நான் இறக்கும் போது அந்த நகரம்
உறங்கிக்கொண்டிருந்தது
வெள்ளை மெழுகின் வெளிச்சத்தில்
ஒருமுறை நீ
இரண்டு கண்ணீர் துளிகளால் அழுதாய்
மென்கறுப்பு மேகம் நிலவை கடந்து சென்றது
யாரோ முத்தமிட்டுக்கொண்டனர்
நம் கடைசி முத்தத்தின் அதே சத்தத்தில்
பெயர்த்தெடுக்கப்பட்ட புத்தர் சிலையில்
மெளனம் மட்டும் கனதியாயிருந்தது
துர்ச்சகுனங்கள் அற்ற எல்லாம் அங்கேயிருந்தன
பெயரற்ற பாம்புகள்
புனிதத்தை விட்டு வெளியேறின
நம்முடைய கடைசி
மழைக்காலத்தில்
மயில்கள் எல்லாம்
அகவி முடித்தன.
கடல்களை பற்றிய எல்லா கவிதையும்
ஈரலித்து போயின
அலைகளின் துயர் காகிதத்திலிருந்து
ஒழுகி வீழ்ந்தது
நான் இறக்கும் போது
அந்த நகரம் உறங்கிக்கொண்டிருந்தது
அழுவதற்கு கண் போதும்
எல்லோரும் வாசலில்
செருப்பையும்
முகங்களையும் கழட்டி விட்டு வந்தனர்
எல்லாவற்றிற்கும் எல்லை குறிக்கப்பட்டது
மூக்கு சிந்த கழற்றியவுன் மூக்குத்தி
எல்லைக்கு வைக்கப்பட்டது.
நான் இறக்கும் போது அந்த நகரம்
உறங்கிக்கொண்டிருந்தது
யாரோ மிச்சமுள்ளதை
குறித்து கொண்டனர்
01.மோசமான மழைக்கவிதை
02.உன்னுடைய உதட்டுச்சாயம்
03.மீசை முளைத்த ப்ரைடாவின் சித்திரம்
04.மூன்று ஆணுறைகள்
05.கண்ணீர் மணக்கும் உன் டெடிபியர்
06.கொஞ்சம் கச்சான் கோதுகள்
07.மயிலிறகு
இவற்றோடு
இறந்து போன நான்.
மற்றுமென் பிணம்.
-யதார்த்தன் -
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக