திங்கள், 25 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 2:26 AM







வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளின்
 மீது அச்சமாயிருங்கள்
 –குர் ஆன்


இந்த உலகத்தில் யாரெல்லாம் மகத்தான இலக்கியங்களை ஆக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள் , அவர்களில் பெரும்பாலானோர்  அன்பின் , உண்மையின் பக்கத்தில் நின்ற மனிதர்களே,
போன நூற்றாண்டில் எழுதப்பட்ட கெட்ட விடயங்களை சொல்கின்ற , ஒரு இலக்கியத்தை கேட்டால் உங்களால் சட்டென்று சொல்லி விடமுடியுமா ? ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா ? கால நீரோட்டத்தை நன்கு கவனியுங்கள் எல்லா காலங்களிலும் போர்கள் இருந்தன , வன்முறைகள் நிகழ்ந்தன , ஆனால் வரலாற்றிலும் இலக்கியத்திலும் அன்பும் , அறமும் மட்டுமே மகத்தானவையாக நிலைத்தன , கொண்டாடப்பட்டன . அறமுள்ளே  இல்லாமல் , தெளிவு இல்லாமல் இலக்கியம் என்றபெயரில் ஒன்றை நீங்கள் ஒரு லட்சம் பக்கத்தில் எழுதி குவித்தாலும் கால நீரோட்டம் அதனை டாய்லெட் பேப்பராக கூட பயன்படுத்தாது .
 போரை நீங்கள் எப்படி விளங்கிவைத்திருக்கின்றீர்கள் என்பது தனிப்பட்டது. ஆனால் ஒரு மனித சமூகத்தின் அகாலச்சாவுகளை , கிழிக்கப்பட்ட உடல்களை , சிதைவுற்ற மனங்களை , கண்ணீரை ,பார்க்கும்   போதும் கேட்கும் போதும் , உணரும் போதும் கண்ணீர் விட்டு அழக்கூடிய,  அநீதிக்கு எதிராக கோவம் கொள்ளக்கூடிய , தியாகங்களை , அர்ப்பணிப்பை உண்மையை மதிக்க கூடிய மனதுள்ள  மனுஷர்களை இலக்கியம் தனக்கு மிக நெருக்கமாக வைத்துக்கொள்ள பிரியப்படும்.
சமீபத்தில் இலங்கை தமிழ்இலக்கியச்சூழல்  போர்க்கால , மற்றும் பின் போர்க்கால (நான் போர் முடிந்து விட்டதாக கருதவில்லை அதன் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது , அதிகாரமும் இனத்துவேசமும் வேறு உடைகளை அடுத்த தாண்டவத்திற்காக மாற்றிக்கொண்டிருக்கின்றன என்றே கருதுகிறேன் எனவே பின் போர்க்காலம் என்று தற்போதுள்ள சூழலை அடையாளம் செய்கின்றேன் ) இதன் பிரகாரம் மேற்படி போரின் காலங்களை பற்றிய அரசியல் பொருளாதார , சமூக , பண்பாட்டு , மற்றும் மொழி முதலான சிக்கல்களை ஈழத்த்து இலக்கியப்பரப்பு பேச ஆரம்பித்த்திருக்கின்றது. இச்சூழல்களை பாடுபொருளாக்கி எழுதும் போது அவை இலக்கிய வடிவங்களாக வெளிவந்திருக்கின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.
  தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழம் பற்றி எழுதுபர்கள்  ஈழ நிலத்திலும்  புலம்பெயர்நிலங்களிலும் தமிழ்நாடு முதலான இடம்பெயர் சூழலிலும் இருந்து எழுதுகின்றார்கள் , இதில் புலம்பெயர்வாளர்கள்  ஈழநிலத்தை பற்றி எழுதும் விடயங்களை ஈழ இலக்கிய பரபிற்கே கொண்டுவரவேண்டிய தேவையிருக்கிறது, அவரவர் வாழும் நாடுகளின் பண்பாட்டுசூழலின் உறுத்துணர்வால் எழுதுவது  தமிழ் இலக்கிய சூழலுக்குள் அந்த நாட்டின்இலக்கியத்தின்  பெயரால் எடுத்தலே பொருந்தும்.
இந்த வகையில் நிலத்தில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற  போர்ச்சூழல் பற்றிய எழுத்துக்களில் இந்த காலம் எவற்றை அடுத்த தலைமுறைக்கான செய்திகளாகவிட்டுச்செல்லபோகின்றது என்பதை ஒட்டியே நான் இந்த பகுதியை எழுத நினைத்தேன்.
தற்பொழுது இந்திய தமிழிலக்கியச்சூழலோடு ஒப்பிடும் போது ஈழத்து இலக்கிய ஆக்கங்களும் இலக்கியச்செயற்பாடுகளும்  மிக முன்னேறி சென்றவண்ணமுள்ளன,  இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதிலும் , வாசிப்பிலும் , எழுத்துச்செயற்பாட்டிலும்  தமிழ்நாடு சிக்கல்தன்மைக்குள் நகர்ந்துள்ளது , வாசிப்பின்மையும் குழாயடி சண்டைகளும் , தனிபட்ட சந்தர்ப்பவாத அரசியலும் , விருதுப்போட்டிகளும் , இளைய சமுதாயத்தைன் நவீன பிரதியாக்கம் மீதான(சினிமா முதலானவை) பெரும் ஈர்ப்ப்பும் தமிழ்நாட்டு இலக்கியச்சூழலை உருக்குலைக்கத்தொடங்கி விட்டன.
 தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளர்களால் அடுத்த தலைமுறை இலக்கியம் என்பது எது என்பதனை தீர்க்கமாய் அடையாளம் செய்ய முடியவில்லை , ஏன் அவர்களின் பிரதியாக்கங்களும் இதுவரை அவர்கள் செய்துவந்த மொழியின் நரித்தன போலிமுகமும் உடைத்து போடப்பட்டு இருக்கின்றது. இந்த இடத்தில் தான்  ஈழத்தில் தற்போதய இலக்கிய சூழலை கவனமாக கையாள வேண்டிய தேவையை வலியுறுத்த முனைகின்றேன் , தமிழ்நாட்டின் நிலை ஈழத்து பரப்பிற்கு வரலாம் ஆனால் போரின் பின்னர் உணரப்படும் இலக்கிய மற்றும் இலக்கிய செயற்பாட்டுக்கான சூழலின் தேவை அதிகமானது , இந்த இடத்தில் ஈழத்து இலக்கியம் தன் பிரதியாக்கத்தை பொருத்தமானதாக செய்யாத பட்சத்தில் ஈழத்தமிழ்ச்சூழல் நிஜமாக தோற்றுப்போனதாகவும்  வஞ்சிக்கப்பட்டதாகவும் கருதப்படும்.
சமீபத்தில் எழுதப்பட்ட ஈழத்தின் போர்ச்சூழல்பற்றிய பிரதியாக்கங்கள் உண்மையும் நேர்மையும் சுவறிய பொருத்தான  கருத்து நிலை மொழிதல்முறையுடன்  வெளிவருகின்றன.
எல்லோருக்கும் அரசியல் இருக்கிறது தீர்மானமெடுக்கும் உரிமையிருக்கிறது பிரதியாக்கும் உரிமையிருக்கிறது , ஆனால் ஒரு இலக்கிய செயற்பாட்டாளர் அரசியல்வாதியல்ல , அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்வாதி எப்படி குட்டிக்கரணம் போடுகின்றானோ அப்படி இலக்கிய சூழலில் ஒரு இடத்தை கைப்பற்ற குட்டிக்கரணம் போடத்தேவையில்லை , சொந்த அரசியலை இலக்கியத்தில் திணிக்கதேவையில்லை , இலக்கியம் மக்களின் பக்கத்தில் நிற்கவேண்டும் , யேசுராசா சொன்னது போல் இலக்கியம் உண்மையின் பக்கம் நிற்கவேண்டும் அதன் படைப்பாளர் அதன் அருகிலேயே  இருக்கவேண்டும் .
ஈழத்து இலக்கியச்சூழலில் வெளிவந்த இலக்கியங்களில் இதுவரைக்கும் வந்த இலக்கியங்களில் நான் வாசித்தவற்றில் சாத்திரியின் ஆயுத எழுத்தையும், தமிழ்க்கவியின் ஊழிக்காலத்தையும் மோசமானது என்று பல இடங்களில் அடித்து கூறுகின்றேன். இப்படியான ஆக்கங்களை கண்டு நான் பயப்படுகின்றேன்.
நல்ல இலக்கியங்கள் என்று அடையாளம் செய்யும் பிரதிகளில்  புலி எதிப்புடையவர்கள் இருக்கிறார்கள் , ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள் , இரண்டின் பக்கமும் அற்று வெளியே வேறு நிலைப்படுகளில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்  ஆனால் அவர் தெளிவாக உணமையின் பக்கம் நிற்கின்றார் , அவர் தவறுகளின் மீது கேள்வி கெட்கின்றார் தியாகங்களை கொச்சை செய்யவில்லை , போராட்டம்  இயக்கங்களினதோ தலைவர்களினதோ இல்லை , அது மக்களினுடையது , ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பிள்ளைகளின் போராட்டம் இதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் , அவர்களிடம் அன்பிருக்கிறது , அறமிருக்கிறது  : குற்றவுணர்வு கூட இருக்கின்றது.

தலைமைகள் , அரசியல் , சந்தர்ப்பம் முதலானவற்றின் அடியாக ஏற்பட்ட  தவறுகளின் , துரோகங்களின் , பலிகளின் , வஞ்சனைகளின் , பாவங்களின் சிலுவைகள் தேசத்திற்காக எந்த உள் நோக்கம்மும் அற்று கனவுடன்  போய் மாண்ட ஆயிரக்கணக்கான போராளிகளினதும் , இன்னும் தடுப்பிலும் அல்லது வெளிவந்து செக்குரிட்டிகளாகவும் , மிதிவெடி கிண்டுபவர்களாகவும் , கூலித்தொழிளாகிகளாகவும் , ஊனமுற்றவர்களாகவும்  மாறிபோயிருக்கும் போராள்களின் மற்றும் மக்களின்  ஆன்மாவின் மேல் ஏற்றிவைக்கின்றன .

இங்கே சிங்கள மக்களை இனவாதிகள் என்று ஒரு கூடைக்குள்ளும் , தமிழர்களை ஒரு கூடைக்குள்ளும் , முஸ்லீம்களை ஒரு கூடைக்குள்ளும் , துக்கிப்போட்டு மக்களை பிரித்து அரசும் அதன் அதிகார கரமும் செய்யும் சுரண்டலுக்கு ஏதுவாக நாமும் மக்களிடையே வன்மத்தையும் குரோதததையும் வளர்க்கின்றோம். பலர் விளங்கி வைத்திருப்பதைப்போல  “சிங்களவன் –தமிழன் ” பிரச்சினை யாக இதனை சித்தரிக்கின்றோம். உண்மையில் நாம் போராட வேண்டியது சிங்கள சூழலையோ முஸ்லீம் சூழலையோ எதிர்த்து அல்ல அரசின் பிரித்தாளும் நரித்தனத்தை எதிர்த்தே.


தவறுகள் நிகழாத புரட்சிகள் கிடையாது போராட்டங்கள் கிடையாது , போராட்டம் எதையும் தராமல் போகவில்லை , அது தொடந்து போர் செய்ய நிறைய சந்தர்பங்களை வழங்கியுள்ளது , ஆயுத வன்முறையற்ற அதிகாரத்திற்கு எதிரான  போரை அது தொடங்கியுள்ளது , அன்பை , மனிதத்துவத்தை போராட்டம் விட்டுச்சென்றுள்ளது.  தவறுசெய்வதவர்களை எங்கே மன்னிப்பது எங்கே அவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்று நேர்மையும் , அறமும் உள்ள இலக்கிய மனத்திற்கு தெளிவாக தெரியும் .
சில இலக்கியங்கள்(என்று சொல்லப்படுபவை ) ,தங்கள் கடந்த காலங்களை சந்தர்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு , தம் தக்கன பிழைத்தலுக்காக இலக்கியங்கள் மூலம் புது நியாயங்களை கற்பிக்க முனைகின்றனர் சிலர், ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை மனதில் அறமும் தெளிவான பார்வையும் உள்ள  எந்தவாசகபிரக்ஞையும் பிரதிக்குள் ஊடுருவி ஓடி அவர்களினுடைய பச்சோந்தி உடல்களையும் நரி முகங்களையும்  கண்டுபிடித்துவிடும்

போரின் நேரடியான பதிப்புக்களால் இன்று உழல்கின்ற குழந்தைகளில் நானும் ஒருவன் , என்னிடமும் ஆயிரம் கதைகள் இருக்கின்றன ,அனால் என்னிடம் தெளிவில்லை ,கடந்தகாலம்  பற்றி பொருத்தமான வாசிப்பு எனக்கில்லை ,  உணர்ச்சிவசப்படும்  ஒருத்தன் நான் போர்பற்றிய எழுத்தில் சின்னச்சின்ன எழுத்து பரிசோதனைகள் மட்டும் மேற்கொண்டேன் , என்னால் உயிருள்ளதாக வற்றை பிரதியாக்க முடியவில்லை , ஆனால் என்னால் போர்பற்றிய நல்ல இலக்கியங்களை அடையாளம் காணமுடிகின்றது, புலி எதிர்ப்போ ஆதாரவோ என்பதெல்லாம் அங்கே இல்ல அங்கே அன்பு இருக்கிறது , கடந்த காலத்தின் நிகழ்காலத்தின் கண்ணீர் இருக்கிறது , அங்கே நான் மனிதர்களை காண்கின்றேன் செய்திகளை சொல்லும் மனிதர்கள் அவர்கள் , என்னை அழவைக்கின்றார்கள் , யோசிக்க வைக்கின்றார்கள் , உள்ளே கருணையும் அன்பும் அடைகின்றது , என்னால் அவற்றை மகத்தான இலக்கியங்காளாக அடையாளம் செய்யமுடிகின்றது , பிரதி செய்பவரை கொண்டாட தோன்றுகின்றது .
போரை அதன் உபகூறுகளை பாடுபொருளாக செய்ய நினைக்கும் அல்லது செய்யும் எல்லாரிடமும் சொல்லி கொள்ள நினைப்பது ஒன்றுதான்.
உண்மை நெஞ்சில் இல்லாதவிடத்து உங்களால் மொழித்தாடனத்தை கொண்டு மிகச்சிறந்த அமைப்புள்ள இலக்கியத்தை ஆக்க முடியும் ஆனால் உங்களால் அதற்கு உயிர் கொடுக்கமுடியாது. உங்களுடைய இலக்கியம் ஒரு பிணம் நல்ல வாசகன் அதனை இனம்காணும் போது  அதன் துர்நாற்றம் அப்பட்டமாக வெளிப்படும்.  காலம் உங்களை கேலிக்குள்ளாக்கும் .ஒரு வேளை எப்போதாவது நீங்கள் கண்டுபிடிக்கும்  உங்களுடைய மனசாட்சி உங்களை கொன்றுவிடும்.

ஆமேன்.

-யதார்த்தன்

(மேற்படி பிரதியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நானே பொறுப்பானவன்  இதுதொடர்பான நிலைப்பாடில் முன்வைக்கப்படும் எந்த காத்திரமான கருத்தையும்  பிரதி என் பெயரால் தாங்கும் . பிரதியில் தெரியும் நான் எனும் அகங்காரம் ஒழிக்கபட்ட வேண்டிய ஒன்றும் கூட.)


சனி, 16 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 7:39 PM




நீ உன்னுடைய ஆன்மாவை
கண்டறிந்தாய்.

உன்னுடைய ஆன்மா
பாசறையில் இருந்து வெளிப்பட்டது 
அது தன்னை ஒரு யன்னலாக மாற்றிக்கொண்டது
சுதந்திரமான காற்று
பறவைகளை அழைத்துக்கொண்டு உன் ஆன்மாவிற்குள் நுழைந்து பறந்தது
காற்றின் ஆன்மா பறவைகளாய் இருந்தது

கடல்
மீன்களிடம்
தனதான்மாவை ஒப்படைத்திருந்தது
மீன்கள் யன்னலை அலைகளின் மேல் போட்டன
கடல்மேலது
உவர்த்து லேசாய் பாசி பிடிக்க ;
பசியாறின மீன்கள்

யன்னல்
நிலத்தினை பற்றி கனவுடன் இருந்தது
நிலம் கடலின் புண்ணாக
புடைத்து நின்றது
இரத்தமும் சீழும்
கொடுங்கண்ணீரும்
மற்றும் அவர்களும்
நிலத்தின் மீதிருந்தனர்

ஆயினும்
யன்னலிற்கு
நிலம் ஒரு கனவாயிருந்தது

யன்னலில்
நுழைந்து பறந்த பறவைகள்
நிலத்தின்
கொடுங்கனவுகளை
மட்டும் எடுத்து வந்தன


நிலத்தில்
ஆன்மா ஒரு சொல்லாக
மட்டும் இருந்தது
பறவைகள் உயிரற்ற சொல்லை
கொத்திவர தயங்கின.

யன்னலில் எட்டிப்பார்த்த மீன்கள்
நிலத்தில் ஆன்மா இல்லையென்றன


மீன்கள்
அலையுடன் போய்
நிலத்தை
கவ்வி கடலிற்கு இழுத்தன
நிலம் சலனமற்று கிடந்தது


யன்னல் நிலத்தை
இன்னும் நம்பியது

யன்னல்
பறவைகளிடம்
அப்பிள் விதைகளை
கொடுத்து விட்டது.

யன்னல் கடல் பாம்புகளை
தரைக்கு அனுப்பியது

யன்னல் நிலத்தின் ஆன்மாவிற்கு காத்திருந்தது.

-யதார்த்தன் -



Posted by விகாரன் On 6:51 PM
சுஜி
அழகான பெண்ணாய் இருந்தாய்
புன்னகை வரையப்பட்ட முகம் உனக்கு
இரவை ஒரு அழுக்காக
இரவை ஓர் மூச்சடக்கும் வாயுவாக
இரவை முழியை தோண்டும் கோட்டான்களின் விசுவாசியாக
இரவை
நீ பற்றிய துர்கனவாக
ஆக்கி கொண்டேன்
இரவை உன் பொருட்டு வெறுத்தல்
தகும்
கந்தகம் பூசப்பட்ட இரவு
இருப்புத்துண்டுகளாக
உன்னை நெருங்கியப்போது
நான் அதற்கெதிரெ
நிற்காததொரு கோளைத்தனம்
சுஜி
இரவொரு பெருவீரன்
இரவு என்னிடமிருந்து
எல்லாவறையும் எடுத்துக்கொண்டது
அல்லது பறித்துக்கொண்டது
நான் மிகத்தனித்திருக்கின்றேன்
இரவினை
என் பொருட்டு வஞ்சிக்கவும்
உன் பொருட்டு
மன்னிக்கவும்
காத்திருக்கிறேன்
உன்னுடைய
புன்னைகையை
இரவின் பின் இங்கே வீசுவேன்
கறுப்பின் மீது முளைத்து
பகலைக் காடாக்கும்
அது.
சுஜி புன்னகை வரையப்பட்ட முகம் உனக்கு.
-ய-
(புன்னகை பற்றி சொல்லிதந்த தோழி சுஜிபாவிற்கு)
Posted by விகாரன் On 6:51 PM
நாம் வேகமாக கீழே போகின்றோம்
நாம் தற்கொலை செய்வதற்கு
குதித்த பிறகுதான்
நீ அந்த நகைச்சுவையை சொன்னாய்
நாம் எவற்றை பரிமாறி கொண்டோம்
ப்ரியத்தை
கோபத்தை
புன்னகையின் சில துண்டுகளை
வார்த்தைகள் வைத்து கட்டிய கவிதைகளை
இவ்வாறாக
ஆனால் ஒரு நகைச்சுவை
முற்றிலும்
எதேட்சையானது
நாம் வேகமாக கீழே போகின்றோம்
தரை எம்மை கைவிட்டாகிற்று
மீண்டும் அது நம்மை ஏந்தும் போது
நம்மிடம் எதோ ஒன்று இருக்காது
நான் என்னை
யும்
உன்னையும்
மட்டுமே
மரணிக்க அனுமதித்தேன்
நாம் வேகமாக கீழே போகின்றோம்
நாம் உயிரோடிருந்த நிலத்தில் எல்லாவற்றையும் பத்திர படுத்திவிட்டு வந்தேன்
ப்ரியத்தை
பரிசுப்பொருட்களை
புத்தர் சிலைகளை
உன்னுடைய செப மாலையை
ஒரு கடலை
கண்னீர் குவளைகளை
இப்படியாக
நாம் வேகமாக கீழே போகின்றோம்
உன்னுடைய நகைச்சுவை
சுதந்திரமாக குதித்த நம் மீது
பெரும் பாரமாய் அழுத்துகின்றது
நீ எனக்கு தெரியாமல்
இன்னும் எதையாவது எடுத்துவருகிறாயா
எனதன்பே கேள்
நாம் இறக்க போகும் தரையில்
அவற்றையும் சேர்த்து மோதவிடுவாயா?
ஷகி
வா
நாம் வேகமாக கீழே போவோம்
நம் பிரியத்தை கொண்டு
இந்த நகைச்சுவை
யோடு எல்லாவற்றையும் இந்த வானத்தில்
பறவைகளாக்கி
பறக்கவிடு
நாம் வேகமாக கீழே போகின்றோம்
வானம் பறவைகளுக்கானது.
-ய-
Posted by விகாரன் On 6:50 PM
ஒருத்தி வானத்திலிருந்து வீழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளிடம் இறக்கைகள் இருக்கின்றன. ஆனாலும் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கிறாள் .
அவளை காப்பாற்ற என்னிடம் ஆயிரம் வழிகள் இருக்கின்றன
அவளை பறந்து சென்று தாங்குவது
அவளுக்கு இறக்கைகள் பற்றி சொல்லி கொடுப்பது
இப்பூமியை
பெரிய பஞ்சு மெத்தையாக மாற்றிவிடுவது
அல்லது
மேற்படி காட்சியை
ஒரு ஓவியமாக்கிவிடுவது.
இப்படியாக.
-ய-
Posted by விகாரன் On 6:50 PM
நாம் இருவரும் வேட்டைக்காரர்களாக இருக்கிறோம்
நமக்கிடையில் ஆறிருக்கிறது
மிதமான வேகத்துடன்
நமக்கிடையில் நீண்ட சொல்லாக
ஆறிருக்கிறது.
என்தோ ளில் இருந்த மூட்டையில்
கடல் இருக்கிறது
வார்த்தையாய் உறைய வைக்கப்பட்ட கடலது
ஒரு கடலை வேட்டையாடுவது என்பது எத்துனை
அபாயமானதென்று உனக்கு தெரியும்
இப்போது நான் தடுக்கி வீழ்ந்தால்
இந்த மூட்டை அவிழ்ந்து
கடலாகும்
வேட்டையாடியவுடன்
மிருகங்களை
கொல்வது போல் அதனை கொன்றிருக்க வேண்டும்
உனக்கு கடல் எத்துனை பிரியமானது
நீ கரையில் நிற்கின்றாய் இந்த ஆற்றை வேட்டையாடும் குரூர பார்வை உனக்கிருக்கின்றது
எனதன்பே ஆற்றை விட்டு விடு
இன்றிரவு நாம் கடலை புசிக்கலாம்
முன்பொருநாள்
உன்னுடைய பிரியமான கண்ணீர்துளிகளை நான் வேட்டையாடியதை இன்னும்
நீ மனதிலிருத்தி கொள்கிறாயா?
என்னுடைய பிரார்த்தனை பற்றிய சொற்களை உனக்கு தருகின்றேன்
ஆற்றை விட்டு விடு
இன்னுன் நீ உன்னுடைய பார்வையை தாழ்த்த வில்லை
எனதன்பே
சரி
உன்னுடைய கண்னீர் துளிகளின்
பெயரில் அவற்றை உனக்கு தருகின்றேன்.
கடலுனக்கு இனி
நாம் இன்னும் வேட்டைகாரர்களாகதான் இருக்கின்றோம்.
-ய-
Posted by விகாரன் On 6:50 PM
சபிக்கட்ட நிலத்தில்
பிரிவு மற்றும் பொய்
ஆகிய சொற்களின் இடையில்
என்னை நிறுத்திவிட்டு போனாய்
பிரிவு ஒரு ஓநாயாக மாறி
பொய்யை கவ்விச்சென்றது
பொய் பச்சை குருதியின்
வாடையுடன் இருந்ததை அது உணர்ந்திருக்க வேண்டும்
இது நடந்த பின்
கண்களை இழந்த வண்ணத்து பூச்சிகள்
துர்கனவாகி என்னை மொய்க்கின்றன
மனனம் செய்யபட்ட சொல் ஒன்றைப்போல் மனதெங்கும்
உலவுகின்றன
உன்னுடைய ஜெபங்களை
கனவுகள் மீது தூவி
வண்னத்திகளை பசியாற்றுகின்றேன்
அழகானவை மிகபசியாக இருக்கின்றன
சபிக்கப்பட்ட இந்நிலத்தில்
பொய்கள்
இரகசியத்தை அணிந்துகொண்டே திரியும்
எனினும் நான்
ஓநாய்களின்
பல்தடங்கள் ஆறும் மட்டும்
இங்கே தான் இருக்கவேண்டும்.
-ய-

புதன், 6 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 5:15 AM



முன் குறிப்புக்கள்


01

நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான  விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள்  செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை  வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம் ஆயுதங்களும் நரித்தந்திரமும் இருந்தன. நேரடியான போர் மூலம் அவர்களால் அது சாத்தியமானது .ஆனால் விஜயனுக்கு அது சாத்தியமில்லை. மிலேச்சத்தனம் காரணமாக நாடுகடத்தப்பட அவர்களிடம் வெறும் எழுநூறுபேரே காணப்பட்டனர். அவர்களால் நேரடியாக போர்செய்து இலங்கையில் ஒரு குடியேற்றத்தை பெறமுடியாது. 

எனவே விஜயன்  இலங்கையில் கண்ணுற்ற முதல் பெண்ணான குவேனியை வஞ்சித்து திருமணம் செய்தபின் மிக இலகுவாக இலங்கயின் ஆட்சியை தனக்கு கீழ் கொண்டுவந்தான். தேசத்தை கைக்கொள்ளதக்க பெண்களை அக்கால ஆதிக்குடிப்பெண்கள் கொண்டிருந்தனர். தாய்வழிச்சமூகத்தின் இருப்பு இலங்கையின்   வரலாற்று ஓட்டத்தில் அங்காங்கே முக்கியம் பெறுகின்றது. குறிப்பாக தென்னாசிய பெண்கள் ஐரோப்பியர் காலம் வரை (கி.பி 16 நூற்றாண்டு) தம் தாய்வழி சமூக உரித்தை ஆணுக்கு நிகராக பேணிவந்ததை இவ்வாறான வரலாற்று இடங்களின் மூலம்  அறிந்துகொள்ள முடிகின்றது.
                                    (2012 எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து)

முன்குறிப்பு  02

30 வருடகால இனப்போர் ஆயிரக்கணக்கான போய்களாலும் உண்மைகளாலும் விளங்கிக்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நிலத்தில் இருந்து பார்க்கும் ஒவ்வொரு தனிமனிடனுக்கும் போர் பற்றி வெவ்வேறான கருத்தாக்கங்கள் மனதினுள்ளும் அறிவினுள்ளும் கருக்கொண்ருக்கும். உண்மையின் அல்லது உண்மையின்மையின் இருப்பென்பது  நிலையற்ற ஓர்  மாறிலி என்றே கருகின்றேன் .

30 வருடமும்  ஒரு பெரும் கால மேடையில்  பொரும் போர் சார்ந்தவிடயங்களும் ஓர் நாடகத்தைப்போல நிகழ்த்தப்பட்டன.  நிகழ்த்துபவர்கள் தவிர ஏனையவர்கள் மேடையை சுற்றி வாழ்ந்தனர்.

(போரும் அதன் குழந்தையொன்றும் – கட்டுரையின் நறுக்கு)

ஆதிரை -01 சமூக அமைப்பினை முன் வைத்து.

காலணித்துவம் தென்னாசியாவின் பெண்மனத்தை ஆணின் பார்வையின் ஊடாக சிந்திக்கும் உணரும் ஓர் சார்பு நிலையினதாக பூரணமாக மாற்றிப்போட்டது,  குடும்பத்தில் தொடங்கும் சமூக கட்டுமானம் பெண்ணை ஆணின் சார்பானவளாக  மாற்றியது. தாய்வழிச்சமூக அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெண் நனவிலி மனம் ஆண்சார்பினை ஏற்றுக்கொண்டது ஆண் அதிகாரத்தின் சின்னமானான் , ஆண்மனம் புறவயமான சுதந்திரமான சிந்தனை, மிக்கதாய் மாறிக்கொண்டது , பெண் அகத்தினுள்ளே வாழ்ந்தாள் அவளுடைய உச்ச பட்சமான கரிசனை தன்னுடைய குடும்பம் பற்றியதும் , சுதந்திரமான ஆணை பெற்றேடுப்பதும் வளர்ப்பதும் பற்றியதுமாகவே இருந்தது. விவசாய முதலானவற்றை கண்டறிந்தவளும்  மிகப்பெரும் நிலத்தலைவியாக  இருந்த  தென்னாசிய  பெண்மனம் காலணித்துவத்தின் பின்னர் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டது , ஆதிப்பெண்ணின் உயர் தன்மை இறுதியாக தென்னாசிய குறிப்பாக இந்திய நிலத்திலேயே   எச்சங்களை கொண்டு நின்றது , உதாரணமாக இந்திய பெண் தெய்வங்கள் பற்றிய தொன்மங்களை பழைய  தாய்வழி சமூகத்தின் எச்சங்கள் எனலாம். இது இந்திய பண்பாட்டின் மிக செறிவான தாக்கத்தைகொண்ட இலங்கை நிலத்திற்கும் பொருந்தும்.


இலங்கையின் பெண் சமூக அமைப்பு என்பது பின் காலணித்துவத்தின் பின்னரும் இந்திய அளவில் ஆண்பார்வைக்குள் மறைந்து விடவில்லை என்றே கருதுகின்றேன். இலங்கை சமூக அமைப்பில் அதிலும் இலங்கை தமிழ்ச்சமூக அமைப்பில் பெண்கள் அகவயமான வாழ்வியலை மேற்கொண்டாலும் சமூக அமைப்பின் பெரும் தூண்களாகவே  ஆண்மனத்தினால் கருதப்படுகின்றது. குறிப்பாக  70 களின் பின்னர் எழுந்த விடுதலைப்போராட்டமும்  முரண்பாட்டுக்குள்ளே தினம் ஜீவித்த வாழ்க்கையும் குடும்பத்தலைவியும் ஆணுக்கு சமனாக இயங்க வேண்டிய கடப்பாட்டை உள்ளேற்றியது.


இதன் அடிப்படையிலேயே சயந்தன் ஆதிரையை  பெண் மனத்தில் அதிகம் காலூன்றி நின்று எழுதமுனைந்திருக்கிறார். நாவல் முழுவதும் எழும் போரின் , போராட்டத்தின்  பின்னணியில் இயங்கும்  குடும்பங்களினதும்  அவற்றின் தலைமுறைகளினதும் மாளாசோகமும் , கொண்டாட்டமும் இத்திமரத்துகாரி (காளி )யில் தொடங்கி ஆதிரை வரை பரந்து புரையோடுகின்றது. நாவல் முழுவதும் பெண்களிடமே காலம் இருக்கிறது , நாவலாசிரியரின் பிரதியை பெண்களே எழுதுகின்றனர்  மலையில் தொடங்கி காட்டில் இறங்கி குடாவில் திரும்பி  கடல் வரை பெண்களை தொடர்ந்தே எழுத்து செல்கின்றது.

நிற்க

நிலம் பற்றிய மூன்று குறிப்புக்கள்

மலை

சயந்தன் மலையகத்தில் கதையை தொடங்குகின்றார் , மலைய தமிழர்களின் வாழ்வின் பெருஞ்சோக் அத்தியாயங்கள் இன்ரு பரவலாக இலக்கிய மேடைக்கு எடுத்து வரப்பட்டாலும் இன்றும் அது “ஈழத்து இலக்கிய பரப்பில்” தனியான ஒன்றாக கருதப்படுகின்றது , இலங்கையின் 30 வருட போராட்டம் , அடக்கு முறை  , இனவாதம் என்பவற்றுக்கும்  மலையக மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததை போலவும் அவர்களுடைய துன்பம் பிறிதானது என்பதும்   இலக்கியங்களின் பொது புத்தியாகவுள்ளது , ஆனால் இனப்பிரச்சினைக்கும் சரி மலையகமக்களின் பிரச்சினைக்கும் சரி அடக்குமுறையும் அரசும் தான் எதிர் தரப்பு என்பதே உண்மை . யாழ்ப்பாணத்தார் “தோட்டக்காட்டான்” “கள்ளத்தோணி” என்று  மோசமமான  சித்தரிப்பொன்றை அவர்கள் மீது வைத்திருக்கின்றார்கள் , குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மேட்டுக்குடி உயர் சைவ வேளாளர் என்று சொல்பவர்களின் நாவில் நான் பலமுறை இத்தகைய வார்த்தைகளை கண்டிருக்கின்றேன், வன்னிமக்களை காட்டார் என்பதும் (ஆனால் போரின் போது வன்னிக்கு ஓடி பதுங்கிகொண்டது நகை முரண்) மலையக மக்களை கள்ளதோணி என்பதும் யாழ்ப்பாண பொதுமனநிலையின் கறுப்பு பக்கங்கள் இதனை ஆசிரியர் தெளிவாக காட்டுகின்றார். யாழ்ப்பாண மக்கள்  பற்றிய எள்ளி நகையாடல் களில் ஆசிரியர் மிகதிறமாக இவற்றை முன் வைக்கின்றார்.

மலையக மக்கள் இலக்கியத்திலோ , அரசியலிலோ தனித்து விட வேண்டியவர்கள் அல்லர் , உரிமைகள் கோரப்படும் போது தமிழ்ப்பரப்பு அவர்களின் தோள்களையும்  ஏற்றுக்கொள்ள வேண்டியது  கடமையாகும் என்பது சயந்தனின் தீர்க்கமான நிலைப்பாடு.
இந்தியராணுவம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கமலையை கொடுமைப்படுத்தும் போது வலியின் உச்சத்தில் அவ
“ஐய்யா நானும் இந்தியாவிலிருந்து வந்தவன் தான் ” என்று கதறுகின்றான். இந்திய இராணுவம் அவன் தலையைகொய்து எடுத்துபோகின்றது.

இவ்வாறு .

காடு
கதை காட்டிற்கு இறங்கிய பின்னர் தான் உருக்கொண்டாடுகின்றது , போராட்டத்தின் பின்னணியில்   பெண்களும் ஆண்களும் வாழ்வியலை மாற்றியமைக்கின்றனர். தொழில்கள் மாறுகின்றன, உறவுமுறைகள்  புரழ்கின்றன. மூன்று தலைமுறைக்கும் வெவ்வேறேனான வாழ்க்கை முறை , இயற்கையில் இருந்து மக்களை போர் பிரிக்கின்றது , தெய்வநம்பிக்கைகள் , இத்திமரமாக  பாறிவிழுகின்றன , காட்டின் மகன்கள் சோபையிழந்துபோகின்றனர். காடு சமநிலையை இழக்கின்றது எனினும் மனிதர்களை அது கைவிடுவதாக இல்லை , மயில்குஞ்சன் , சங்கிலி போன்ற மனிதர்கள் விடுதலைக்காக போராடுபவர்களை காட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர், காட்டை அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.காடு அவர்களை எடுத்துக்கொள்கின்றது. காட்டின் விளிம்பில்  போர் தொடங்குகின்றது , இளவர்சர்களும் இளவரசிகளும் போருக்கும் போகின்றனர், அவர்களிம் காதல் இருக்கிறது , காமம் இருக்கிறது கூடவே ஓர்மமும் கோபமும் காலத்திற்காக வந்து சேர்கின்றன , காட்டின் விளிம்புகள் அவர்களை உள்ளே இழுத்துகொள்கின்றது அவர்கள் காட்டுக்குள் நுழைய விளிம்பில் இருந்த மக்கள் கொஞ்சம் அசுவாசம் அடைகின்றனர் , அவர்களை பாதுகாக்க காட்டுக்குள் இளவரசர்களும் இளவரசிகளும் இருக்கின்றனர் , அவர்கள் அரசர்களை நம்புகின்றார்கள். எல்லோரும் நம்புகின்றார்கள்.
இடையில் தாய்குலத்தின் கண்ணீர் எழுகின்றது.


குடா

விடுதலை போராட்டத்தின் ராஜாக்களின் நகராகவும் , சிறிய நீர்ப்பரப்பால் துண்டிக்கப்படும் நிலமான யாழ் குடாநாட்டின் மனநிலை உடைய மக்களை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார் , சாதியமைப்பு , சொத்து சேர்த்தல் முதலான இடங்களில் யாழின் உண்மை முகங்கள் பலதும் வெளியே எடுக்கப்படுகின்றன. கதையின் பல இடங்களை திருப்பிவிடும் நிலமாக யாழ் வன்னியுடன் அவ்வப்போது இணைகின்றது.


கரை

கரையில் எல்லோரும் நம்பிக்கையுடன் ஒன்று கூடுகின்றார்கள் , இளவர்சர்களும் இளவரசிகளும் வஞ்சிக்கப்படுகின்றார்கள். போர் தாண்டவமாடுகின்றது , நம்பிக்கையெல்லாம் கடலில் கரைகின்றது , மாபெரும் கனவு உடைந்து நொறுங்குகின்றது, ஒரு இனம் அதன் நிலத்தில் வஞ்சிக்கப்படுகின்றது.  கரையெல்லாம் ரத்தம் .  போர் முடிந்த பின் அல்லது முடிந்ததாக சொல்லப்பட்ட பின் எல்லாம் ஓலத்தில் நிலைக்கின்றது.
ஆண்களின் ஓலம் பெண்களின் குரலில் மறைந்து போகின்றது.

இனி




ஆதிரை நாவல் விமர்சனம் இங்கே தொடங்குகின்றது
.
முன்பு குறிப்பிட்டதைப்போல் ஆதிரை போருக்கு பின்னால் இயங்கும் மூன்று தலைமுறையின், தாய்களின் கண்ணீரை தாங்கிநிற்கின்றது , அழகியல் பூர்வமான படிமங்களை ஆதிரை பெரும்பாலும் வெற்றிகரமாக உருவாக்கின்றது . மொழியமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தை சில இடங்களில் காணலாம்.
சயந்தன் உண்மையின் பக்கத்தில் குற்ற உணர்வோடு நிற்கப்பார்கின்றார் , பிரபாகரன் சொன்ன
இயற்கை எனது நண்பன் ,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்  வரலாறு எனது வழிகாட்டி , என்பவை ஆரம்ப அத்தியாயங்களின் பெயர்களாய் அமைக்கின்றார். அதனைப்போல் ஓயாத அலைகள்  வெற்றி நிச்சயம் என்று பெரும் போர்களங்களின் பெயர்களும் ,

இங்கே குற்றம் என்பது கூட்டு பொறுப்பும் கூட , நம்முடைய பிணங்களை மீள் பரிசோதனை செய்யவேண்டும்தான் ஆனால் தியாகங்களை கொச்சைபடுத்தல் என்பது அறமன்று.
உண்மையினதும் , அறத்தினதும் , அன்பினதும் , கருணையினதும் மற்றும் நீதியினதும் அருகில் சென்று நின்று கொள்ளள் மட்டுமே உத்தமானது.

ஓஷோ வாழ் நாள் பூராகவும் காந்தியை விமர்சித்தவர் ,ஏராளம் கடிதம் காந்திக்கு எழுதிதள்ளினார் , காந்தி உருவாக்க நினைக்கும் இராம ராஜ்ஜியம் மீது கேள்வி கேட்டார் , காட்டமாக விமர்சித்தார் , எதிர்பிலே வாழ்ந்தார். ஆனால் காந்தி இறந்ததும் ஓஷோ குலுங்கி குலுங்கி அழுதாராம் .

நிற்க

நாவலில் ஒரு இடத்தில்

“போன கிழமை சந்திரா டீச்சரிட்ட படிச்சதெண்டு சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன் கதையெழுதுறவனாம்  ரீச்சர் எப்பிடி செத்தவா ? நீங்கள் எந்த பாதையால  மாத்தளனுக்கு போனீங்கள்  , ? இயக்க பெடியள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ? அவங்கள்ள இப்பவும்  கோவம் இருக்கோ  எண்டெல்லாம் கேட்டு தன்ர ரெலிபோன்ல ரக்கோட் செய்தவன் ”
“ஏனாம் ?”
“தெரியேல்ல  சனம் உத்தரிச்சு அலஞ்ச நேரம் கள்ளத்தோணியில வெளிநாட்டுக்கு போனவங்கள் இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு எல்லாரும் வந்து விடுப்பு கேக்கிறாங்கள்”

என்று வரும் .

இப்பிடியான இடங்களிலும் அத்தார் , சிவராசன் முதலான பாத்திரங்களின் நிலையிலும் அப்பாத்திரங்களின் மொழிதலிலும்  அடிக்கடி ஆசிரியரின் மரணத்தையும் மனத்தையும் காணமுடிகின்றது.


போரின் பின்னர் நடக்கும் அத்தனை அத்தியாயங்களும் 2000 களின் குழந்தைகளாக எமக்கு  முன்னே நிகழ்ந்தவை  நிகழ்ந்துகொண்டிருப்பவை , கடைசி 70 பக்கங்களை கண்ணீருடன் கடக்க வேண்டியுள்ளது ,
விபூசிகா போன்று போரின் மிச்ச அவலங்கள் பெண்குரலெடுத்து காணாமல் போன உறவுகளுக்கு ரோட்டில் கிடந்து அழும் காட்சிகளை இப்போது தரிசித்துகொண்டிருகிறோம் . எல்லோர் வீட்டிலும் போரின் ஏதோ ஒரு மிச்சம் கிடந்து அழுத்துகின்றது ஆத்மாவிற்கு நெருக்கமாக சென்று நெருடுகின்றது .

இது செவ்வியல் இலக்கியமாக , மகத்தான நாவலா என்பதற்கு 508 பக்கத்தில் கசியத்தொடங்கும் கண்ணீர் 664 ஆம் பக்கத்தில் ஆதிரை சயனைடை எடுக்கும் போது ஒரு நதியாக மாறிவிட்டதை மீறி நான் எதுவும் எழுதுதல் . சுயகொலையாகும்.

ஆதிரை  தமிழிலக்கிய பரப்பின் இன்னொரு பெரும் பாய்ச்சல் , தலைமுறைகளின் கொண்டாட்டம்  , இருப்பு , கண்ணீர் என்பவற்றின்  பிறிதொரு படியெடுப்பு.  இத்திமரக்காரி எனும் மிகப்பெரும் பெண் தொன்மத்தில் இருந்து ஆதிரைவரை ஒலிக்கும்  கூட்டு பெரும் பெண்குரல், ஆதிரை தனி ஒரு முழுமையான செய்தியை சொல்லு முடிக்கவில்லை , அது எச்சங்களை , அல்லது சூல்களை உருவாக்குகின்றது , ஆதிரை  ஒரு  கருவுற்ற பெண் நாவல் , இன்னும் பலதை உருவாக்கதக்க சூல்களை ஆதிரையெங்கும் காண்கின்றேன். இன்னும் ஆயிரக்கணக்கான உண்மைகள் இருக்கின்றன, நாம் மிகத்தொலைவிற்கு போகவில்லை கடந்தகாலம் மிக அருகில் கிடக்கின்றது , இன்னும் உத்தரித்து கிடக்கின்றது.  

வேதனையுறும் சமூகத்தின் அவலக்குரல் , கோபத்தின் சீற்றம் , அறத்தின் யுகக்கண்ணீர் , நீதியின் நெடுந்தாகம் ஆதிரையின் வழியே பெரும் சத்தமாய் , அவலக்குரலால் கோரப்படுகின்றது.
அதுவும் ஒரு பெரும் குரல் கூட்டம் பெண்குரலால் அழுத்தி ஒலிக்கின்றது ,
ஏன் ஆண்கள் யாரும் அவலத்தில் அழுவதில்லையா , அது கண்ணீரில்லையா?
ஆம் , ஆனால்

பெண்ணின் கண்ணீர் ஆத்மாவிற்கு மிக நெருக்கமானது .

-யதார்த்தன் -









சனி, 2 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 5:34 AM


ப்ரியகி
ஓர் அதி மனுஷி

வார்த்தைகளின் நகரத்தில்
வசித்துவந்தாள்

வானம் என்ற வார்த்தை அங்கே பரிச்சமற்றிருந்தது பதிலாக
மனம் என்ற வார்த்தையை தலைக்குமேலிருபதற்கு பெயரிட்டார்கள்
நகரத்தின் வெளியே கடலிருந்தது  அலைகள் எதுவுமற்று சலனமற்று
மெளனமாயிருந்தது

அங்கே  பெரும் மர்மமான  இரண்டில் ஒன்றாய் கடலிருந்தது
கடல் இறந்ததாய் இருந்தது.
 வார்த்தைகளின் நகரத்தில் அவளும் வார்த்தைகளும் மட்டுமேஉயிருடன் இருந்தனர்

பறவைகள் பற்றிய பழைய பாடல்கள் வழக்கிலிருந்தன
அவள் முன்பொரு பறவையாக இருந்தவளென்றே வாத்தைகள் நம்பினர்.

தேனீர் கோப்பைகளால் செய்யப்பட  பெருமாளிகையொன்றில் அவர்கள் வசித்தனர்
அவள்
வார்த்தைகளோடு உறங்கினாள்
வார்த்தைகளை முத்தமிட்டாள்
வார்த்தைகளையுண்டாள்
இவ்வாறு
வார்த்தையோடிருந்தாள் வார்த்தையாக இருந்தாள்
இறந்து போன வார்த்தைகள் அவளுடைய கண்ணீர் பூசப்பட்டு
கடலுக்கு அனுப்பப்பட்டன
கடலிலவை
 மீன்கள் என்று அழைக்கப்படுவதாய் நகரத்தில் ஒரு வதந்தியிருந்தது.

தினமும் வார்த்தைகளை கோர்பதும்
நெய்வதும்
தைப்பதும் போக
வார்த்தைகளுடன் தேனீர் அருந்துவாள்
தேனீருக்குள் இடுவதற்காகவே இனிப்பென்ற வார்த்தையை கைகளில் எடுத்து வருவாள்.

அவளிற்கு மெளம் பற்றிய பாடல்கள் பிரியமாய் இருந்தன
எனவே பாடுவதில்லை.
எனினுமவள் வார்த்தையாய் இருந்தாள்.
வார்த்தையோடிருந்தாள்.

ப்ரியகி ஒரு அதி மனுஷி.

-யதார்த்தன் -

வெள்ளி, 1 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 5:52 AM


ஒருவேளை நீயற்றிருத்தல் பற்றியவோர் கவிதையாக
இது மாறிவிடக்கூடும் என்ற அச்சமிருந்தது
எனினும் சொல்லப்பட்ட வார்த்தைகளின் கூட்டத்தில் இதனை
கண்டபோது வார்த்தைகளை நம்பியதைப் போலவே அதனையும் நம்பத்தொடங்கினேன்

மொளனத்தின்
கள்ள முகத்தை பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா ?
விஷ கத்திகளால் மழித்து எடுக்கப்பட்டது அது
எங்கிருந்து என்பது இரகசியமானது,

மெளனத்தின் கள்ள முகம்
கனதியானது கருக்கல் இருளின் மிகஅடர்த்தியான இடங்களில் ராணித்தேனீகளின் கொடுக்குளை கொண்டு உறிஞ்சியெடுத்து செய்ததைபோல்
பக்குவமான கறுப்பது

தொடுதலை பொறுத்து விதம் விதமாய் நைந்து உருமாறி கைகளில்
கொழகொழக்கும் அதனுடல்
முகத்தில் அப்பிக்கொள்ள மட்டும் முகத்திற்கானது.
நான் அதனை கடித்திருக்கிறேன்
உதட்டில் ஒட்டிகொண்டது ,பற்களில் படிந்து அண்ணத்தில் வழிந்து தொண்டைவரை இறங்கி
திண்மமென உறைந்து மூச்சடைத்தது


விஷக்குப்பிகளுக்கு தேவையன வார்த்தைகளை உமிழும்போதுமட்டும் மூச்சுக்கும் வார்த்தைக்கும் வழிவிட்டது
உன்னுடைய வார்த்தைகளை நெஞ்சைக் கிழித்த போது உபரியாய் வெடித்த தொண்டக்குழிக்குள் இருந்து நழுவி வீழ்ந்து
கடலானது அந்த முகம்
ஒரு கடலை எங்கனம் உவமிப்பது
மெளனமாக
முகமாக
இருளாகவிருந்த
அது கடலாக ஆனதென்றா. ?


ப்ரியகி
கடலை எடுத்துக்கொள்.
போய்விடு
கடலற்றவென் உலகம் வெந்தழியும்
என்றெண்ணாமல் போ
ஏற்றகவே வானில் மேகத்தினறிகுறிகள்
பிரிவின் நிலமெல்லாம்
புனித மெளனத்தின் விதைகள் .

.-யதார்த்தன்