ஞாயிறு, 20 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 1:36 AM



லண்டன்காரர் அறிமுக நிகழ்வில் நடைபெற்ற பிரதிமீதான “விமர்சனம்” எனும் அபிப்பிராய முன்வைப்பு மீதான நான் முன்வைத்த கருத்தினை சாரம் செய்ய முற்படுகின்றேன்.

லண்டன்காரர் மீதான என்னுடைய  அபிப்பிராயத்தினை சனவரியில் வெளிவர இருக்கும் புதிய சொல் இதழில் பதிவு செய்துள்ளேன். அதில்
சமீப நாட்களாக விமர்சனம் என்ற சொல்லின் மீது அதன் பிரயோகத்தில் இருக்கும் அதிகார தொரணை பற்றியும் உடன்பாடற்ற தன்மை என்னிடம் இருக்கிறது. தன்னுடைய முழுமையை  ஒட்டுமொத்தமாக்கி  ஒரு பிரதியை ஆக்குபவனின்மீது அது பிழை இது சரி என்று வாளெடுத்து வெட்டுவது எந்தளவு சரியான செயல் என்பது என்னுடைய கேள்வி. காலம் காலமாக விமர்சனம் என்ற பெயரில் நக்கீரர் தொடங்கி  “நெற்றிக்கண் திற்ப்பினும்” என்று ஆரம்பிக்கின்றோம்
 என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தேன்.

சமீப காலமாக மொழியில் இயங்கும் சில இலக்கிய துறைசார் சொற்களின் மீது கேள்வி எழுப்பத்தொடங்கி இருக்கிறது புதிய சொல் முதலான இதழை மையம் கொண்ட எழுத்துக்கள் .
 குறிப்பாக

விமர்சனம்
படைப்பு
படைப்பாளி
எழுத்தாளர்

முதலான சொற்களின் அர்த்தம் , சாத்தியம் , அதிகாரம் , இயங்குமுறைமை முதலானவற்றின் மீது தர்க பூர்வமான கேள்விகளை கேட்க ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக பின்னை மொழிச்சூழல் இந்த சாத்தியப்பாடுகளை மேற்கொள்வதில் முன்னனி வகிக்கின்றது.
பின் அமைப்பியல் , பின் நவீனத்துவம் , பின்னை மொழிச்சூழல் முதலான வியாக்கியானப்பரப்புகளின் தொடர்ச்சியான வாசிப்பும் விவாதங்களும் “சொற்களின் அதிகாரம்” என்பதனை போட்டுடைத்து அவற்றின் அதிகார மையத்தினை வலுவிழக்கச்செய்யும் முயற்சியை தொடங்கி இருக்கின்றன. 

இந்த பின்னனியில் தான் நேற்றையதினம் அனோஜன் பாலகிருஷ்ணன் , கெளதமி , கலையரசன் த , மூவரும் தம் கருத்தாடல்களை முன் வைத்த பின் கிரிஷாந் , ஜேசுராசா முதலானோர்  மூவரின் விமர்சனங்கள் என்ற தொனிக்கு கீழ் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் மீது பல திசைக்கேள்விகளை எழுப்பியதோடு தம் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து நான் விமர்சனம் என்று சொல்லப்படும் அப்பிராய உருவாக்கத்தின் மீதுள்ள அதிகார தொனியினை நொக்கிய என் கருத்தாடலை முன் வைத்தேன் . அதனை சற்றே தெளிவாகவும் சுருக்கமாகவும் கீழே விளக்க முற்படுகின்றேன்.

விமர்சனம் என்பது தற்போதய தமிழ்ச்சூழலில்( பனுவல் , சினிமா , இசை , ஓவியம்ம் , நடனம் இலக்கியம் யாவற்றின் மீதும் ) பெருவாரியாக எத்தகைய தன்மையினதாக புரிந்துகொள்ளப்படவும் , முன்வைக்கப்படவும் படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கின்றேன்.

சாரு நிவேதிதாவின் ஸுரோ டிகிரி என்ற பிரதியின் மீது ஒரு பிரபல இணயப்பதிவர் ஒருவர் தன்னுடைய “விமர்சனம்” என்பதில்
“சாருவின் புத்தகத்தை மேசையில் வைத்திருந்தேன் தவறுதலாக கை தட்டுபட்டு  அருகில் இருந்த குப்பைகூடைக்குள் வீழ்ந்துவிட்டது.அப்படியே விட்டுவிட்டேன் ”

இத்தகைய வகையறா விமர்சனங்களையே நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் , இவற்றையே விமர்சனம் என்கின்றோம் , சாருவின் பிரதியை சொல்லிவிட்டேன் என்பதற்காக சாருவை நல்ல விமர்சகர் என்று சொல்வதற்கில்லை , தமிழின் மொசமான அதேநேரம் மொழித்தந்திரம் மிக்க “விமர்சகராக” சாருவையே முதலில் சொல்வேன்.  

இங்கே நான்  இரண்டு வகையான விமர்சகர் கூட்டத்தினை இனம்காண்கின்றேன்,
1.   பிரதியை தொட்டும் கூட பார்க்காமல் , எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை , அவர் பற்றி கேள்வியுற்ற கர்ண பரம்பரைக்கதைகள் , அல்லது பிரபலம் ஒன்றின் கருத்து , எழுத்துச்சண்டித்தனம் என்பவற்றின் வழியே எழுதித்தள்ளும் கூட்டம்.
2.   பிரதியை வாசித்தாலும் பிரதியின் விரிந்து செல்லும் சாத்தியங்களை , புறக்கணித்தல் , தம் வாசிப்பு செருக்கு, விவாத மனப்பாங்கு , அறிவு வன்முறை  என்பவற்றை விமர்சனம் என்ற பெயரில் நிகழ்த்துதல்.

இங்கே முதலாவது வகையறாக்களை  உளவியல் சிக்கல்களை தீர்க்கும் மருத்துவர்களுக்கு பரிந்துரைத்துவிட்டு இரண்டாவது வகையறாக்களை எடுத்துக்கொள்வோம்,

சாருவையே எடுத்துகொள்வோம் சாரு அடிக்கடி புலம்பித்தள்ளும் ஒருவிடயம் தமிழில் ஏன் உலகதரமான இலக்கியங்கள் எழுதப்படுவதில்லை , ஆல்பர்காம்யுவும் , மார்வெஸ்சும்  ஏன் தமிழ்ச்சூழலில் பிறப்பதில்லை என்று , அவரிடம் நான் கேட்கும் முதல் கேள்வி
“உங்களால் ஏன் ஓர் உலக இலக்கியத்தைஎழுத முடியவில்லை ?”
எழுதும் ஒவ்வொருவரிடமும் , இதே கேள்வியை கேட்கவேண்டும் , தமிழ்ச்சூழல் நல்ல இலக்கிய சாத்தியங்களை எல்லாக்காலங்களிலும் ஏற்படுத்தியிருக்கின்றது , மிகச்சிறந்த இலக்கியங்கள் எழுதப்படுகின்ற, ஆனால் அவை  எப்படி வியாக்கியானம் செய்யபடுகின்றன , ஒரு எழுத்தர் அடுத்த கட்டத்திற்கு செல்லும்வகையில் நாம் அவருடைய எழுத்த எவ்வளவு தூரம் விவாதித்து இருக்கிறோம் , தமது பிரதியின் மீது எழுத்தர் எத்தனை பேர் மோகமற்று தம் பிரதியையே வெளியே வந்து விமர்சித்து இருக்கின்றனர் ?

விமர்சனத்தை பிரதி வாசிப்புக்கான சாத்தியப்பாட்டிற்கு ஏன் எடுத்துச்செல்வதில்லை , கோபமாகவும் , மற்றவனை முட்டாளெனவும் , பிரதி மலத்திற்கு ஒப்பானது எனவும் சொல்லிக்கொள்ளுவது வன்முறையா விமர்சனமா ?

முழுமை என்பது இறந்த ஒன்றாகும் என்பார் ஓஷோ , முழுமையற்ற ஒன்றே பிரதி , அது வளர்ந்து செல்லும் , இன்னொன்றினை உருவாக்கும் சாத்தியங்களை சொல்லிக்கொடுக்கும் அதன் அளவில் நிறைந்து மீதி வெளியே வழிந்து இன்னொன்றை நிரப்பும் , பிரதி மையமற்ற தளம்பும் நீர்ப்பரப்பாக மாறுவதனை விமர்சனங்களே சாத்தியப்படுத்த வேண்டும்.
மோசமான விடயமொன்றை ஒரு பிரதி கொண்டுவரும் பொது அதனை மோசமானது என்று தவிர்கலாம் , வில்லங்கத்துக்கு அதனை பிரதி என்று சொல்லி எடுத்து பின்னர் அதனை ஏன் போட்டு வெட்ட வேண்டும் , மோசமான பிரதியை விட மோசமானது அது , மோசமானவற்றை புறக்கணிக்கவும் , நல்லபிரதிகளை வியாக்கியானம் செய்யவும் எப்போது கண்டுகொள்ளப்போகின்றோம் ?
சோகம் என்னவெனில் இத்தனை காலமும் விமர்சனம் என்ற ஒரு சொல்லை ஒரு வன்முறை கருவியாக , நஞ்சாக , பழிதீர்க்கும் அரக்கச்சொல்லாக , மாற்றிவிட்டோம் என்பதே .

இப்போது அச்சொல்லை மீள்வாசிப்பு செய்ய முடியாது அது நஞ்சாகி  எல்லா இலக்கிய பிரக்ஞைகளின் மீதும் அதன் நச்சுவாசம் பட்டாகி விட்டது , எனவே அதன் அதிகாரத்தை தோற்கடிக்க பிறிதோர் சொல்லை காத்திரமான அப்பிராய முன்வைப்பினை தர்க்கிக்கப்பட்ட அறச்சொல்லை , விமர்சனம் என்ற சொல்லின் எதிரில் , அதன் அதிகாரத்தின்  எதிரில் நிறுத்துவது தற்போதைய மொழி இலக்கியச்சூழலில் கடமையாகும்.


-யதார்த்தன் -

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 7:08 AM

..................
மின்மினியால் செய்யப்பட மூக்குத்தி
சொன்னது,

நோயுற்ற பொழுதில்
மீண்டும் மீண்டும்
புதைந்தன வார்த்தைகள்

அழாதவைகள்
எப்போது கண்னீரானது
என் சகி

அழுததை
மீண்டும் உறிஞ்சிக்கொண்டனவுன்
கண்கள்.

இப்போது

துரத்தும் போது
எவ்வளவு தூரம் பறந்து
நான் திரும்பவேண்டும்?


நோய்முடிய
மீண்டும்
நம்மிடையே எப்போதும் போல
தேனீர்கோப்பைகளும்
வெள்ளை இறகுகளும் மிச்சமிருக்கும்
நமக்குத்தெரியும்

பாடல்களில்லாத
யுகமொன்றில்
நாட்டியங்கள் பிறந்ததுண்டோ

சமயத்தில் அகவும்
பூனைகளுக்கும்
தேவதைப்பாடல்கள் பரிச்சமுண்டு

ப்ரியம்
வார்த்தைகளின் என்பு

நல்லவேளை
கடைசியாய் அவை
வார்த்தையாக(மட்டும்)
முடிந்து போயின
தலைநீட்டி எழுந்து பற
பறவையே
கூடிழத்தலே ஞானம். *

-ய-
13.12.2015
7.25pm- 7.37pm

செவ்வாய், 8 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 4:08 AM


அவள் சுதந்திரமாகவும் சிருஷ்டிக்கு மிக நெருக்கமானவளாகவும் இருந்தாள்.

மனமென்பது பிறிதோர் உடற் பாகமாக அவளுக்கு வழங்கப்பட்டது. நெஞ்சுக்குழிக்குள் ஒரு  பந்தைனைப்போல அதனை பொருத்தியிருந்தது சிருஷ்டி.  நீல நிற தசைக்கோளமான அதை கைகளில் எடுக்கவும் தொட்டுணரவும் முடியுமாயிருந்தது. எடுக்கும் போது லேசான இரத்த கசிவு கைகளில் ஒட்டிக்கொள்ளும்  அது ஒன்றுதான் அவளை அசெளகரிய படுத்தும் ஒன்றாக இருந்தது.


படைக்கப்பட்ட ஆரம்பத்தில் , அது அவளுக்கு ஆச்சரியம் தரும் ஒன்றாக இருந்தது , அடிக்கடி எடுத்து அதனை தொட்டுணர்ந்து விளையாடுவாள், உடலில் இருந்து அதனை  அகற்றும் போது ஏதேட்சையாக பட்ட காயம் ஒன்றின் மேற்றோல் செதிலை சடேன இழுத்து அகற்றும் போது ஏற்படும் லேசான குறுகுறுப்பினை உணர்வாள். தினமும் நான்கைந்து முறையாவது அந்த குறுகுறுப்பினை உணரவேண்டும் போல் இருக்கும். மனத்தை அகற்றுவதனையும்  உள்ளிடுவதனையும்  ஒரு போதைபோல் பழகிக்கொண்டது அவளுடல். நீல நிற  நரம்புகள் ஓடும் அதனை மார்பிலிருந்து அகற்ற நினைக்கும் போது அவளுடைய மார்பெங்கும் அடர்த்தியாய் வளர்ந்த நீல நிற இறகுகள் சட்டென விரிந்து மார்ப்பின் நடுவில் உள்ள மனக்கோளம் உள்ள இடத்தை காண்பிக்கும். அவள் குளிக்கும் போதும் நீச்சலடிக்கும் போதும் , மழைபெய்யும் போதும் மார்ப்பு இறகுகள் ஒன்றையொன்று இறுக பின்னிக்கொண்டு  தண்ணீர் உட்செல்லாமல் தடுத்துவிடும். இதே செயன்முறையாக்கத்தினை தான் சற்று அதிகமாக வளர்ந்து அவள் இடைவரை பரவி சுற்றியிருக்கும்  இறகுகளும்கொண்டிருந்தன. தன் யொனியை உணரும் போது அந்த சிறகுகள் விரிந்தகன்றன.ஆனால் மனக்கோளத்தினுடைய சிறகுகளைப்போல் அவை அடிக்கடி வேலைக்கமர்த்தப்படுவதில்லை.


 மார்பிலும் இடையிலும் உள்ள சிறகுகளை  தவிர அவள் உடலில் வேறெங்கும் சிறகுகள் காணப்படவில்லை. முன்னொருநாள் சிருஸ்டி அவளிடம்  பறப்பதற்கு ஆசைகொள்கிறாயா அல்லது மனத்தை புன்னங்கமாய் பெற ஆசை கொள்கிறாயா என்று கேட்ட போது , இரண்டாவதை தெரிவு செய்திருந்தாள். எனவே அவளுக்கு முதுகில் சிறகுகள் முளைக்கவில்லை.

எனினும் மனத்தையுடையவள் சுதந்திரமாக இருந்தாள் , மகிழ்ந்திருந்தாள், பெரிய ஆற்றுப்படுக்கைகளில் நீந்துவதும் , காடெங்கும் உலவித்திரிவதும். பெரிய மயில்களுடன்னும்  கலைகளுடனும்  மைதுனம் செய்துகொள்வதும் , சிருஷ்டியுடன்  உரையாடுவதுமாக அவளுடைய யுகங்கள் கடந்துகொண்டிருந்தன. சிருஷ்டி பலருடைய கதைகளை அவளுக்கு சொல்லிக்கொண்டிருக்கும், பெரும்பாலும் அவை மிக வேடிக்கையாக இருக்கும். ஒரு நாள் சிருஷ்டி சொன்ன கதையொன்று அவளை அந்த காட்டை விட்டு செல்ல தூண்டியது.

அது ஒரு இளவரசியினுடைய கதை , அவள் இப்போது ஒரு தேசத்தின் ராணியாக இருக்கிறாள் , இளவரசியாக பிறந்து சில நாட்களில் அவளை அவள் தந்தை காடொன்றில் தவற விட்டுவிட்டார். அவளை ஒரு ஓநாய் கூட்டம் கைப்பற்றியது , வழமை போல பெண் ஓநாய் ஒன்று அவள் மேல் இரக்கம் கொண்டு தன் மயிர் அடர்ந்த முலைகளால் அவளுக்கு பாலூட்டி வளர்த்தது. நிர்வாணியாக அந்த அடர்காட்டில் ஓநாய் குட்டிகளுடன் அவள் வளர்ந்தாள். யெளவனம் எய்தினாள் , ஒரு நாள் அதே வழமை போல அழகும் வீரமும் பொருந்திய இளவரசன் அவளை கண்டு மையல் கொண்டு அவள் முன் வந்து தன் புரவியில் இருந்து குதித்தான். இளவரசி சட்டென தன் மார்புகளை கைகளால் இறுக  மறைத்துக்கொண்டாள் …

இந்த இடத்தில் தீடிரென கதையினை நிறுத்தச்சொல்லிவிட்டு சிருஷ்டியை அனுப்பிவிட்டு , வேகமாக காட்டைவிட்டு வெளியேறி அந்த இளவரசி ராணியாகி ஆளும் நாட்டிற்கு வந்து சேர்ந்தாள் தன்னுடைய உடலை ஆடைகளை கொண்டு மறைத்து தானும் ஒரு நகரத்து மனுஷி போல மாறிக்கொண்டாள். மனக்கோளத்தை எடுத்து தன் சட்டை பைக்குள் போட்டு கொண்டு ராணியைப்பார்க்க புறப்பட்டாள். மிகுந்த பிரயத்தனங்களுக்கு  பிறகு ராணிமுன் தோன்ற அவளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அத்தானி மண்டபத்தில் ராணி கொலுவமர்ந்திருந்தாள் , அவளுடைய சிம்மாசனத்தின் நேர்மெலே ஒரு இளவரசனின் படம் வரையப்பட்டிருந்தது. அதன் மீது இரண்டு கறுப்பு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்டிருந்தன .அது கதையில் கேட்ட இளவரசனாகதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். ராணி அவளிடம் விடயம் என்னவென்று விசாரித்தாள்,

”ராணி என்னிடம் இரண்டு கேள்விகள் இருக்கின்றன இரண்டில் ஒன்று வெளிப்படையாக உங்களிடம் கேட்க வேண்டும் இன்னொன்றை உங்கள் காதுகளுக்கு மட்டும் அறியும்படி கேட்கவேண்டும்.
ராணி சம்மதித்தாள் ,முதல் கேள்வி
“நாம் நேசிக்கு உறவொன்று நம் குணங்குறிகள் பிடிக்காமல் , நம்மை உடைந்து போகுமளவிற்கு செய்துவிட்டு பிரிந்து போனபிறகு அந்த உறவு வேண்டும் என்று நாம் எதற்காக அடம்பிடிக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா ?”


இவ்வாறு ஒரே மூச்சில் முதல் கேள்வியை கேட்டு முடித்து விட்டு சட்டை பயினுள் கையை விட்டு மனக்கோளத்தை தடவிக்கொடுத்தாள்
ராணி

“அழகிய பெண்ணே  , நாம்  எம்மை விட்டுச்சென்றவரை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தும் அவர் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் , நம்முடைய சுயத்தை ஒருவர் புறக்கணித்தார் என்ற அவப்பெயரை நீக்கிகொள்ளவேயாகும் அங்கே பெரும்பாலும் வேறேதுமிருக்கப்போவதில்லை”


இரண்டாவது கேள்வியை கேட்பதற்கு ராணியின் சிம்மாசனப்படிகளில் ஏறி ராணியின் காதருகில் போய் நின்றாள் மெல்லிய குரலில்

”இளவரசர் புரவியில் வந்து தங்கள்  முன் குதித்த போது நீங்கள் மெய்யின் இதர அங்கங்களை மூடாமல் மார்புகளைமட்டும் சட்டென மறைத்து கொண்டதேன் ?”

ராணி மெல்லிய புன்னகை ஒன்றை வீசினாள், பின் அவளுடைய காதுகளிற்குள் குனிந்து, அந்த பதிலை சொன்னாள்.

பதிலைக்கேட்டதும் மண்டபமே அதிரும்படி அவள் பேய்ச்சிரிப்பொன்றை வெளிப்படுத்தினாள் , சட்டை பைக்குள் கையை விட்டு மனக்கோளத்தை எடுத்து , யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தரையில்  வேகமாக எறிந்தாள் ,அந்த நீல தசைக்கோளம் நீலத்திராவகம் தெறிக்க உடைந்து சிதறியது. அது உடைந்து போகவும் அவளுடைய முதுகுப்பக்கம் இருந்து ஆடையை கிழித்தவாறு இரண்டு பெரிய கரிய இறக்கைகள முழைத்தெழுந்தன.
அடுத்தகணம் சிறகுகள் விரிய சிரிப்பை சற்றும் குறைக்காதவளாய் யன்னலொன்றை உடைத்துக்கொண்டு அவள் எழுந்து பறந்தாள்.

-யதார்த்தன் -


சனி, 5 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 4:33 AM


அனுக்குட்டி என்னிடம் கதை கேட்கும் அழகே அலாதியானது. தன் பிஞ்சுக்கால்களை நெஞ்சிலூன்றி  ஏற்றனவே துளையுள்ளவென் இதயத்துக்கு நேரே ஏறி அமர்ந்துகொள்வாள். இரண்டு வயதுக்கு மீறிய எடை அவளிடமிருக்கும் . நன்றாக சப்பணம் இட்டு அமர்ந்துகொண்டு  முட்டைக்கண்ணை சிமிட்டுவாள். லேசாய் மூச்சடைக்கும் மெல்ல அவள் பாரம் பழகிவிடும். நான் உடலை அவளின் தேகத்தை தாங்குவதற்கு தயார்ப்படுத்தும் போது அவள்

“டேய் கச டொல்லு ”

என்பாள்.எப்போது அதே சுர இசையுடன் அவள் கேட்கும் போது மிகப்பிரியமான ஒரு உணர்வு அவள் மெத்தென அமர்ந்திருக்கும் நெஞ்சுக்குள் பரவிச்செல்வதை உணர்வேன்
அன்றைக்கும் அப்படித்தான் , எங்கோ ஒரு மூலையில்  அனார்கியின் டெடிபியரின் கையில் சாத்தப்பட்டிருந்த என்னுடைய பழைய கவிதைகள் அடங்கிய  பிரவுன் கலர் டயரியை எடுத்து வந்து நெஞ்சிலேறிக்கொண்டாள்.

சிறிது நேரம் அவள் என்னுடன் எதுவும் பேசவில்லை, அந்த டயரியை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டாள். முகர்ந்து பார்த்தாள் , தன் சிவந்த பிஞ்சுச்சொண்டினால் (உதடுகள்) அதன் விளிம்பைக்கடித்தாள். சட்டென்று அந்த டயரியை இறுக்கி அணைத்துக்கொண்டாள். இறுதியாய் யாருடைய ஸ்பரிசத்திற்கு அது பழக்கப்பட்டிருந்ததோ அந்த குணங்குறிகளை , மெல்லுணர்வினை , வாசத்தை , சுவையை , அந்த டயரியில் நானும் உணர்ததுண்டு. என்னை விட அனுகுட்டிக்கு அதன் நெருக்கம் ஸ்பரிசம் என்பன இன்னும் கிளர்ச்சியையூட்டி இருக்க வேண்டும் , அதனை இறுக்கமாக நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு தலையை டயரி விளிம்பில் சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.


சிறிது நேரம் அப்படியே இருந்தாள் . மெல்ல கண்மலர்ந்து டயரியை திறந்தாள்

இத படி என்றாள்

முதல் பக்கம்

“ஓர் இதயம் கருக்கொள்கிறது”
-திரடத்தூய்மன் –

“அதென்னா  பேர் ?
“என்ர முதல் புனை பேர் ”
“எத்தினை மாத்துவ ?”
“ரெண்டுதான்”
“லூசு தானே நீ”
“ம்ம்”
“என்ன எழுதி வச்சிருக்க ”
“கவித”
பக்கத்தை உருட்டினாள்”
“ஏன் கொஞ்ச பேப்பர கிளிச்சு வச்சிருக்க ?”
“கிளிச்சதெல்லாம் அனார்க்கிக்கு முதல் எழுதினது”
“ம்ம்”
அனார்க்கிக்கு எழுதியவற்றின் கீழ் நான் என்னுடைய பெயரை எழுதவில்லை என்னுடைய பெயர் இல்லாத அவளுக்கான கவிதைகளின் கீழ் தன் அழகான கையெழுத்தால் என்னுடைய பெயரை கிறுக்கியிருந்தாள்.
அனு தன் பிஞ்சு விரல்களால் அனார்க்கியின் எழுத்துக்களை தடவியபடி
“வடிவான எழுத்து”
”எது அனாக்கிக்கு எழுதின முதல் கவித ? “

அதை அவளே தன் கையால் எழுதியிருந்தாள்

அந்த கானல் நதியை
கடந்து வா
விரைவாய்
என் ஓடத்தின் இரண்டாம் துடுப்பு உனக்காய்
காத்திருக்கு.
-திரடத்தூய்மன் –


மேலும். பக்கங்களை புரட்டினாள்.  

கவிதைகள்

 கவிதைகள்

கவிதைகள்



கடைசிப்பக்கத்துக்கு முதல் பக்கம்

அவள் வைரமுத்துவின் பாடல் வரிகளை பென்சிலால் எழுதி தன் பெயரை கீழே கிறுக்கி திகதியிட்டிருந்தால், அடிக்கடி அவள் முணுமுணுக்கும் பாடல் என்று அனுவிற்கு சொன்னேன் , அனு சிரித்தாள்.


ஏன் இத அவளிட்ட இருந்து வாங்கின்னி ?

எவ்வளவு கொடுமையான நாளாக அமைந்து விட்டது அது. அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டு இறுதியாய் ஒரு பெரிய வாளை எடுத்து வீசினேன். இன்னும் ஆயிரம் வருஷங்கள் நரகத்தில் உழ அந்த வார்த்தை கொண்டுவந்த பாவமே போதுமாயிருந்தது.
“என்ர கவிதை புத்தகம் உன்னட்ட இருக்கு , அத வச்சிருக்கிற தகுதி உனக்கு கிடையாது குடுத்து விடு”

அனு என்னை பார்த்தாள் , அவளுடைய கண்களுடன் என்னுடைய கண்கள் சந்தித்தன, அவளுடைய கண்களை பார்க்க கூசியது, தலைக்குளிருந்து பெருங்கூச்சலொன்று எழுந்தது கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.
திறந்த போது  ,
அனு அப்போது கடைசி பக்கத்தை சுட்டிக்காட்டினாள், அனார்க்கி ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியிருந்தாள்.


death has got something to be said for it . there is no need to get out of bed for it. wherever you may be
they bring it to you free.


நான் அதை சத்தமாக படித்து முடிக்கவும் , அனு அந்த டயரியை என்னிடமிருந்து  விடுக்கென பிடுங்கிக்கொண்டு வேகமாய் என் நெஞ்சிலிருந்து இறங்கி அருகில் இருந்த கட்டிலில் ஏறி அந்த டயரியை தன் நெஞ்சோடு அணைத்துகொண்டு , கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.



யதார்த்தன்

2015.may.03