நமக்கிடையில்
காற்றுறைந்து
கண்ணாடித்திண்மமாய்
மாறிப்போனது
திண்ம வளியினிடையே
குரலை விட்டு விட்டு
காட்சிகள் மட்டும்
பரஸ்பரம் போய்வந்தன
திண்மத்தின் இந்தப்புறம்
கண்ணீர் தீர்ந்துபோய்
முகத்தசைகள் இறுகிய
பின்னும் நான் கதறியழுவது
மிகச்சிறந்த கெட்டவார்த்தைகளை
உமிழ்வது போலுனக்கு
தெரிகிறது
சந்தடியற்ற அங்கே
உன் சொற்கள் அர்த்தமற்றவை
என்று நீயும்
சொற்களெல்லாம்
அர்த்தமற்றவைதான் என்று
நானும்,
மெல்லத்தீப்பிடிக்குமுன்
சத்தமற்ற வார்த்தைகள்
கொள்ளியெறும்பின்
கொடுக்குகளாகிவரும்
உன்னுடைய
எனதான்மாவும்
என்னுடைய
எனதுடலும்
விதிர்
விதிர்க்க.
எனதன்பே
கோபத்தை கோபத்தினாலும்
கண்ணீரை வெறுப்பினாலும்
புரிந்து கொள்கிறாய்
படிப்படியாக
பிரிவின் சுமையை
வண்ணத்திகளின் இறக்கைகளில்
ஏற்றிவைக்கிறாய்
நம் மென்மை மிக்க
பழைய முத்தங்களுக்கு பிறந்தவை
அவை.
சாத்தான் என்னைப்போலிருப்பானென்று
உன்
ஆத்மாவிற்கு சொல்லிக்கொடுக்கிறாய்
கடவுளுக்கும்
வால்களிருப்பதனை
என்றாவது நீ
கண்டிருக்கிறாயா
?
எல்லாவற்றின் முடிவில்
திண்ம வளியுடன்
சேர்த்து
எல்லாவற்றையும்
உடைத்து விட்டு போகிறாய்
எல்லாவற்றையும்.
என் சகி
இதற்குப்பிறகு
பிரியமென்ற சொல்
கருப்பை தசைக்கூழின்
பிசு பிசுப்பும்
தசைக்கொடியுமாய்
ஒரு நாளுன் நெஞ்சில்
பிறக்கும்
அப்போது
அப்போது
உனக்குள் வைத்த
ப்ரியம் மிக்கவென்
ஆன்மாவை கொன்றுவிடு.
-யதார்த்தன் –
08.10.2015


0 கருத்துகள்:
கருத்துரையிடுக