வவுனியா ,நெழுக்குளம்
வன்னியை விட்டு வெளியேறியவுடன் நாங்கள் தங்கவைக்கப்பட்ட முதலாவது நலன்புரி முகாம்.
நெழுகுளம் முகாமிற்கு வந்து 4 மாசத்திற்கு மேலாகி விட்டது.இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு ஓ.எல் பரீட்சை.முகாமிற்கு வெளியில் எங்கட வயது இருக்கும் பிள்ளைகள் பள்ளிகூடம் ஸ்பெசல் கிளாஸ் டியூசன் என கற்று கொண்டிருந்தார்கள்.நாங்கள் தண்ணீர் எடுபதற்கும் சாப்படிற்கும் லைனில் நிற்பது போக மீதி நேரங்களில் கரம் போட் விளையாடுவது.இரவில் பெரிய திரையில் போடப்படும் ஏதோ ஒரு தமிழ் சினிமாவை பார்த்த படி நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தோம் .அப்போது முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் சும்மா சம்பளம் எடுக்கிறம் என்று மனம் உறுத்த ராணுவத்திடம் அனுமதி வாங்கி முகாமில் இருக்கும் ஓ எல் மாணவர்களுக்கு பாடம் எடுத்தனர்.
ஒரு பெரிய வேப்ப மரத்தின் கீழ் தறப்பாள்களை விரித்து கிட்ட தட்ட 40 மாணவர்களுக்கு மேல் படிக்கத்தொடங்கினோம். எனக்கு புது நண்பர்கள் அறிமுகமானார்கள் .அருண் லூக்கு டிலக்சன் ,ஜூலியட் ,பவதாரணி இப்படியாக. தர்ஷிகாவும் அறிமுகமானாள். அவள் எனக்கு கணிதம் சொல்லிதருவாள் அவள் எனக்கு நல்ல தோழியானாள்.அவள் மேல் எனக்கு பிரியம் வர அவளின் பேயரிலிந்து ஏராளமான இத்யாதி காரணாங்கள் இருந்தன.
அன்று அவளிற்கொரு பரிசை எடுத்து வந்திருந்தேன்.
அன்று காலையில் நான் அதனை அவளிற்கு பரிசளித்தபோது அதனை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள் . லேசாய் மஞ்சள் படிந்து கிடந்த அந்த யானை தந்த லொக்கட்டை சீவிச்சீவி நான் மிக வெண்மையாக அடித்திருந்தேன். சமர வீர என்ற அந்த வயதான பொலிஸ்காரரிடம் நான் அந்த இரண்டு விரலிடை கூட இல்லாத யானைத்தந்தத்தை வாங்குவதற்கு எத்துனை பிரயத்தனங்களை மேற்கொண்டேன் .அது எனக்கு கொஞ்சம் மரியாதைகுறைவான ஒரு செயலாகவே பட்டது .எனிமும் அந்த மனப்பாங்குஅவள் அவதனை கண்டவுடன் அவள் கண்கள் உற்பத்தி செய மகிழ்ச்சிக்குள் மூழ்கி காணாமல் போயிருந்தது.
THARSHIKA என்று பொறிக்கபட்ட அந்த யானை தந்தத்தினை லேசாய் அவள் விரல் ரேகைகள் தடவிக்கொடுத்தன.
“எங்காலை உனக்கு தந்தம் ? ”
“யானை ஒண்டு வேட்டையாடின்னான் ”
“எங்க இந்த முகாமுக்கையோ ?”
“ஓம்”
“நம்பிட்டன் ”
“தங்ஸ்”
“சொல்லடா ..எங்காலை ?”
“சமர வீர ட்ர வாங்கின்னான் ”
“அந்த மனுசன என்ன சொல்லி மயக்கின்னி ? அதுவும் உன்ர அரை குறை இங்கிலீசால ?”
“ஹிம்”
”தந்தம் வச்சிருந்தா குற்றமெல்லோ ? ”
“ ஒமடி இந்த ஒண்டரை இஞ்சி தந்தத்துக்கு என்னை தூக்கில போட போறாங்கள் ”
“வெவ்வ்வேவ்வே ”
கழுத்தில் எபோதும் இருக்கும் முருகன் டாலர் தொங்கிய கருப்பு நூலில் என் தந்த லொக்கட்டை கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டாள்.
சரி வா கிளாசுக்கு போவம் என்றேன். டெண்டுக்கு போய் கொப்பி எடுக்கோணும் . நடந்தாள்.தொடர்ந்தேன்.
தர்ஷியின் கூடாரம் முகாமின் பின் பக்கம் இருந்த நீர் எடுக்கும் குழாய் கிணற்றின் பக்கம் இருந்தது.என்னுடைய கூடாரம் முகாமின் முன் பக்கம் உள்ள குழாய் கிணற்றடியில் இருந்தது.
அவளுடைய கூடாம் வர உள்ளே நுழைந்தாள் கூடாரத்தின் வெளியே உள்ள மர நிழலில் அவள் அம்மா தர்ஷியின் சகோதரியொருந்த்தியின் தலையில் வகிடு பிடித்து தலை வாரிக்கொண்டிருந்தாள். என்னைக்கண்டதும்
”தம்பி காட் வாங்கி வச்சிருக்கிறன் ”
என்றாள் இரகசியமான குரலில்
“சரி அன்ரி ”
“:எத்தினை மணிக்கு கதைக்கலாம் ?”
“படம் போட்ட பிறகு வாங்கோ அன்ரி ”
“சரி தர்சின்ர அண்ணா காசு போட்டவனோ எண்டு கேக்கோணும் ”
“ஓம் அன்ரி தர்ஷி சொன்னது ”
“கவனமா இருக்கோணும் நேற்று கிச்சின் பல சார்ச் போட்ட எண்டு யாற்றையோ போன் பிடிபட்டு போச்சு ”
“ஓம் அன்ரி தெரியும் ”
நாங்கள் முகாமில் மொபைல் போன் வைத்திருக்க தடை.எனினும் ஒரு சிலர் இரகசியமாக வைத்திருந்தனர்.நானும் ஒரு NOKIA 1100 வைத்திருந்தேன்.முகாமில் ஒவ்வொரு நாளும் இரவில் மல்டி மீடியா புரோஜெக்டர் வைத்து எதோ ஒரு தமிழ் படம் போட்டனர். இரவில் பெரும்பாலான ரெண்ட்களில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அந்த இடைவெளிக்குள் நாங்கள் டெண்ட்களில் போன் கதைத்து கொள்வோம், பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பவர்களுடன் பொருளாதார தேவையின் பொருட்டு பேச வேண்டியிருந்தது.
உள்ளே போன தர்ஷி வெளியே வந்தாள்.
வகுப்பு நடக்கும் வேப்ப மரத்தடி நோக்கி நடந்தோம்,
”அம்மா என்னவாம் ?”
“போன் கதைக்கோணுமாம் ”
”ஓமடா இரவுக்கு ஒருக்கா கதைக்கோணும் அண்ணாவோட“
“சரி டி”
தர்ஷியின்கூடாரத்திற்கு அடுத்ததாக இருந்த கூடாரத்தை கடக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான வாடை என் நாசியை தாக்கியது
“என்னடி மணக்குது ? ”
“என்ன மணம் ? ”
“உனக்கு மணக்கேலையே ஏதோ அழுகின மணம் ”
“முகாம் எண்டா அப்பிடிதான் பேசாம வாடா ”
அதட்டினாள்.
வகுப்பு முடிந்ததும் தர்ஷிகா தன் தோழிகளை அழைத்துக்கொண்டு எங்கோ போய்விட்டாள் அருண், லூக் டிலக்சன் , இருவரும் என்னிடம் வந்து
“டேய் இரவுக்கு ஒரு மிசன் இருக்கு ”
(பாணிற்கு வெங்காயம் முட்டை எல்லாம் சமயலறையில் இருந்து சுட்டு வருதல், போனிற்கு துப்பரவுக்கு வரும் தொழிலார்களை பிடித்து காட் வாங்குதல் , காய்ச்சல் தலையிடி எண்டு பொய் சொல்லி கொஸ்பிட்டலுக்கு பதிஞ்சு அம்புலன்ஸில் இராணுவ பாதுகாப்புடன் போய் வவுனியா ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருக்கிற சீடி கடையில் இங்கிலிஸ் பட டீவிடி வாங்கி வந்து சமரவீர வின் லப்டொப்பில் படம் பார்த்தல் முதலான சாகசங்களை நாங்கள் மிஷன் என்று அழைத்தோம் ஒவ்வொரு மிஷனுக்கும் ஒவ்வொரு பெயர் வேறு வைக்கப்படும்)
”என்ன மிசன் மச்சான் ? ’
“ஆப்பரேசன் அல்க கோல் ”
என்றான் லூக் ரொசாந்.
“அல்ககோலா ?”
“சாராயம் டா ”
“என்ன ? வாங்கி குடிக்க போறமா ? ”
“இல்லயடா பிடிக்க போறம்” அருண்.
“தெளிவா சொல்லடா”
“முகாமுக்க ஒரு இடத்த சாராயம் காய்ச்சி வில்படுது ”
“போடா முகாமுக்க என்னெண்டு காய்ச்சுறது ?”
“காய்ச்சுறாங்களாடா ..”
“உனகென்னண்டு தெரியும் ?”
”லூக்க்கின்ர அப்பா நேற்று குடிச்சிட்டு வந்தவராம்”
“டேய் ஆமி ஆரிட்டயும் வாங்கி குடிச்சிருப்பார் ”
“இல்லையடா இண்டைக்கு இரவு அவரை பின் தொடர்றம் கண்டு பிடிக்கிறம்.”
“சரி.”
இரவு படம் போடும் வேளையில் தர்ஷியும் அவள் தாயும் எங்கள் கூடாரத்திற்கு வந்தனர். அவர்களுக்கு நம்பரை டயல் செய்து கொடுத்துவிட்டு .ஆப்ரேசன் அல்க கோலிற்கு புறப்பட்டேன்.
தர்ஷி
“எங்க போற ?”
“அருணாக்களிட்ட ”
“படம் பாக்கவோ?”
“இல்லை வந்து சொல்லுறன் ’
“ம்ம்”
கதைச்சிட்டு போனை அம்மாட்ட குடுத்திட்டு போ.என்றேன் அவள் தலையாட்டினாள்.
நாங்கள் திட்டமிட்ட படி லூக்கின் அப்பாவை பின் தொடர்ந்தோம் .
அவர் நேராக முகாமின் பின்பக்கம் இருந்த தண்ணீர் குழாய் இருந்த பக்கமாய் போனார்.தரிஷியின் கூடாரத்தை கடந்து அடுத்ததாக இருந்த கூடாரத்தினுள் நுழைந்தார். வெளியில் வரும்போது ஒரு சோடா போத்தல் நிறைய இளம் மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்றுடன் வெளிப்பட்டார் நேராக அந்த விளக்கு வெளிச்ச மற்ற ஒரு இடத்திற்கு சென்று அதனை குடித்து தீர்த்தார், எங்களுக்கு பரம திருப்த்தி நாங்கள் தேடிவந்தது தெரிந்து விட்டது.லூக் தந்தையை கொஞ்சம் பரிச்சமான கெட்ட வார்த்தையால் திட்டினான். மூவரும் காலையில் பொலிசிடம் சொல்லி விடுவதென்ற முடிவுடன் கலைந்து சென்றோம்.
ஒப்ரேசன் அல்ககோல் ஏறக்குறைய முடிந்துவிட்டது.
அடுத்தநாள் காலையில் முகாமே கதி கலங்கியது .அந்த கூடாரத்தை சுற்றிவளைத்த பொலிசார் இரண்டு இளைஞர்களை பிடித்து அடித்து அவர்களின் தலையில் சாராய கான்களை வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று பொலீஸ் வானில் ஏற்றி கொண்டு சென்றனர்.நாங்கள் மூவரும் ப்ரும் சமூக களையெடுப்பை நிகழ்த்தி விட்ட வெற்றிகளிப்பில் படிக்கும் இடத்திற்கு வந்தோம்.அங்கே தரிஷிகா அவள் தோழிகளுடன் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
“எப்படி எங்கட மிசன் ?” என்றேன் அவளிடம்
என்ன என்று கேட்டாள்
சொன்னென்.
சட்டென்று அவள் கை எழுந்து என்கன்னத்தில் அறைந்தது.
நிலை குலைந்து விட்டேன். ஒரு கணம் குலைந்து நிமிர்ந்தேன் கோபம் பீறிட்டு வர
ஏன் இப்ப அடிச்சனி என்று அவளை பிடித்து உலுக்கி பிடித்து தள்ளி விட்டேன். அவள் பக்கத்தில் இருந்த வேப்பமரத்தில் கை உரச விழுந்தாள்.அழுதாள்.
“டேய் இப்ப ஏன் அவளை தள்ளி விட்டனி ?” பவதாரணி மல்லுக்கு வந்தாள்.
”சும்மா ஏன் இப்ப அடிச்சவள் ?”
“நீ செய்த வேலைக்கு பின்ன என்ன செய்யிறது ? ”விம்மிய படி சொன்னாள்.
அவள் கைகைல் சிராய்ப்பு சிவப்பாய் கசிவது தெரிந்தது.
“நான் என்ன செய்தனான் ? சாரயம் காய்சினவங்களை பிடிச்சு குடுத்தது பிழையோ ?”
“அந்த பெடியளின்ர அக்கா மண்ணெண்ணை குடிச்சிடா தெரியுமோ ?” பவதாரணி சீறினாள்.
அதுக்கு நான் என்ன செய்யிறது அது காய்ச்ச முதல் யோசிச்சு இருக்கோணும்.
”டேய் அவையள பற்றி உனக்கு என்னடா தெரியும் ?” தர்ஷி.
”என்ன? ஏன் இப்ப துள்ளுற ?
”உனக்கென்ன காசு இருக்கு. அப்பா இருக்கு .எங்களுக்கு அண்ணா அனுப்புறான் ” ஆனா அதுகளுக்கு ஒருத்தரும் இல்லை .என்னெண்டு அதுகள் சீவிக்கும் ? “
அங்க சாராயம் காய்ச்சி விக்கிறது எனக்கு எப்பவோ தெரியும் அந்த அக்கா அடிக்கடி அழுவா என்னட்ட தங்கட தலை விதிய சொல்லி . அவாச அண்ணை மார் பாவம் எண்டு.உனக்கு அதெல்லாம் தெரியாது. பாவம் அந்த அக்கா. அவமானத்தில மண்ணெண்ணை எடுத்து குடிச்சிட்டா.
நான் எதுவும் பேசவில்லை .
இன்னும் கொஞ்சம் என்னை திட்டினாள் .எனக்கு எதுவும் கேட்கவில்லை.
“இனி என்னோட கதைக்காத ”
என்றவள் வேகமாய் நடந்து போய் விட்டாள்.
“சரிதான் போடி ”
எனக்கு கோபம் ஆறவில்லை எனக்கு அந்த அக்கா மண்ணெண்ணை குடித்ததை பற்றியோ இல்லை சாராயம் காய்ச்சியவர்கள் பற்றியோ அவர்களை பற்றியோ யோசிக்கவே தோன்றவில்லை. எனக்கு அவ்வளவு பேரின் முன்னால் ஒரு பெண் பிள்ளையிடம் வாங்கிய அறை தான் பெரிதாக தெரிந்தது. என் தன்முனைப்பு அன்று இரவு முழுவதும் பூரணமான வெறுப்பிற்கும் கோபத்திற்கும் என்னை கொண்டு சென்றது.
காலையில் சூரிய வருகைக்கு முதலே எழுந்து எங்கள் கூடாரத்திற்கு சற்றுத்தள்ளி இருக்கும் குழாய் கிணற்றிற்கு அருகில் உள்ள சிறி மூங்கில் புதரின் கீழ் காட் போட் மட்டைகளின் மேல் அம்ர்ந்து மூங்கிலுக்கு முதுகை கொடுத்து சாய்ந்திருந்தேன்.
“கன்னத்தி விழுந்தது இன்னும் உள்ளே வலித்து கொண்டிருந்தது ”
அபோது தர்ஷிகாவும் அவள் சகோதரிகள் இருவரும் தண்ணீர் குடங்களுடன் வருவது தெரிந்தது,நான் பார்த்தபடியிருந்தேன். அவர்களின் தண்ணீர் குழாய் ஏதோ சேதபட்டு இருக்க வேண்டும்.அதுதான் இங்கே வருகிறார்கள்.
என்றுமில்லாத வாறு நான் அவளை நன்றாக பார்த்தேன். வானம் லேசாக மஞ்சளடிக்க தொடங்கியிருந்தது.அந்த மெல்லிய மஞ்சள் ஒளியில் அவள் தெளிவாக தெரிந்தாள். கால்வரை நீண்டு தரையை தொட்டும் தொடாமலும் அலையும் கறுப்பு பாவாடை யும் கறுப்பு மேற்சட்டையும் அணிந்திருந்தாள். அவள் வெள்ளைத்தேகம் மஞ்சளொளியில் லேசாய் பசாடையடித்தது. முகத்தில் எந்த உணர்வுமில்லை.இன்னும் அவள் முகம் கழுவியிருக்கவில்லை. கண்கள் அழுது வீங்கி இருந்தன. நான் மூங்கில் மீது சார்ந்திருப்பதை கண்டிருப்பாள். முகம் இறுகி இறுகி கொண்டே சென்றது. நடந்து வந்து குடத்தை வைத்தாள் அவள் தங்கை தண்ணீர் பம்பியை அடித்து தண்ணீரை நிரப்பினாள். மூன்று பேரின் குடமும் நிறைந்து முடிய ,அவள் சகோதரிகள் நடக்க தொடங்கினர். என்னை பார்த்தபடி குடத்தை தூக்க போனாள் குடம் கைகள் நழுவி அவள் உடலெங்கும் நீர் தெறிக்க விழுந்து உருண்டது அவள் உடை நனைந்து விட்டது.
“போங்கோ நான் அடிச்சு கொண்டு வாறன் ” சகோதரிகளிடம் சீறினாள்.
நான் பார்த்த படியிருந்தேன்.
மறுபடியும் தண்ணீரை நிரப்பினாள் . குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தாள் சட்டென்று என்னை நோக்கி வந்தாள். மிக வேகமாக வந்தாள் கழுத்தில் இருந்து கறுப்பு கயிற்றை பிடுங்கி என் முன் போட்டாள்.
எனக்கு சினம் தலைக்கேறியது சட்டென்று அந்த தந்தத்தை எடுத்து பல்லில் வைத்து கடித்தெறிந்தேன்.
அவளிற்கு அழுகை மார்பபிலிருந்து எழுந்துவந்து தொண்டையில் வந்து நின்று விம்மியது . திரும்பி வேகமாய் நடக்க தொடங்கினாள்.
நீரில் நனைந்த அவள் பாவாடையில் கால்கள் பட்டு ஓசை ஒன்று சீரான சந்தத்தில் கிளம்பி வந்தது. அது ஒரு பெரிய பறவை தன் பிரமாண்டமான சிறகுகளை உதைப்பது போன்றிருந்தது. அவள் நடக்க நடக்க அந்த ஈரப்பாவாடை யின் ஒலி பறவையொன்றின் சிறகுகள் தான் என்றே நினைக்க தோன்றியது
மிக லாவகமாக சீரான சந்தத்துடன் அந்த பறவைதன் சிறகு விரித்தலை நிகழ்த்தியது .
பிறகு
பறவையின் உருவம் மறைந்த பின்னரும் சிறகுச்சத்தம் நிற்கவேயில்லை.
#யதார்த்தன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக