அவள் சுதந்திரமாகவும்
சிருஷ்டிக்கு மிக நெருக்கமானவளாகவும் இருந்தாள்.
மனமென்பது பிறிதோர்
உடற் பாகமாக அவளுக்கு வழங்கப்பட்டது. நெஞ்சுக்குழிக்குள் ஒரு பந்தைனைப்போல அதனை பொருத்தியிருந்தது சிருஷ்டி. நீல நிற தசைக்கோளமான அதை கைகளில் எடுக்கவும் தொட்டுணரவும்
முடியுமாயிருந்தது. எடுக்கும் போது லேசான இரத்த கசிவு கைகளில் ஒட்டிக்கொள்ளும் அது ஒன்றுதான் அவளை அசெளகரிய படுத்தும் ஒன்றாக இருந்தது.
படைக்கப்பட்ட ஆரம்பத்தில்
, அது அவளுக்கு ஆச்சரியம் தரும் ஒன்றாக இருந்தது , அடிக்கடி எடுத்து அதனை தொட்டுணர்ந்து
விளையாடுவாள், உடலில் இருந்து அதனை அகற்றும்
போது ஏதேட்சையாக பட்ட காயம் ஒன்றின் மேற்றோல் செதிலை சடேன இழுத்து அகற்றும் போது ஏற்படும்
லேசான குறுகுறுப்பினை உணர்வாள். தினமும் நான்கைந்து முறையாவது அந்த குறுகுறுப்பினை
உணரவேண்டும் போல் இருக்கும். மனத்தை அகற்றுவதனையும் உள்ளிடுவதனையும் ஒரு போதைபோல் பழகிக்கொண்டது அவளுடல். நீல நிற நரம்புகள் ஓடும் அதனை மார்பிலிருந்து அகற்ற நினைக்கும்
போது அவளுடைய மார்பெங்கும் அடர்த்தியாய் வளர்ந்த நீல நிற இறகுகள் சட்டென விரிந்து மார்ப்பின்
நடுவில் உள்ள மனக்கோளம் உள்ள இடத்தை காண்பிக்கும். அவள் குளிக்கும் போதும் நீச்சலடிக்கும்
போதும் , மழைபெய்யும் போதும் மார்ப்பு இறகுகள் ஒன்றையொன்று இறுக பின்னிக்கொண்டு தண்ணீர் உட்செல்லாமல் தடுத்துவிடும். இதே செயன்முறையாக்கத்தினை
தான் சற்று அதிகமாக வளர்ந்து அவள் இடைவரை பரவி சுற்றியிருக்கும் இறகுகளும்கொண்டிருந்தன. தன் யொனியை உணரும் போது
அந்த சிறகுகள் விரிந்தகன்றன.ஆனால் மனக்கோளத்தினுடைய சிறகுகளைப்போல் அவை அடிக்கடி வேலைக்கமர்த்தப்படுவதில்லை.
மார்பிலும் இடையிலும் உள்ள சிறகுகளை தவிர அவள் உடலில் வேறெங்கும் சிறகுகள் காணப்படவில்லை.
முன்னொருநாள் சிருஸ்டி அவளிடம் பறப்பதற்கு
ஆசைகொள்கிறாயா அல்லது மனத்தை புன்னங்கமாய் பெற ஆசை கொள்கிறாயா என்று கேட்ட போது , இரண்டாவதை
தெரிவு செய்திருந்தாள். எனவே அவளுக்கு முதுகில் சிறகுகள் முளைக்கவில்லை.
எனினும் மனத்தையுடையவள்
சுதந்திரமாக இருந்தாள் , மகிழ்ந்திருந்தாள், பெரிய ஆற்றுப்படுக்கைகளில் நீந்துவதும் , காடெங்கும் உலவித்திரிவதும். பெரிய
மயில்களுடன்னும் கலைகளுடனும் மைதுனம் செய்துகொள்வதும் , சிருஷ்டியுடன் உரையாடுவதுமாக அவளுடைய யுகங்கள் கடந்துகொண்டிருந்தன.
சிருஷ்டி பலருடைய கதைகளை அவளுக்கு சொல்லிக்கொண்டிருக்கும், பெரும்பாலும் அவை மிக வேடிக்கையாக
இருக்கும். ஒரு நாள் சிருஷ்டி சொன்ன கதையொன்று அவளை அந்த காட்டை விட்டு செல்ல தூண்டியது.
அது ஒரு இளவரசியினுடைய
கதை , அவள் இப்போது ஒரு தேசத்தின் ராணியாக இருக்கிறாள் , இளவரசியாக பிறந்து சில நாட்களில்
அவளை அவள் தந்தை காடொன்றில் தவற விட்டுவிட்டார். அவளை ஒரு ஓநாய் கூட்டம் கைப்பற்றியது
, வழமை போல பெண் ஓநாய் ஒன்று அவள் மேல் இரக்கம் கொண்டு தன் மயிர் அடர்ந்த முலைகளால்
அவளுக்கு பாலூட்டி வளர்த்தது. நிர்வாணியாக அந்த அடர்காட்டில் ஓநாய் குட்டிகளுடன் அவள்
வளர்ந்தாள். யெளவனம் எய்தினாள் , ஒரு நாள் அதே வழமை போல அழகும் வீரமும் பொருந்திய இளவரசன்
அவளை கண்டு மையல் கொண்டு அவள் முன் வந்து தன் புரவியில் இருந்து குதித்தான். இளவரசி
சட்டென தன் மார்புகளை கைகளால் இறுக மறைத்துக்கொண்டாள்
…
இந்த இடத்தில்
தீடிரென கதையினை நிறுத்தச்சொல்லிவிட்டு சிருஷ்டியை அனுப்பிவிட்டு , வேகமாக காட்டைவிட்டு
வெளியேறி அந்த இளவரசி ராணியாகி ஆளும் நாட்டிற்கு வந்து சேர்ந்தாள் தன்னுடைய உடலை ஆடைகளை
கொண்டு மறைத்து தானும் ஒரு நகரத்து மனுஷி போல மாறிக்கொண்டாள். மனக்கோளத்தை எடுத்து
தன் சட்டை பைக்குள் போட்டு கொண்டு ராணியைப்பார்க்க புறப்பட்டாள். மிகுந்த பிரயத்தனங்களுக்கு பிறகு ராணிமுன் தோன்ற அவளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அத்தானி மண்டபத்தில்
ராணி கொலுவமர்ந்திருந்தாள் , அவளுடைய சிம்மாசனத்தின் நேர்மெலே ஒரு இளவரசனின் படம் வரையப்பட்டிருந்தது.
அதன் மீது இரண்டு கறுப்பு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்டிருந்தன .அது கதையில்
கேட்ட இளவரசனாகதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். ராணி அவளிடம் விடயம் என்னவென்று
விசாரித்தாள்,
”ராணி என்னிடம்
இரண்டு கேள்விகள் இருக்கின்றன இரண்டில் ஒன்று வெளிப்படையாக உங்களிடம் கேட்க வேண்டும்
இன்னொன்றை உங்கள் காதுகளுக்கு மட்டும் அறியும்படி கேட்கவேண்டும்.
ராணி சம்மதித்தாள்
,முதல் கேள்வி
“நாம் நேசிக்கு
உறவொன்று நம் குணங்குறிகள் பிடிக்காமல் , நம்மை உடைந்து போகுமளவிற்கு செய்துவிட்டு
பிரிந்து போனபிறகு அந்த உறவு வேண்டும் என்று நாம் எதற்காக அடம்பிடிக்கிறோம் என்று உங்களுக்கு
தெரியுமா ?”
இவ்வாறு ஒரே மூச்சில்
முதல் கேள்வியை கேட்டு முடித்து விட்டு சட்டை பயினுள் கையை விட்டு மனக்கோளத்தை தடவிக்கொடுத்தாள்
ராணி
“அழகிய பெண்ணே , நாம்
எம்மை விட்டுச்சென்றவரை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தும் அவர் வேண்டும்
என்று அடம்பிடிப்பதும் , நம்முடைய சுயத்தை ஒருவர் புறக்கணித்தார் என்ற அவப்பெயரை நீக்கிகொள்ளவேயாகும்
அங்கே பெரும்பாலும் வேறேதுமிருக்கப்போவதில்லை”
இரண்டாவது கேள்வியை
கேட்பதற்கு ராணியின் சிம்மாசனப்படிகளில் ஏறி ராணியின் காதருகில் போய் நின்றாள் மெல்லிய
குரலில்
”இளவரசர் புரவியில்
வந்து தங்கள் முன் குதித்த போது நீங்கள் மெய்யின்
இதர அங்கங்களை மூடாமல் மார்புகளைமட்டும் சட்டென மறைத்து கொண்டதேன் ?”
ராணி மெல்லிய புன்னகை
ஒன்றை வீசினாள், பின் அவளுடைய காதுகளிற்குள் குனிந்து, அந்த பதிலை சொன்னாள்.
பதிலைக்கேட்டதும்
மண்டபமே அதிரும்படி அவள் பேய்ச்சிரிப்பொன்றை வெளிப்படுத்தினாள் , சட்டை பைக்குள் கையை
விட்டு மனக்கோளத்தை எடுத்து , யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தரையில் வேகமாக எறிந்தாள் ,அந்த நீல தசைக்கோளம் நீலத்திராவகம்
தெறிக்க உடைந்து சிதறியது. அது உடைந்து போகவும் அவளுடைய முதுகுப்பக்கம் இருந்து ஆடையை
கிழித்தவாறு இரண்டு பெரிய கரிய இறக்கைகள முழைத்தெழுந்தன.
அடுத்தகணம் சிறகுகள்
விரிய சிரிப்பை சற்றும் குறைக்காதவளாய் யன்னலொன்றை உடைத்துக்கொண்டு அவள் எழுந்து பறந்தாள்.
-யதார்த்தன் -
0 கருத்துகள்:
கருத்துரையிடுக