சனி, 30 மே, 2015

Posted by விகாரன் On 6:45 AM


இப்பத்தியின் தலைப்பை பார்த்தவுடன் சமீபத்திய உரையாடல்களின் பிரகாரம் நான் வித்தியா  பற்றி  பேசப்போவதாக  நினைக்கலாம்.நான்  வித்தியா பற்றி பேசப்போவதில்லை . வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட வன்முறை புறவயமானது .அதாவது அது நேரடியான ஒன்று. சட்டத்திற்கும் சமூகத்திற்கும் அது குற்றம் என்றும் அநீதி  நேரடியாக தெரியும். ஆகவே  நான் எந்த காலத்தில் ஒரு பத்தியை எழுத தொடங்கினாலும் உலகின் எதோ இரு மூலையிலோ மூலைகளிலோ இருந்து நிறைய வித்தியாக்களை அடையாளப்படுத்தி கொள்ள முடியும். ஆதலால் நான்  வித்தியாவின் அநீதிக்கான ஆணி வேர்களை தேடிப்போக போகிறேன் அல்லது அந்த அநீதியின் உண்மை தங்கு தளங்களை பற்றி கூற போகிறேன் .நான் சொல்பவற்றில் பெரும்பாலானவை புறவயமாக சட்டத்துக்கோ நம் சமூகத்திற்கு குற்றமாக தெரியாதவை.ஆனால் வித்தியாவின் மீது நிகழத்தப்பட்ட அநீதிக்கு சற்றும் சளைக்காதவை.


நேற்று யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தின் பேரூந்தொன்றின் யன்னல் கம்பியில் தலையச்சாய்த்தபடி கண்களை மூடியிருந்தேன். தீடிரென ஒரு கரம் என் தோள்களில் மென்மையாய் தட்டியது .நிமிர்ந்தேன். ஒரு  இளம் தாய் கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள் வலது கரம் என்னை நோக்கி யாசித்து நின்றது. அவள் எதுவும் பேசவில்லை கண்களில் துளி கூட சலனமில்லை . நெற்றி வகிடு நேரற்று பிரித்து சென்றது . வகிடு தொடங்கும் நெற்றியில் லேசாய் குங்குமம். அவள் கண்ணையும் முகத்தையும் போலவே அவள் குழந்தையும் சலனமற்று உறக்கத்திலிருந்தது .அவளிற்கு  என் வயதோ அல்லது என்னை விட ஓரிரு வயது அதிகமாகவோ  இருக்கும். அவள் முகத்தில் இன்னும் பதின்ம வயதுக்களை  பூரணமாய் உதிராமல் கிடந்தது.

அவள் ஏதும் கேட்கவில்லை கை மட்டும் நீண்டு நின்றது.அவளை ஏறிட்ட படியே  கையில் ஒரு பத்து ரூபா தாளை வைத்தேன் .நகர்ந்து அடுத்த சீற்றிற்கு போய் விட்டாள்.
அவள் போன பின் நான் அவளை பற்றியே யோசித்தேன்.
ஒளவை சொன்ன இளமையில் வறுமையும்  சொல்லாத,  வறுமையில் குழந்தையும் அவளிடம்  வந்து சேர்ந்து விட்டன.

அவள்  கணவன் எங்கே ?

ஒரு வேளை அவன் அடுத்த பஸ்ஸில்  கை நீட்டி  கொண்டிருக்க கூடும் .அல்லது அவனுக்கு  அவளை வைத்து காப்பாற்ற உடலில் வலு இல்லாது இருக்கும். ஏதோ ஒரு கொடிய ஏழை  நோயோ ஊனமோ அவனை முடக்கி போட்டிருக்க கூடும்.ஆனால்  அதை என் அறிவு  ஏற்க மறுத்தது ஒரு பெண்ணை தாயாக்கும்  அளவிற்கு பராக்கிரமம் பெற்ற ஒருவன் ஒரு பெண்னை வைத்து காப்பாற்ற முடியாதா ? இயலா விட்டால் ஏன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் ?

ஒரு வகையில் அவள்  மீது திணிக்கபட்டு இருப்பதும் பெரிய  வன்முறை தான்  இது. செக்ஸ் என்ற ஒன்றின் மூலம் அவள் குழந்தை பெற்றது நிச்சையமாக பிச்சை எடுப்பதற்காகக இருக்காது .  என்னை பொறுத்த வரை வயிற்றையும் பசியையும் போல் அவளின் குழந்தையும் தாய்ப்பாசமும் அவள் உடல் மீதும் மனம் மீதும் நிகழ்த்தப்பட்ட  ஒரு பெரும் வன்முறை. அதை அவள் சகித்து கொண்டாலும் ஏற்று கொண்டாலும் அது வன்முறை தான். ஒரு ஆண் ஒரு பெண்மீது செய்யும் பாலியல் வன்முறைகளில் இதுவும் தலையானது.

ஒப்பீட்டளவில் பெண்ணை ஆணை விட உடலளவில் வலிமை குன்றியவளாகவே இயற்கையும் சமுகமும் படைத்துள்ளன. ஆனால்  ஆண் உடலை விட வலி சூழ்ந்த சதை துணுக்குகளை கொண்டது பெண்ணுடல். பிரசவம் , மாதவிடாய், தொடக்கம் மனித புணர்ச்சியின் போது கூட பெண்ணுடல் வலி மிகுந்த ஒன்றாகவே உழல்கின்றது. இயற்கையால் இவ்வாறு வஞ்சிக்கப்பட்ட பெண்ணுடல்  எதிர் பாலினத்தால்  இன்னும் இன்னும் வஞ்சிக்க படுகின்றது.அதுவும்  நம் சமூக இருப்பும் ஆண் வர்க்கமும் பெண் உடல் மீதும் பெண் மனத்தின்மீதும் நிகழ்த்தும் வன்முறைகள்  மிகப்பார தூரமானவை மட்டுமன்றி வித்த்தியாவின் மீது நிகழ்த்த பட்ட  அநீதியின் ஆணி வேர் ,பக்க வேர்களாகவும் இவை யே காணப்படுகின்றன.


எனக்கு தெரிந்து புறவயமாக  பெண் உடல் மீது  அவள் சிறுமியாக இருக்கும் போதே வன்முறை  தொடங்கி விடுகின்றது. சமீபத்தில் 7 வயது சிறுமி மீது நிகழ்த்தப்பட கொடூரத்தை இங்கே  ஞாபக படுத்து கிறேன்.இது போன்ற சட்டம் போட்டு தண்டிக்க பட கூடி வன்முறையை அநேகமாக அடையாளம்  காணலாம்  வக்கிரம் மிக ஏறிய  மிருகமாகவே மாறி விட்ட ஆண் தன் சுய புத்தியின் துணையோடு இவ்வாறான ஈனச் செயல்களை நிகழ்த்துகின்றான். இது பற்றி நாம்  நிறையவே பேசியிருக்கிறோம்  விமர்சித்தும் இருக்கிறோம். ஆனால்  வெளியறியப் படாமல்  அகவயமாக பெண் உடல் மீதும் மனம் மீதும் அநீதியிழைகின்றது. அவள்  பருவடைந்த பின் நம் சமூகம்  மிக இயல்பாக  பெண் இலக்கணம் எனற பெயரில் ஆணிற்கு அஞ்சுதலும் அடங்கி போதலும் பற்றி அப்பெண்ணின் தாயினதும் சாகோதரியினதும் தொடர்ச்சியாக போதிக்கின்றது.
பெண்பிள்ளை என்றால் இப்படிதான்  கட்டுபாடு ஆண் பிள்ளையெனின் எப்படியும் வாழலாம் .இந்த அடிப்படை  தான் விஸ்வரூபம் எடுத்து பின்னாளில் பெண்ணுடலை ரணமாக்கி விடுகின்றது.

மிகச்சாதாரண உதாரணம் ஒன்று சொல்கிறேன்
ஒரு பெண் பிள்ளை  தன் தாய் தந்தை முன்பும் தன் உடைகள் விலகாமல்  பார்த்து கொள்ள வேண்டும். சட்டை  இறுக்கமாகவும் இயல்பாகவும் இருந்தால் கூட  பெண்பிள்ளை நெஞ்சை பிடித்து கொண்ட பின்பே  குனிந்து ஒரு பொருளை எடுக்கிறாள். இதை எங்காவது பார்க்கும்போது எனக்கு எரிச்சலாக  வரும் இந்த பழக்கம்  என்போன்ற ஆண்களின் கண்களாலும் செய்த செய்யும்  வக்கிர மனங்களாலும் ஏற்பட்டது தானே. அதாவது ஒரு பெண்ணின் இயல்பை நம்  கண்கள் கொண்டு மாற்றியமைக்கின்றோம்.

 அடுத்தது காதல் –காமம்

சாரு நிவேதிதா சொல்வது போல் தற்காலத்தில்  ஒரு பெண்ணிடம்  ஒரு ஆண் சொல்லும் மிக அபத்தமான வார்த்தை I LOVE U என்பது தான். ஏனெனில்  காதல் என்னும் அன்புநிலைமாற்றம் பெண் மனவுடல் மீது  தெரிந்தும் தெரியாமலும் ஆற்றும் வன்முறை மிக அதிகமான  நகை முரண்களையும் அபத்தங்களையும் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில்  ஒரு தோழி என்னிடம்

“டேய் அண்டைக்கு அவன்  கோவத்தில  என்ர கன்னதில பாளார் எண்டு அறைஞ்சிட்டு போய்ட்டான் டா. அது எனக்கு பிடிச்சுது .அவன் என்னை உரிமையா  அதிகாரம் பண்ணுறான் ”

எனக்கு கொஞ்சம்  அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. மேலோட்டமாகவும்  ஒரு காதலியாகவும் நின்று பார்க்கும் போது அங்கே  பெண் மீது இளைக்கப்படும் வன்முறை அன்பு என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது .ஆனால் ஒரு ஆண் மனதளத்திலோ அல்லது பெண் உடல் தளத்திலோ அது மிக மோசமான அடக்குமுறையின் தொடக்கப்புள்ளி.
இது காமத்திலும் நிகழ்கின்றது, நம் சமூக பெண்களில் 90 %  பேர்  சிறுவயதில் இருந்தே காமம்  தொடர்பிலும் பால்நிலையியல் இருத்தல் தொடர்பிலும் மிகுந்த பிரக்ஞை யும் கட்டுபாடுகளும் உள்ளவர்களாக வளர்க்க படுகின்றனர். குறிப்பாக ஆண்களை போலன்றி உணர்வு நிலை  , விருப்பு வெறுப்புக்கள் தொடர்பில் மிகுந்த கட்டுபாடுகளை தம் உடலை சுற்றி ஏற்படுத்தி கொள்கின்றனர்.ஒரு வகையில் இது இத்துனை கால பெண் அடக்குதலில் வெளிப்பாடு தான். இன்னொரு வகையில் அது மிக ஆபத்தான பால் நிலை சுதந்திரம்  மிக்க ஆண்களை கொண்ட நம் சமூக அமைப்பில் பெண்களை காக்கும்  ஒரு சுய தற்காத்தல் கேடயமாகவும் நிலைக்கின்றது. இதை பெரும்பாலன பெண்கள்  காதல் ,கல்யாணம்  இரண்டில் ஒன்றில் உடைந்து போக அனுமதிக்கின்றனர்.
இது மிக இயல்பானது தானே என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் இன்று அவ் நெகிழ்ச்சியை ஆண்கள் மிகச்சாதரணமாக தமக்கு ,தம் இச்சைகளுக்கு  சாத்திய மாக்கி விடுக்கின்றனர்.

என் காதில் விழுந்த சமீபத்திய உரையாடல்  குறிப்பொன்றை தருகிறேன்

“மச்சி பெட்டையள மடக்கிறது ஒரு விசயமே இல்லயடா .லவ் பண்ண வச்சிட்டா சரி. என்னில நம்பிக்கையில்ல யாடி எண்டு தொடங்கோணும் அவ்வளவு தான் ”

இதற்கு பிறகு நிகழத்தக்க அபத்தங்களை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.பெண்மனம் புரிந்து கொள்ள முடியாதவொன்று என்று சொல்லிய ஆண் வர்க்கம்  எப்போதோ வழக்கொழிந்து விட்டது. பெண் தன்னை சுற்றிஉண்டாக்கும் எல்லா வேலிகளின் பலவீனங்களும் மிகதுல்லியமாக அறிந்த ஆண் வர்க்கம்  இன்று உள்ளது. இணையமும் சமூக தொடர்பும் ஆண்களுக்கு அறிவு ரீதியான  பல  சாமர்த்தியங்களை தாரளமாக வழங்குகின்றது, கொடுக்க பட்டு இருக்கும் அறிவையும் ,சுதந்திரத்தையும் பெண் உடலை புசிப்பதற்கும் பொம்மையாக்கவும்   பல ஆண்மனங்கள் பழக்கப்படுகின்றன.

சமீபத்தில் ஒரு தொலைபேசி உரையாடல் ஒன்றை கேட்டேன். ஒரு இளைஞன் தன் முன்னால்  காதலியை நீ என்னுடன் இருந்த படம்  எல்லாம் வச்சிருக்கன்,நெட்ல போட்டுவிடுவேன், வருங்கால கணவனுக்கு அனுப்புவேன் என்று மிரட்டுகின்றான்.
அவள்  பிடிக்காமல்  விலகியது அவளில் தனிப்பட்ட விடயம். இந்த உரையாடல் லிங்கை இணையத்தின் பல பேஸ்புக் போராளிகள் ஷேர் செய்து இருந்தார்கள். ஏமாற்றியவள் தண்டிக்க பட்டே ஆக வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறது ஆண்மனம். ஒரு வேளை அந்த பெண் அவர்களின் சகோதரியாக  இருக்கும் பட்சத்தில் அவர்களின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் ?
இது சமீபத்திய ஆண்மனங்களின் சில  உதாரணக்கள் தான்  காதல் அன்பு  என்பது பெண் உடலை அடிமை செய்யும் ஒன்றாக மாறிவிட்டது.இது  தீடீரென தோன்றிய  ஒன்றல்ல இவை  இத்துனை வருட ஆண்மனத்தின்  அப்டேடட்  வேசன் கள் அவ்வளவே.
ஏன் திருமணத்தை கூட எடுத்து கொள்ளுங்கள்  பெரும்பாலான விவாகரத்துக்கள் ஆண்களிலேயே ஆராம்பிக்கின்றன. இல்லை நான் என் மனைவியை விவாகரத்து செய்யாமல் தான் இருக்கிறேன்,நன்றாக குடும்பம் நடத்து கிறேன்  என்பவர்கள் சிலரிடம் அவர்களின் மனைவியின் மார்புகளில் இருக்கும்  சிகரட் புண்களுக்கு விளக்கம் கேட்க வேண்டும்.

இவை எல்லாம்  சொல்லும் போதும் கேட்கும் போது நமக்கு அருவருப்பாகவோ  அபத்தமாகவோ தோன்றும். இன்று சிருஷ்டியின் மூலம் என்றும் தெய்வம் என்றும் அம்மன் கோவில்களிலும் மாதா கோவில்களிலும் மண்டியிடும் எல்லா ஆண்களுமே  தெரிந்தோ தெரியாமலோ பாவமன்னிப்பே  அற்ற பெணுடல் –மனம் மீதான  வன்முறையை செய்தவர்கள் தான்.  புரிதல் பாலியல், சுதந்திரம் ,சமத்துவம், பெண்ணியம்  இது எல்லாம்  மேடை போட்டு சோல்லி ஏற்படுத்த கூடியதல்ல.எல்லாமே  ஒவ்வொரு தனி மனிதனின் அக நிலையில் இருந்து தொடங்கப்பட வேண்டிய  மாற்றம். பெண் உடல்மீதான ஆண்மனமும் ஆண்மீதான பெண்ணுடலும் மனமும்  வஞ்சமற்ற புரிதலும் அன்பும்  சமதளத்தில் இயங்க எப்போது சந்தித்து கொள்ள போகின்றதோ அந்த இடத்தில் இருந்து இத்துனை ஆயிரம்  வருட பெண்மனவுடலின் சாபம் மெல்ல அனல் அடங்கும்.

இப்படி எல்லாம் நான் சொல்வது நான்  எந்த வன்முறையும் இழைக்காத  சுத்தமானவன் என்பதற்காகவோ  அல்லது குறிப்பாக ஆண்கள் மீது நான்  சுமத்தும் குற்ற பத்திரிக்கையோ பெண்ணிய போராட்டமோ அல்ல  ,

இது என்னுடைய எளிமையான; உண்மையான ;ஒரு
ஒப்புதல் வாக்குமூலம்.

- யதார்த்தன்
30.05.2015


0 கருத்துகள்:

கருத்துரையிடுக