புதன், 7 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 7:09 AM


01.
விளிம்புக் கதை
……………………………………………….
என் இடது கை மணிக்கட்டுக்கு அருகில் இருக்கும் மொளியில் இப்பொழுதும் அந்த தழும்பு இருக்கிறது. நான் ஜீவனேசனை மறக்காமல் இன்று வரைக்கும் எழ்ழுதும் புனைவு யாவற்றிலும் அவனௌடைய பெயரை சேர்க்க முற்படுவதற்கு இந்த தழும்பும் ஒரு காரணம். அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம்.ஜீவனேசன் என் நண்பன் . வகுப்பில் குண்டன் அவன் தான் . அவன் இருக்கும் தைரியத்தில் நான் ஒரு குட்டி தாதாவாக அப்போது வகுப்பில் உலவினேன். எப்போது ஏ வகுப்புடனோ அல்லது சீ வகுப்புடனோ எங்களுக்கு ஆகாது நாங்கள்  பி வகுப்பு. நானு ஜீவந்நெசனும் யாரிடமாவது வம்பு செய்து தினமும் அதிபர் அறை  வாசலில் போய் நின்று பூரசங்கம்பால் நீலக்காற்சட்டையிலும் ,உள்ளும்  மூன்று நாலு தழுப்புகளுடன் திரும்புவோம்.
  வகுப்பில் சீசனுக்கு ஒரு போட்டி வரும் , மாபிள்கள் சேர்ப்பது , தனி கலர் மாபிள் , கிக்கிரி மாபிள் , தண்ணி மாபிள் இப்பிடி விதம்விதமாய் மாபிள் சேர்த்து “போளையடிப்போம் ”(இந்திய தமிழில் கோலி குண்டு  விளையாடுதல் ) , அல்லது  நாங்கள் அப்போது “வாஞ்சிநாதன் துவக்கு ” என்று பெயரிட்டிருந்த விளையட்டு போள்ஸ் பிஸ்ரல்கள் வாங்கி ”ஆமியும் இயக்கமும் “ சண்டை போடுவோம் , அல்லது றெஸ்லிங் காட் சேர்ப்போம் , யோன்சீனா , பஸ்ரிஸ்ரா , அண்ட ரேக்கர் என்று காட்கள் சேர்த்து  கண்ணாடி தாள் பேர்ஸ்கள் வாங்கி ஒன்றோடு ஒன்று இணைத்து அதனுள் அந்த படங்களை சொருகி பெருமையாய் காட்டியபடி திரிவோம் இப்படித்தான் கொஞ்ச நாள்  புது படம் போட்ட லேஞ்சி (கைக்குட்டை )  வைத்திருக்கும் சீசன்  ஆரம்பமானது, பஸ்ரிஸ்ரா , யோன் சீனா , ஹாரிபொட்டர் போன்ற படங்கள் போட்ட பெரிய லேஞ்சிகல் கடைகளில் தொங்கின.
அம்மாவிடம் கேட்டால் காசு தரமாட்டாள் . லேஞ்சி கிடக்கு தானே என்பாள் . அத்தோடு அக்காவும் தம்பியும்  என் எண்ணை வடியும் கரு கரு முகத்திற்கு ஏன் லேஞ்சி என்று நிச்சயமாக நக்கல் அடிப்பார்கள்.  எனவே காசு நான் தான்  ஒழுங்கு செய்ய வேண்டும் . அப்பாவிடம் ஒரு குணம் , வேலை முடிஞ்சு வீட்டுக்குவந்து  ஈசி செயரில் கொஞ்ச நேரம் சாய்ந்து கொள்வார் , அந்த சமயத்தில் தம்பியோ நானோ அப்பாவின் மடியில் ஏறிக்கொள்வோம். அப்பாவை கொஞ்சி விட்டு பொக்கற்றை தடவி ஐம்பதோ நூறோ எடுத்துக்கொள்வோம். ஏனெனில் அனறைய பணம் அம்மாவின் கைக்கு போய்விட்டால் , அரச வங்கியில் லோன் வாங்க போனது போல் ஆயிரதெட்டு விளக்கம் சொல்ல வேண்டி வரும்.
அன்று என்னுடைய கைக்கு அப்பாவிடமிருந்து 100 ரூபா கிடைத்தது.
நேராய் போய்  எனக்கு பிடித்தமான “ஹாரிபொட்டர்” லெஞ்சி வாங்கி கொண்டேன்.
மறுநாள் என் ஏழாம் பாடம் முடியும் போது என் லேஞ்சி காணாமல் போயிருந்தது. எட்டாம் பாடம் வரை தேடி விட்டேன். ஜீவனேசனும் என்னுடன் சேர்ந்து தேடினான். காணவில்லை. வகுப்பில் எல்லார் முகங்களிலும் திருட்டு களையும் ஒரு எக்காள சிரிப்பும் இருப்பது போல் எனக்கு தோன்றியது. அப்போது தான் ஒருத்தன் என்னிடம் இரகசியமாக ஜீவ்னேசன்ர  பாக்குகுள்ள பார் . என்றான்  , நானும் ஒருவேகத்தில் ஜீவனேசன் பையை திறந்து பார்த்தேன் . நான் ஜீவனேசன் பையை திறக்கும் போது அவன் பாய்ந்து வந்து பையை பிடுங்கிக்கொண்டான். நான் விடாமல் அவனிடமிருந்து அதனை பறித்து கீழே கொட்டினேன்  என் லேஞ்சி திரளாக சுற்றப்படு புத்தகங்களுடன் கீழே உருண்டது.
நான் ஜீவேசன் முகத்தில் பாய்ந்து குத்தவும் அவன் என்னை பிடித்து தள்ள என் மனிக்கட்டில்  மேசையின் இரும்பு கம்பி குத்தி இரத்தம் வரவும்
பாடசாலை கடைசி மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

02.
மையக்கதை
………………………………………………..
“தம்பி நல்ல வளமா இருக்கிற போல அண்ணாவ கவனிச்சிட்டு போ”
“சத்தியமா இல்லையண்ணை பஸ் காசு மட்டும் தான் கிடக்கு ”
“டேய் இண்டைக்கு மகாபொல(பல்கலைகழக மாணவர்களுக்கான அரச உதவிப்பணம் ) எடுத்திருப்பீங்கள் தானே சும்மா விடாத”
“இல்லையண்ணை , எனக்கு பேசரிதான் ”
“அப்ப உன்னட்ட இல்ல? ”
“இல்லையண்ணை”
“செக் பண்ணட்டோ ?”
“பணுங்கோ”
“சரி போ , எப்ப உனக்கு பேசறி ? ”
”தெரியாதண்ணை”
“டேய் உடைச்சு விட்டிடுவன் நாளைக்கு பேசரி எண்டு போட்டிருக்கு ”
“உண்மையா தெரியாதண்ணை”
“நீ நாளைக்கு பேசரி எடுத்ததும் , நேரா அண்ணாட்ட வந்து என்னோட ஒண்டும் கதைக்காம என்ர கொப்பிக்க  இரு நூறு வச்சிட்டு  போற ”
“சரி அண்ணை”
”சரி போ “

மச்சான் காசு பறிக்கிறாங்கள்டா … பு ..மோக்கள். காசு கவனம்.
எனக்கு அப்போதுதான் ராக்கிங் பிசாசுகளின் ஞாபகமே வந்தது. கையில் இருந்த நாலாயிரத்தை பர பரவென சுருட்டினேன் . லேஞ்சியை எடுத்து வரித்து அதனுள் பணத்தாள்களை தட்டையாக்கி வைத்தேன். லேஞ்சியை நான்காய் மடித்து பொக்கற்றினுள் வைத்துக்கொண்டேன்.
டேய் மச்சான்  பிச்சைகாரர விட மோசமடா இவங்கள்
“தண்ணியடிக்கிறதுக்குடா”
“நான் எழுதிக்குடுக்க போறன் மச்சான் அன்ரி ராக்கர் எண்டு”
“பொறட்டா இயர் முடியுதானே”
“முடிஞ்சா என்ன ?”
“எழுத்திக்குடுத்தா  நீ பிறகு ராக்கிங் செய்யேலா ”
“நான் இவங்கள மாதிரி ஈன பிறவி இல்லை, நான் ராகிங் செய்யவும் மாட்டன் . எங்கட பச்சில யாரையும் செய்யவும் விடமாட்டன்”
“பாப்பம், இப்பிடி பெஸ்ட் இயர்ல சொல்லுறவங்கள் தான் தேட் இயர்;அ வந்து ராக்கிங் செய்வாங்கள்”
“பாப்பம்”
மச்சான் காசு கவனம் , பிச்சை காறர் நிக்கிறாங்கள்.
”உது கொள்ளையடா ”
“தன்மையா தான் கெக்கிறாங்கள் டா”
“பு……... உது தன்மையோ ?”
“காசுகேட்டு குடுக்காட்டி அடிக்கிறேல்லதானே”
”ஆனா பிறகு ஏதும் காரணம் சொல்லி  அடிக்க ரை பண்ணுவாங்கள்”
“பெஞ்ச் பக்கம் வேண்டாம் மச்சான் ”
“அவங்கள் நல்ல பெடியள்டா பயமில்ல வா”
“சில பேர்தாண்டா மோசம்”
“நல்ல குடும்பத்திலயும் நல்ல பள்ளி கூடத்திலையும் படிச்சிருக்காதுகள்”
“சரி வாடா போவம்.”

03.
சிதைவுக்கதை
…………………………………………………


மாலை ஐந்து மணிக்கு புன்னாலைகட்டுவன் பஸ்சில் இருந்து இறங்கி  யாழ் பேருந்து நிலையத்திகுள் நுழையும் போதுதான் , கசகசத்த வியர்வையை துடைக்க பொக்கற்றுகுள் கயை நுழைத்தேன் பொக்கற்றுகுள் போன் மட்டும் இருந்தது. திடுக்கிட்டவனாய் , விறு விறுவென மற்ற பொக்கற்றுக்களை தடவினேன்.லேஞ்சி பூரணமாய் தொலைந்து போயிருந்தது.அப்போதுதான் புன்னாலை கட்டுவன் பஸ்சில் ஒரு முறை பணம் இருக்கும் பிரக்ஞையற்று முகத்தை துடைத்தது ஞாபகம் வந்தது. அத்தனை கூட்டத்தில் லேஞ்சியை பொக்கற்றுகுள் வைக்கும் போது தவறியிருக்க வேண்டும் . உடனே மினி பஸ் நின்ற இடத்தை நோக்கி ஓடினேன் , மினிபஸ்சின் நிறம் கூட மறந்து போயிருந்த்து. எங்களை இறக்கிய இடத்தில் யாரோ ஒரு அழுக்கு சறம் அணிந்த பைத்திய காரன்  குடித்து விட்டு மயங்கிக்கிடந்தான் . அவனுடைய முக்கால் நிர்வாணத்தை எல்லோரும் பொருட்படுத்தாமல் கடந்து போய்கொண்டிருந்தனர்.
எனக்கு தலைவிறைத்தது. அநியாயமாக என் அசிரத்தை பேசறி காசை கொண்டு போயிருந்தது. சோர்ந்து போனவனாய்.  பேருண்டு நிலையத்தின் இரண்டாவது கொட்டகைக்குள் வந்து அமர்ந்தேன். அருகில் ஒரு முதியவர்  உறங்கிக்கொண்டிருந்தார்.மாலை வேளை வியர்வை தோய்ந்த முகங்கள் வேகமாய் இயங்கிக்கொண்டிருந்தன. நேரம் 5.20 காட்டியது. எனக்கு 5.45 இற்கு தான் பஸ். என்னை நானே திட்டியவாறு அமர்ந்திருந்தேன்.
அப்போது எனக்கெதிரே அந்த பெண் வந்து அமர்ந்தாள் , சிவப்பு பூ போட்ட சீத்தை சேலையொன்று அணிந்திருந்தாள் .அவளுடைய வற்றிய மார்புகளில் இளகிப்போய் நின்ற சிவப்பு மேற்சட்டை, கரிய மெல்லிய தேகம் ,மிதந்து உதட்டை மீறி எழுந்த பற்கள், கண்கள் இடிந்து போய் முகம் சுருக்கு விழ ஆரம்பித்திருந்தது . எப்படியும் ஐம்பது வயதிருக்கும். அப்போதுதான் குளித்திருப்பாள் போல் இருந்தது . அந்த மாலை வியர்வை மனிதர்களுக்கு மத்தியில் அவளிடம் இருந்து லக்ஸ் சோப்பின் வாசனை லேசாய் வந்தது. அவளை கண்டவுடன் வளை எங்கையோ பார்த்த ஞாபகம் எழுந்தது. கொஞ்ச நேரத்தில் இனம் கண்டுவிட்டேன் . அது மிகப்பழக்கப்பட்ட முகம் தான் , ஆனால் குளித்து இப்படி நல்ல சேலையுடன் அல்ல , மிக அழுக்காக வாரப்படாத தலையுடன் , பிச்சைகாரியாக அவளை பளை ப்ஸ் நிலயத்தில் ஓரிரு முறை கண்டிருக்கிறேன். முன்பு அடிக்கடி பரந்தனுக்கு போய்வரும் போது அவள் பஸ்சில ஏறி யாசகம் கேட்ப்பாள். இப்போது பரந்தன் போவதில்லையாதலால் அவளை ஞாபகத்தில் கொண்டுவர எனக்கு உடனே இயலவில்லை. அத்தோடு நாலாயிரம் ரூபா போன எரிச்சலில் வேறு இருந்தேன்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவளை அப்படி பார்க்க, அதை விட ஆச்சரியம் அவள் அடுத்ததாய் செய்த செயல்கள்.
தன் தோழில் கொழுவி இருந்த அளவான ரப்பர் பையை திறந்தாள் .  USA  என்று அமெரிக்க தேசிய கொடி அரைபங்கு கிழிந்து போய் அந்த பையில் பளிச்சென்று தெரிந்தது .அவள் பையில் கைவிட்டு எதையோ எடுத்தாள் . பணம்.
பத்து ,இருபது , ஐம்பது , நூறு ரூபா தாள்கள் மற்றும் ஒரிரு ஆயிரம் ரூபாய் தாள்கள்  அவளுடைய கைகளில் இருந்தன. மெதுவாக ஒரு பக்கம் திரும்பி சாய் சுவருடன் ஒட்டி இருந்து கொண்டாள் சுற்றுமுற்றும் பார்த்தாள் , நான் சட்டென்று போனில் ஏதையோ நோண்டுவது போல் பாவ்லா செய்தேன்.
அவள் யாரும் தன்னை கவனிக்க வில்லை என்பதனை உறுதி செய்துகொண்டு விறு விறுவென பணத்தை அடுக்கினாள் . மஹிந்த ராஜபக்சவின் படம் போட்ட புது ஆயிரம் ரூபா தாள்கள் அவை , முதலில் ஆயிரம் ரூபாய்களை எண்ணி சுருட்டி மடியில் அடுக்கினாள் , பின்னர் பரதநாட்டியம் ஆடும் தமிழ்ப்பெண்ணின் படம்போட்ட நூறுரூபாய்தாள்களை எண்ணி சுருட்டினாள் பின்னர் , ஐம்பது , இறுதியாக இருபது ரூபாய்தாள்களையும் பத்து ரூபாய் தாள்களையும் அடுக்கி சுருட்டி மடிமேல் வைத்தாள்.
அவள் எண்ணும் போது நானும் குத்துமதிப்பாக எண்ணியதில் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் வந்தது கணக்கு. நான் சுவாரஸ்யம் குறையாத கண்களுடன் அவளையே கவனித்தபடியிருந்தேன்.
எல்லா தாள்களையும் சுருட்டி மடியில் வைத்த பின்னர் , மீண்டும் அந்த அமெரிக்கன் பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்தாள்.
லேஞ்சிகள்.
பெண்கள் பயன்படுத்தும் சின்ன சின்ன லேஞ்சிகள் நீல பச்சை நிறங்களில் இருந்தன. ஐந்து லேஞ்சிகள். ஒவ்வொன்றையும் எடுத்து மணந்து பார்த்தாள்,  பின்னர் ஆயிரம் ரூபாய் தாள்களையும் ஐந்நூறு ரூபா தாள்களையும் பச்சை லேஞ்சியில் வைத்து சுற்றிகட்டினாள் பின்னர் இரண்டாவது லேஞ்சியில் ஐம்பது மற்றும் நூறு ரூபா தாள்களின் சுருளை எடுத்து சுற்றிக்கட்டினாள்.இறுதியாக இரண்டு இருபது ரூபா தாள்களை சுருளில் இருந்து உருவி எடுத்தாள் பின்னர் மீதி தாள்களை இன்னொரு லேஞ்சியில் சுற்றி மடிமேல் வைத்தாள் . பின்னர் மீண்டு ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் நான் இன்னும் போனை நோண்டிக்கொண்டிருந்தேன் சற்று தள்ளி வேறு சிலர் எங்கேயோ பார்த்து பேசிக்கொண்டிருந்தனர். திருப்தியடைந்தவளாய் .
ஆயிரம் ரூபாய் லேஞ்சி சுருளை எடுத்து தன் மாராப்பை நீக்கி இடது மார்புச்சட்டைக்குள் சொருகினாள் , பின்னர் அடுத்த இரண்டு லேஞ்சி சுருள்களையும் வலது மார்பு கற்சைக்குள் சொருகினாள். மீதமிருந்த லேஞ்சி ஒன்றாள் முகத்தை துடைத்துக்கொண்டாள் . துடைத்த பின் அதனை அமெரிக்கன்  பைக்குள் திணித்து கொண்டாள். பின்னர்  எஞ்சிய லெஞ்சியை எடுத்து ஒருமுறை முகர்ந்து பார்த்தாள் . பின் அதை கைகளில் சுருட்டி வைத்துக்கொண்டு. பைக்குள் கைவிட்டு ஒரு நொக்கியா போனை எடுத்து பார்த்தாள் அது ஓப் ஆகி இருந்தது.
”தம்பி நேரம் என்ன  ?”
“5.46”
சட்டென எழுந்து வேகமாய் கொட்டகையை விட்டு இறங்கி மினிபஸ் தரிப்பிடத்தை நோக்கி சென்று ஒரு மினி பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்வது தெரிந்தது . மெல்ல எழுந்து அந்த மினி பஸ்ஸின் அருகில் சென்றேன் , நான் அதனை நெருங்க அது புறப்பட்டு சென்றது.
அபோதுதான் ஏதோ ஞாபகம் வந்தவனாய் திடுக்கிட்டு 
நேரத்தைப்பார்த்தேன். ”5.55”

என்னுடைய பஸ் புறப்பட்டு பத்து நிமிடம் முடிந்திருந்தது.

-யதார்த்தன் -





0 கருத்துகள்:

கருத்துரையிடுக