில்லை. கடைசியாய் ஒரு முறை தேடிவருவோம் என்று புறப்பட்டேன்.
வழமைபோல் இல்லாமல் ஓடி ஓடித்தேடினேன்.
ஆனந்த குமாரசுவாமியின் கிரவல் ரோடுகளில் குட்டியை தொலைத்த மிருகம் ஒன்று போல பைத்தியமாய் அலைந்தே
மேற்கே சூரியன் வீழ்ந்தது.
தோற்றுவிட்டேன்
காலையில் அம்மா உறவுஇணைத்தல் பஸ்ஸில் எல்லா பொருடளையும் ஏற்றி விட்டு எனக்கும் யன்னல் கரையில் சீட் ஒதுக்கி தந்தா.
இரவு முழுக்க அழுது என் கண் வீங்கியதை கூட அம்மா கவனிக்க வில்லை குடும்பமே அக்காவை பார்க்கும் சந்தோசத்தில் இருந்தது. வெளியே பார்தேன்.
எங்கள் முகாமின் நுழைவாயில் ஆனந்தகுமார சுவாமி முகாமின் வேலியோடு இருந்தது,அவ்வேலிக்கு பக்கத்தில் தற்காலிக பள்ளிகூடம் ஒன்று ம் சில கொட்டில்களும் இருந்தன .எங்கள் பேரூந்தின் இன்ஜின் உயிர்த்தது.
நான் முகாமையே வெறித்தபடி இருந்தேன்.விழிமடல்களை கிளித்தவாறு சுடுகண்ணீர் தரையில் கொட்டியது.
அபோது என் கண்வேறித்திருந்த கொட்டில் ஒன்றில் இருந்து தர்ஷிகா வெளிப்பட்டாள் கையில் கோப்பை ஒன்று .அவள் காலை உணவை முடித்து கொண்டு கைகளுவுவது தெரிந்தது.
பேரூந்து நகர என் பக்கத்தில் இருந்த யரோவின் குரல் ஒலித்தது
தம்பி முதல் எந்த முகாமுக்கு இந்த பஸ் போகும் ?
தெரியாது .
-யதார்த்தன்
(உபகதைகள் தொடரும்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக