வியாழன், 29 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 6:58 AM

மானும் மரை இனமும் மயிலினமுங் கலந்தெங்கும்
தாமே மிக மேய்ந்து தடஞ் சுனை நீர்களைப்பருகி
பூமாமரம் உரஞ்சி பொழி ஊடே சென்று –புக்குத்
தேமாம் பொழில் நிழல் துயில் சீபர்பதம்லையே.
-சுந்தரர்-
மேற்படி தேவாரம் சுந்தர மூர்த்தி நாயனார் சீபர்பத மலைச்சிவன் உறைகின்ற கோயிலின் சூழல் அழகை வர்ணிக்க பாடியதாகும்.
இப்படி ஒரு தலைப்பை (நான் பத்தியின் தலைப்பை- அப்பப்பா ஒரு மொழிக்கு எத்தனை மீனிங்குகள்) வைத்து விட்டு இவன் சம்பந்தமே இல்லாமல் சுந்தரர் தேவாரம் பாடுகிறானே என்று ஆச்சரியப்படுவதை இந்த செக்கனே நிறுத்தி கொள்ளலாம்.
இன்று மாலையில் பொழுது போகவில்லை . கமராவை எடுத்துக்கொண்டு ஊரின் எல்லையில் இருக்கும் தரவைப்பக்கம் சைக்கிளை மிதித்தேன். ஒரு இடத்தில் வீதியோரமாக ஒரு பாழடைந்த பழைய கேணி இருந்தது
, மூன்று நாள் பெய்த மழை கேணியை நிரம்பிவழியச்செய்திருந்தது ,அதன் அருகே ஒரு சில மாடுகள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. கேணியின் ஒரு மூலையில் பற்றைகளுக்கு நடுவே மயோசின் சுண்ணக்கல்லை பொழிந்து மாட்டுயரத்திற்கு ஒரு ஆவுரஞ்சி கல் நின்றது. அந்த ஆவுரஞ்சி கல்லில் மாடுகள் தம் உடலைத்தேய்த்தன.
2011 மார்கழி மாதம் வரை யாழ்ப்பாணத்தின் அனைத்து பொதுக்கிணறு , பொதுத்தொட்டிகள் , கேணிகள் , குளங்களுக்கு அருகில் நன்று பொளியப்பட்ட கல் ஒன்று நிமிர்ந்திருப்பது ஏன் என்று நான் யோசித்ததே கிடையாது. அந்த கல்லைப்பற்றி தெரிய வந்தது 2011 மார்கழி மாசத்தில் தான் , அதற்கு காரணம் தான் மேலே வந்த சுந்தரர் தேவாரம்.
(ஒரு முறை மூச்சை விட்டு விட்டு தொடர்ந்து வாசிக்கலாம்)
அப்போது நான் க.பொ.த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். தமிழை ஒரு பாடமாக படித்துக்கொண்டிருந்தேன். மானிப்பாயிலுள்ள புகழ் டியூசனில் சத்தியவேந்தன் சேரிடம் தமிழ் படித்துக்கொண்டிருந்தேன். உயர்தர தமிழ்ப்பாட அலகில் சுந்தரரின் “திருப்பருப்பதம் அல்லது சீபர்ப்பதம் ” என்ற பதிகத்தொகுதி (பதிகம் – பத்து பாடல்கள் கொண்டிருக்கும்) சேர்க்கப்பட்டு இருந்தது.
அதில் முதலாவதாக வரும் இந்த பதிகத்தை சத்தியவேந்தன் சேர் விளங்கப்படுத்தினார்
மானும் மரை இனமும் மயிலினமுங் கலந்தெங்கும்
தாமே மிக மேய்ந்து தடஞ் சுனை நீர்களைப்பருகி
பூமாமரம் உரஞ்சி பொழி ஊடே சென்று –புக்குத்
தேமாம் பொழில் நிழல் துயில் சீபர்பதம்லையே.
பாடலின் பொருள் இதுதான்
மான்களும் , மயில் இனங்களும் ஒன்றாக கலந்து நின்று அப்பிரதேசம் எங்கும் உலாவி தாமாகவே மேய்ந்து , பின்னர் அங்குள்ள நீர் நிலைகளில் தம்தாகத்தை தீர்த்துக்கொண்டு வயிறு நிறையப்பெற்றவைகளாய் பூக்களை பொழிகின்ற பெரிய மரங்களில் தம் உடலை உரஞ்சிச் சென்று நிழலை பொழியும் சோலை மரங்களின் கீழ் படுத்துறங்கும் அழகை பெற்றது சீபர்பத மலையாகும்.
என்று பொருள் சொன்னார் சேர். நான்
“அதேன் சேர் சாப்பிட்டு முடிஞ்சதும் மரத்தில போய் தேய்க்குதுகள் ?”
“தம்பி யாழ்ப்பாணத்திலதானே இருக்கிறீங்கள் ?”
“ஓம் சேர்”
“யாழ்ப்பாணத்தில கிணறுகள் குளங்களுக்கு பக்கத்தில
ஒரு கல் நட்டிருக்கும் கண்டிருக்கிறியளோ ?”
“ஓம் சேர்”
“அதேன் அங்க நட்டிருக்கெண்டு தெரியுமோ ?”
“…….”
“என்னடாப்பா நீங்கள் , அதுக்கு பேர் ஆவுரஞ்சிக்கல்”
“அப்பிடியெண்ட்டா ”
முன்வாங்கில் இருந்த ஏதோ ஒரு அழகான பிள்ளை.
“ஆ எண்டா என்ன ?”
“பசு மாடு”
“வெரிகுட் இப்ப அர்த்தம் சொல்லுங்கோ”
”பசுமாடு தேய்க்கிற கல்லோ சேர் ?” என்றேன்
கிளாஸ்ல எவனோ ஒரு நண்பன்
“என்னத்தையடா ?”
வகுப்பே கொல் என்று சிரித்து அடங்கியது
“தம்பி மாடுகளுக்கு பசி தாகம் தீர்ந்தா பிறகு உடம்பில் ஒரு வித தினவு எடுக்கும் , அப்ப மரத்திலையோ இப்பிடி கல்லிலையோ தமது உடலை தேய்த்துக்கொள்ளும் அதுக்காக தான் அந்த கல்லை எங்கட பாட்டன் பூட்டன் எல்லாம் நட்டிட்டு போனவை”
“ஓ அந்த தேய்ப்பு தான் சுந்தரர்ட தேவாரத்தில வருகுதோ ?”
“அதே தேய்ப்பு தான் ”
வகுப்பு முடிந்ததும் சேர் எங்களுடன் இருளும் வரை பேசிக்கொண்டிருப்பார். அவரிடம் நாங்கள் மறுபடியும் ஆவுரஞ்சி கல்லைப்பற்றி கேட்டோம். அப்போது சேர்,
எல்லா மிருகமும் அப்பிடிதான் தம்பியள் , உணவு முடிந்ததும் உடல் தினவெடுக்கும் அதுக்கு பிறகு இனப்பெருக்கம் செய்ய முயலும் , இது இயற்கையான ஒன்றுதான். என்று சொன்னார். அப்போது அருகில் இருந்த நண்பன் ஒருத்தன் ,
(அனேகமாக ரதனாக இருக்கும்)
”அப்ப மனுசர் என்னமாதிரி சேர் ?”
“ஏண்டா மனிசனும் மிருகம் தானே ”
அன்றுடன் அந்த உரையாடல் மறந்து போனது.

ஆனால் இன்று மாலையில் அந்தகல்லை பார்த்தவுடன் ரதன் கேட்ட கேள்விதான் ஞாபகத்திற்கு வந்த்து .


மனிதனுக்கு அடிப்படை தேவைகள் , உறையுள் ,உணவு எல்லாம் கிடைத்த பிறகு மனிதன் அடுத்ததாக கையாள நினைப்பதே உடலாகத்தான் இருக்கும்.
முந்தநாள் வடமராட்சிக்கு கிரிஷாந் ,அனோஜன் ,குமாரதேவன் ஐய்யா வுடன் பஸ்சில் புறப்பட்டோம், சுதந்திரத்தை பற்றியும் , மனித தேவைகளைப்பற்றியும் கிரி அனோஜனிடமும் என்னிடமும் கேள்விகளை கேட்டு விவாதித்தபடி வந்தான்.
ஒரு சந்தர்ப்பத்தில் “மனிசண்ட வாழ்கை எண்டுறது அடிப்படையான வாழ்தலுக்கான தேவையும் செக்ஸ்சும் தாண்டா மிச்சம் எல்லாம் அதன் பொருட்டு கட்டமைக்கப்பட்ட , புனையப்பட்ட உண்மைகள் தான். மற்றபடி எல்லாமே For Fucking தான் “

என்று சொல்லியபடி வந்தான். அதுவும் நினைப்பில் வந்து சென்றது.
எங்கட ஊர்ல குருவிக்காடு என்று சொல்லும் ஒரு சிறுகண்டல் காடு இருக்கின்றது, கோடைகாலங்களில் ஊரில் ஒரு கலாசார பாதுகாவலர் குழு எப்போதும் ஊருக்குள் யார் வருகிறார்கள் , எந்த ஜோடி குருவிக்காட்டுக்குள் இறங்குகின்றது என்ற கண்காணிப்பில் இயங்கிக்கொண்டிருக்கும். குருவிக்காட்டுக்குள் ஐட்டம் அடிப்பவர்களை பிடிப்பதற்கு அந்த குழு எப்போதும் தயாராகவே இருக்கும். அவ்வாறு அவர்கள் பிடித்த புணர்தல் ஜோடிக்கள் ஏராளம் , அதனை ஏதோ பெரியசாதனையாக ஊர் முழுக்க கதைப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரின் செல்போன்களின் Browsing History இலும் அத்தனை ப்ரோனோ தளங்களின் வரலாறு கொட்டிக்கிடக்கும். இது அவர்களின் தவறில்லை , கலாசாரம் பண்பாடு என்ற பெயரில் மனிதத்தினவுகளை அடக்கி அடக்கி நமது சமூகம் பாலியல் என்பதனையோ சக பாலின உடல் என்பதையோ புரிந்து கொள்ளாத ஒன்றாகவே வளர்க்கப்பட்டிருக்கின்றது.


சக பாலுடலை கடத்தல் அல்லது புரிந்து கொள்ளல் என்பது 40 வயதுக்கு மேல்தான் நடக்கிறது , அல்லது அதுவும் இல்லை. ஒழுங்கான பாலியல் கல்வியும் பாலியல் சுதந்திரமும் வழங்கப்பட்ட சமூக அமைப்பை கட்டாதவரை , ஐந்து வயது குழந்தை மேலும் மனித உடல் தினவு ஏற்பட்டபடிதான் இருக்கும் , இது மாற்றமுடியாத இயற்கையாகும்.


ஏன் வெளிநாடுகளில் விபச்சாரத்தை அரசு அங்கீகரிக்கின்றது , ஏன் ஒரு ஆணும் பெண்ணும் விரும்பும் பட்சத்தில் தம் உடல்களை பரிமாறிக்கொள்ளல்லாம் என்பதற்கு அனுமதி இருக்கிறது என்று நாம் சிந்தப்பதேயில்லை. அதுவும் வெப்ப வலைய நாடுகளில் இருந்து கொண்டு நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் சிக்கலான பாலியல் நடத்தை கோலங்கள் வன்முறைக்கே கொண்டு சென்று நிறுத்தும்.
சக தோழியின் சட்டை விலகி உள்ளாடைப்பட்டி தெரிந்தால் கூட கண் ஒருமுறை அதனை தடவிப்பாக்கும் இயல்புமுறைக்கு பழக்கப்பட்ட ஆண்களாகவே நாம் ஒவ்வொருத்தரும் வளர்ந்து நிற்கின்றோம்.
அடிப்படை பாலியல் சுதந்திரமும் அடிப்படை பாலியல் கல்வியும் இருக்கும் பட்சத்தில் கற்பழிப்புக்களுக்கோ இதர பாலியல் வன்முறைகளுக்கோ இடமிருக்காது. மனிதஉடல்த்தினவு என்பது மனிதர்களுக்கு இயற்கையான ஒன்றாகும் , அது உணவு முறையைப்போல , சுவாசத்தை போல இயல்பானதும் சாதாரணமானதுமாகும்.
ஆனால் காதலிக்கும் பெண்ணை கூட குருவிக்காட்டுக்குள் கூட்டி வரவேண்டிய சமூக அமைப்பை நாம் தான் உருவாகி வைத்திருக்கின்றோம். பரஸ்பரம் எழும் பாலியல் தேவைகளை இயல்பாக்கவும் சுதந்திரமாகவும் மாற்றும் பட்சத்தில் , யாரோ இருவர் புணர்வதை செல்பேசியில் பார்த்து சுயமைதுனம் செய்யவும் , கற்பழிக்கவும் , உடலிச்சைக்காக கொலை செய்யவும் தயாராகும் மனித மிருகத்தை சாதுவாக நடக்கசெய்ய இயலும்.


ஆனால் பண்ணை கடல்கரையில் காலம் காலமாய் காதலித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை போட்டோ எடுத்து தலைப்புசெய்தியாய் போடும் யாழ்ப்பாண அச்சு மற்றும் இணைய ஊடகங்களும் , பண்பாடையோ பாலியலையோ எப்படி புரிந்துகொள்ளகூடாதோ அப்படி புரிந்து கொண்டிருக்கும் எங்கள் ஊர் குருவிக்காட்டு காவலர்களுக்கும் அறிவூட்டுவதும் அடிப்படையான பாலியல் கல்வி பாலியல் சுதந்திரம் என்பவற்றை தெளிவாக்குவதும் தான் சரியாக இருக்கும்.
மற்றபடி. இல்லை முடியவே முடியாது பெய்யென பெய்யும் மழை , இராமன் சீதை, கண்ணகி மதுரை எண்டு ஆரம்பிச்சியள் எண்ட்டா உங்களுக்கு கிரிஷாந் சொன்னதைதான் சொல்லலாம்.


புரிஞ்சுக்க ராசா எல்லாமே For Fucking தான்


(மூச்சை விடுங்கள்)
மற்றபடி நீ திறமோ ? நீ பிட்டு படம் பாக்கிறதானே என்பவர்களுக்கு,
”பத்தி எழுதினதே எனக்காக தான்.”

-யதார்த்தன் -

திங்கள், 26 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 6:54 AM



நான் இறக்கும் போது அந்த நகரம்
உறங்கிக்கொண்டிருந்தது


வெள்ளை மெழுகின் வெளிச்சத்தில்
ஒருமுறை  நீ
இரண்டு கண்ணீர் துளிகளால் அழுதாய்


மென்கறுப்பு மேகம் நிலவை  கடந்து சென்றது


யாரோ முத்தமிட்டுக்கொண்டனர்
நம் கடைசி முத்தத்தின் அதே சத்தத்தில்


பெயர்த்தெடுக்கப்பட்ட புத்தர் சிலையில்
மெளனம் மட்டும் கனதியாயிருந்தது

துர்ச்சகுனங்கள் அற்ற எல்லாம் அங்கேயிருந்தன
பெயரற்ற பாம்புகள்
புனிதத்தை விட்டு வெளியேறின

நம்முடைய கடைசி
மழைக்காலத்தில்
மயில்கள் எல்லாம்
அகவி முடித்தன.

கடல்களை பற்றிய எல்லா கவிதையும்
ஈரலித்து போயின
அலைகளின் துயர் காகிதத்திலிருந்து
ஒழுகி வீழ்ந்தது

நான் இறக்கும் போது
அந்த நகரம் உறங்கிக்கொண்டிருந்தது


அழுவதற்கு கண் போதும்
எல்லோரும் வாசலில்
செருப்பையும்
முகங்களையும் கழட்டி விட்டு வந்தனர்

எல்லாவற்றிற்கும் எல்லை குறிக்கப்பட்டது
மூக்கு சிந்த  கழற்றியவுன் மூக்குத்தி
எல்லைக்கு வைக்கப்பட்டது.


நான் இறக்கும் போது அந்த நகரம்
உறங்கிக்கொண்டிருந்தது




யாரோ மிச்சமுள்ளதை
குறித்து கொண்டனர்


01.மோசமான மழைக்கவிதை
02.உன்னுடைய உதட்டுச்சாயம்
03.மீசை முளைத்த ப்ரைடாவின் சித்திரம்
04.மூன்று ஆணுறைகள்
05.கண்ணீர் மணக்கும் உன் டெடிபியர்
06.கொஞ்சம் கச்சான் கோதுகள்
07.மயிலிறகு

இவற்றோடு

இறந்து போன நான்.
மற்றுமென் பிணம்.


-யதார்த்தன் -

-

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 6:19 AM



01.
ஒன்பதாம் வேற்றுமை
02.
ஊமைச்சொல்
குருட்டுக்கவிதை
கண் மொழி
நீ
நான்.
03.
பேரழுகை
கண்களில் முத்தம்
கண்ணீர் உப்பு
அமிதம் உவர்ப்பு
04.
இதயத்தின் சீழ் கண்ணீர்
பிரிவின் புண் கண்
05.
நனைந்த இமைகளில் காலத்தை நெய்யும்
தறியின் சத்தம்
06.
புத்தன் போகத் தூர்ந்த
யசோதாவின் கண்
உனக்கு

07.
கடைசி செங்கல்லின் கீழ் மறையும் அனார்கியின்
கண்கள் எனக்கு
08.
இறுக்கி மூட
உள்ளே
உள்ளே
மீண்டும் மீண்டும் மூடும் கண்கள்
பிரிவின் கண்கள்

09.
கண் மெளனம்
மோகம் கண்
10.
சங்கீதம் ஒலிக்க
மீண்டும் எழும் மெல்ல உன்
முட்டைக்கண்கள்.

-யதார்த்தன்




வியாழன், 8 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 5:50 AM


நமக்கிடையில்
காற்றுறைந்து
கண்ணாடித்திண்மமாய் மாறிப்போனது

திண்ம வளியினிடையே
குரலை விட்டு விட்டு
காட்சிகள் மட்டும் பரஸ்பரம் போய்வந்தன

திண்மத்தின் இந்தப்புறம்
கண்ணீர் தீர்ந்துபோய்
முகத்தசைகள் இறுகிய பின்னும் நான் கதறியழுவது
மிகச்சிறந்த கெட்டவார்த்தைகளை உமிழ்வது போலுனக்கு
தெரிகிறது

சந்தடியற்ற அங்கே
உன் சொற்கள் அர்த்தமற்றவை என்று நீயும்
சொற்களெல்லாம் அர்த்தமற்றவைதான் என்று
நானும்,

மெல்லத்தீப்பிடிக்குமுன் சத்தமற்ற வார்த்தைகள்
கொள்ளியெறும்பின் கொடுக்குகளாகிவரும்
உன்னுடைய எனதான்மாவும்
என்னுடைய எனதுடலும்
விதிர் விதிர்க்க.

எனதன்பே
கோபத்தை கோபத்தினாலும்
கண்ணீரை வெறுப்பினாலும் புரிந்து கொள்கிறாய்

படிப்படியாக
பிரிவின் சுமையை வண்ணத்திகளின் இறக்கைகளில்
ஏற்றிவைக்கிறாய்
நம் மென்மை மிக்க பழைய முத்தங்களுக்கு பிறந்தவை
அவை.

சாத்தான் என்னைப்போலிருப்பானென்று உன்
ஆத்மாவிற்கு சொல்லிக்கொடுக்கிறாய்
கடவுளுக்கும்
வால்களிருப்பதனை என்றாவது நீ
கண்டிருக்கிறாயா ?

 எல்லாவற்றின் முடிவில்
திண்ம வளியுடன் சேர்த்து
எல்லாவற்றையும் உடைத்து விட்டு போகிறாய்
எல்லாவற்றையும்.

என் சகி
இதற்குப்பிறகு
பிரியமென்ற சொல்
கருப்பை தசைக்கூழின் பிசு பிசுப்பும்
தசைக்கொடியுமாய்
ஒரு நாளுன் நெஞ்சில் பிறக்கும்
அப்போது
அப்போது
உனக்குள் வைத்த ப்ரியம் மிக்கவென்  
ஆன்மாவை கொன்றுவிடு.

-யதார்த்தன் –
08.10.2015



புதன், 7 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 7:09 AM


01.
விளிம்புக் கதை
……………………………………………….
என் இடது கை மணிக்கட்டுக்கு அருகில் இருக்கும் மொளியில் இப்பொழுதும் அந்த தழும்பு இருக்கிறது. நான் ஜீவனேசனை மறக்காமல் இன்று வரைக்கும் எழ்ழுதும் புனைவு யாவற்றிலும் அவனௌடைய பெயரை சேர்க்க முற்படுவதற்கு இந்த தழும்பும் ஒரு காரணம். அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம்.ஜீவனேசன் என் நண்பன் . வகுப்பில் குண்டன் அவன் தான் . அவன் இருக்கும் தைரியத்தில் நான் ஒரு குட்டி தாதாவாக அப்போது வகுப்பில் உலவினேன். எப்போது ஏ வகுப்புடனோ அல்லது சீ வகுப்புடனோ எங்களுக்கு ஆகாது நாங்கள்  பி வகுப்பு. நானு ஜீவந்நெசனும் யாரிடமாவது வம்பு செய்து தினமும் அதிபர் அறை  வாசலில் போய் நின்று பூரசங்கம்பால் நீலக்காற்சட்டையிலும் ,உள்ளும்  மூன்று நாலு தழுப்புகளுடன் திரும்புவோம்.
  வகுப்பில் சீசனுக்கு ஒரு போட்டி வரும் , மாபிள்கள் சேர்ப்பது , தனி கலர் மாபிள் , கிக்கிரி மாபிள் , தண்ணி மாபிள் இப்பிடி விதம்விதமாய் மாபிள் சேர்த்து “போளையடிப்போம் ”(இந்திய தமிழில் கோலி குண்டு  விளையாடுதல் ) , அல்லது  நாங்கள் அப்போது “வாஞ்சிநாதன் துவக்கு ” என்று பெயரிட்டிருந்த விளையட்டு போள்ஸ் பிஸ்ரல்கள் வாங்கி ”ஆமியும் இயக்கமும் “ சண்டை போடுவோம் , அல்லது றெஸ்லிங் காட் சேர்ப்போம் , யோன்சீனா , பஸ்ரிஸ்ரா , அண்ட ரேக்கர் என்று காட்கள் சேர்த்து  கண்ணாடி தாள் பேர்ஸ்கள் வாங்கி ஒன்றோடு ஒன்று இணைத்து அதனுள் அந்த படங்களை சொருகி பெருமையாய் காட்டியபடி திரிவோம் இப்படித்தான் கொஞ்ச நாள்  புது படம் போட்ட லேஞ்சி (கைக்குட்டை )  வைத்திருக்கும் சீசன்  ஆரம்பமானது, பஸ்ரிஸ்ரா , யோன் சீனா , ஹாரிபொட்டர் போன்ற படங்கள் போட்ட பெரிய லேஞ்சிகல் கடைகளில் தொங்கின.
அம்மாவிடம் கேட்டால் காசு தரமாட்டாள் . லேஞ்சி கிடக்கு தானே என்பாள் . அத்தோடு அக்காவும் தம்பியும்  என் எண்ணை வடியும் கரு கரு முகத்திற்கு ஏன் லேஞ்சி என்று நிச்சயமாக நக்கல் அடிப்பார்கள்.  எனவே காசு நான் தான்  ஒழுங்கு செய்ய வேண்டும் . அப்பாவிடம் ஒரு குணம் , வேலை முடிஞ்சு வீட்டுக்குவந்து  ஈசி செயரில் கொஞ்ச நேரம் சாய்ந்து கொள்வார் , அந்த சமயத்தில் தம்பியோ நானோ அப்பாவின் மடியில் ஏறிக்கொள்வோம். அப்பாவை கொஞ்சி விட்டு பொக்கற்றை தடவி ஐம்பதோ நூறோ எடுத்துக்கொள்வோம். ஏனெனில் அனறைய பணம் அம்மாவின் கைக்கு போய்விட்டால் , அரச வங்கியில் லோன் வாங்க போனது போல் ஆயிரதெட்டு விளக்கம் சொல்ல வேண்டி வரும்.
அன்று என்னுடைய கைக்கு அப்பாவிடமிருந்து 100 ரூபா கிடைத்தது.
நேராய் போய்  எனக்கு பிடித்தமான “ஹாரிபொட்டர்” லெஞ்சி வாங்கி கொண்டேன்.
மறுநாள் என் ஏழாம் பாடம் முடியும் போது என் லேஞ்சி காணாமல் போயிருந்தது. எட்டாம் பாடம் வரை தேடி விட்டேன். ஜீவனேசனும் என்னுடன் சேர்ந்து தேடினான். காணவில்லை. வகுப்பில் எல்லார் முகங்களிலும் திருட்டு களையும் ஒரு எக்காள சிரிப்பும் இருப்பது போல் எனக்கு தோன்றியது. அப்போது தான் ஒருத்தன் என்னிடம் இரகசியமாக ஜீவ்னேசன்ர  பாக்குகுள்ள பார் . என்றான்  , நானும் ஒருவேகத்தில் ஜீவனேசன் பையை திறந்து பார்த்தேன் . நான் ஜீவனேசன் பையை திறக்கும் போது அவன் பாய்ந்து வந்து பையை பிடுங்கிக்கொண்டான். நான் விடாமல் அவனிடமிருந்து அதனை பறித்து கீழே கொட்டினேன்  என் லேஞ்சி திரளாக சுற்றப்படு புத்தகங்களுடன் கீழே உருண்டது.
நான் ஜீவேசன் முகத்தில் பாய்ந்து குத்தவும் அவன் என்னை பிடித்து தள்ள என் மனிக்கட்டில்  மேசையின் இரும்பு கம்பி குத்தி இரத்தம் வரவும்
பாடசாலை கடைசி மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

02.
மையக்கதை
………………………………………………..
“தம்பி நல்ல வளமா இருக்கிற போல அண்ணாவ கவனிச்சிட்டு போ”
“சத்தியமா இல்லையண்ணை பஸ் காசு மட்டும் தான் கிடக்கு ”
“டேய் இண்டைக்கு மகாபொல(பல்கலைகழக மாணவர்களுக்கான அரச உதவிப்பணம் ) எடுத்திருப்பீங்கள் தானே சும்மா விடாத”
“இல்லையண்ணை , எனக்கு பேசரிதான் ”
“அப்ப உன்னட்ட இல்ல? ”
“இல்லையண்ணை”
“செக் பண்ணட்டோ ?”
“பணுங்கோ”
“சரி போ , எப்ப உனக்கு பேசறி ? ”
”தெரியாதண்ணை”
“டேய் உடைச்சு விட்டிடுவன் நாளைக்கு பேசரி எண்டு போட்டிருக்கு ”
“உண்மையா தெரியாதண்ணை”
“நீ நாளைக்கு பேசரி எடுத்ததும் , நேரா அண்ணாட்ட வந்து என்னோட ஒண்டும் கதைக்காம என்ர கொப்பிக்க  இரு நூறு வச்சிட்டு  போற ”
“சரி அண்ணை”
”சரி போ “

மச்சான் காசு பறிக்கிறாங்கள்டா … பு ..மோக்கள். காசு கவனம்.
எனக்கு அப்போதுதான் ராக்கிங் பிசாசுகளின் ஞாபகமே வந்தது. கையில் இருந்த நாலாயிரத்தை பர பரவென சுருட்டினேன் . லேஞ்சியை எடுத்து வரித்து அதனுள் பணத்தாள்களை தட்டையாக்கி வைத்தேன். லேஞ்சியை நான்காய் மடித்து பொக்கற்றினுள் வைத்துக்கொண்டேன்.
டேய் மச்சான்  பிச்சைகாரர விட மோசமடா இவங்கள்
“தண்ணியடிக்கிறதுக்குடா”
“நான் எழுதிக்குடுக்க போறன் மச்சான் அன்ரி ராக்கர் எண்டு”
“பொறட்டா இயர் முடியுதானே”
“முடிஞ்சா என்ன ?”
“எழுத்திக்குடுத்தா  நீ பிறகு ராக்கிங் செய்யேலா ”
“நான் இவங்கள மாதிரி ஈன பிறவி இல்லை, நான் ராகிங் செய்யவும் மாட்டன் . எங்கட பச்சில யாரையும் செய்யவும் விடமாட்டன்”
“பாப்பம், இப்பிடி பெஸ்ட் இயர்ல சொல்லுறவங்கள் தான் தேட் இயர்;அ வந்து ராக்கிங் செய்வாங்கள்”
“பாப்பம்”
மச்சான் காசு கவனம் , பிச்சை காறர் நிக்கிறாங்கள்.
”உது கொள்ளையடா ”
“தன்மையா தான் கெக்கிறாங்கள் டா”
“பு……... உது தன்மையோ ?”
“காசுகேட்டு குடுக்காட்டி அடிக்கிறேல்லதானே”
”ஆனா பிறகு ஏதும் காரணம் சொல்லி  அடிக்க ரை பண்ணுவாங்கள்”
“பெஞ்ச் பக்கம் வேண்டாம் மச்சான் ”
“அவங்கள் நல்ல பெடியள்டா பயமில்ல வா”
“சில பேர்தாண்டா மோசம்”
“நல்ல குடும்பத்திலயும் நல்ல பள்ளி கூடத்திலையும் படிச்சிருக்காதுகள்”
“சரி வாடா போவம்.”

03.
சிதைவுக்கதை
…………………………………………………


மாலை ஐந்து மணிக்கு புன்னாலைகட்டுவன் பஸ்சில் இருந்து இறங்கி  யாழ் பேருந்து நிலையத்திகுள் நுழையும் போதுதான் , கசகசத்த வியர்வையை துடைக்க பொக்கற்றுகுள் கயை நுழைத்தேன் பொக்கற்றுகுள் போன் மட்டும் இருந்தது. திடுக்கிட்டவனாய் , விறு விறுவென மற்ற பொக்கற்றுக்களை தடவினேன்.லேஞ்சி பூரணமாய் தொலைந்து போயிருந்தது.அப்போதுதான் புன்னாலை கட்டுவன் பஸ்சில் ஒரு முறை பணம் இருக்கும் பிரக்ஞையற்று முகத்தை துடைத்தது ஞாபகம் வந்தது. அத்தனை கூட்டத்தில் லேஞ்சியை பொக்கற்றுகுள் வைக்கும் போது தவறியிருக்க வேண்டும் . உடனே மினி பஸ் நின்ற இடத்தை நோக்கி ஓடினேன் , மினிபஸ்சின் நிறம் கூட மறந்து போயிருந்த்து. எங்களை இறக்கிய இடத்தில் யாரோ ஒரு அழுக்கு சறம் அணிந்த பைத்திய காரன்  குடித்து விட்டு மயங்கிக்கிடந்தான் . அவனுடைய முக்கால் நிர்வாணத்தை எல்லோரும் பொருட்படுத்தாமல் கடந்து போய்கொண்டிருந்தனர்.
எனக்கு தலைவிறைத்தது. அநியாயமாக என் அசிரத்தை பேசறி காசை கொண்டு போயிருந்தது. சோர்ந்து போனவனாய்.  பேருண்டு நிலையத்தின் இரண்டாவது கொட்டகைக்குள் வந்து அமர்ந்தேன். அருகில் ஒரு முதியவர்  உறங்கிக்கொண்டிருந்தார்.மாலை வேளை வியர்வை தோய்ந்த முகங்கள் வேகமாய் இயங்கிக்கொண்டிருந்தன. நேரம் 5.20 காட்டியது. எனக்கு 5.45 இற்கு தான் பஸ். என்னை நானே திட்டியவாறு அமர்ந்திருந்தேன்.
அப்போது எனக்கெதிரே அந்த பெண் வந்து அமர்ந்தாள் , சிவப்பு பூ போட்ட சீத்தை சேலையொன்று அணிந்திருந்தாள் .அவளுடைய வற்றிய மார்புகளில் இளகிப்போய் நின்ற சிவப்பு மேற்சட்டை, கரிய மெல்லிய தேகம் ,மிதந்து உதட்டை மீறி எழுந்த பற்கள், கண்கள் இடிந்து போய் முகம் சுருக்கு விழ ஆரம்பித்திருந்தது . எப்படியும் ஐம்பது வயதிருக்கும். அப்போதுதான் குளித்திருப்பாள் போல் இருந்தது . அந்த மாலை வியர்வை மனிதர்களுக்கு மத்தியில் அவளிடம் இருந்து லக்ஸ் சோப்பின் வாசனை லேசாய் வந்தது. அவளை கண்டவுடன் வளை எங்கையோ பார்த்த ஞாபகம் எழுந்தது. கொஞ்ச நேரத்தில் இனம் கண்டுவிட்டேன் . அது மிகப்பழக்கப்பட்ட முகம் தான் , ஆனால் குளித்து இப்படி நல்ல சேலையுடன் அல்ல , மிக அழுக்காக வாரப்படாத தலையுடன் , பிச்சைகாரியாக அவளை பளை ப்ஸ் நிலயத்தில் ஓரிரு முறை கண்டிருக்கிறேன். முன்பு அடிக்கடி பரந்தனுக்கு போய்வரும் போது அவள் பஸ்சில ஏறி யாசகம் கேட்ப்பாள். இப்போது பரந்தன் போவதில்லையாதலால் அவளை ஞாபகத்தில் கொண்டுவர எனக்கு உடனே இயலவில்லை. அத்தோடு நாலாயிரம் ரூபா போன எரிச்சலில் வேறு இருந்தேன்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவளை அப்படி பார்க்க, அதை விட ஆச்சரியம் அவள் அடுத்ததாய் செய்த செயல்கள்.
தன் தோழில் கொழுவி இருந்த அளவான ரப்பர் பையை திறந்தாள் .  USA  என்று அமெரிக்க தேசிய கொடி அரைபங்கு கிழிந்து போய் அந்த பையில் பளிச்சென்று தெரிந்தது .அவள் பையில் கைவிட்டு எதையோ எடுத்தாள் . பணம்.
பத்து ,இருபது , ஐம்பது , நூறு ரூபா தாள்கள் மற்றும் ஒரிரு ஆயிரம் ரூபாய் தாள்கள்  அவளுடைய கைகளில் இருந்தன. மெதுவாக ஒரு பக்கம் திரும்பி சாய் சுவருடன் ஒட்டி இருந்து கொண்டாள் சுற்றுமுற்றும் பார்த்தாள் , நான் சட்டென்று போனில் ஏதையோ நோண்டுவது போல் பாவ்லா செய்தேன்.
அவள் யாரும் தன்னை கவனிக்க வில்லை என்பதனை உறுதி செய்துகொண்டு விறு விறுவென பணத்தை அடுக்கினாள் . மஹிந்த ராஜபக்சவின் படம் போட்ட புது ஆயிரம் ரூபா தாள்கள் அவை , முதலில் ஆயிரம் ரூபாய்களை எண்ணி சுருட்டி மடியில் அடுக்கினாள் , பின்னர் பரதநாட்டியம் ஆடும் தமிழ்ப்பெண்ணின் படம்போட்ட நூறுரூபாய்தாள்களை எண்ணி சுருட்டினாள் பின்னர் , ஐம்பது , இறுதியாக இருபது ரூபாய்தாள்களையும் பத்து ரூபாய் தாள்களையும் அடுக்கி சுருட்டி மடிமேல் வைத்தாள்.
அவள் எண்ணும் போது நானும் குத்துமதிப்பாக எண்ணியதில் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் வந்தது கணக்கு. நான் சுவாரஸ்யம் குறையாத கண்களுடன் அவளையே கவனித்தபடியிருந்தேன்.
எல்லா தாள்களையும் சுருட்டி மடியில் வைத்த பின்னர் , மீண்டும் அந்த அமெரிக்கன் பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்தாள்.
லேஞ்சிகள்.
பெண்கள் பயன்படுத்தும் சின்ன சின்ன லேஞ்சிகள் நீல பச்சை நிறங்களில் இருந்தன. ஐந்து லேஞ்சிகள். ஒவ்வொன்றையும் எடுத்து மணந்து பார்த்தாள்,  பின்னர் ஆயிரம் ரூபாய் தாள்களையும் ஐந்நூறு ரூபா தாள்களையும் பச்சை லேஞ்சியில் வைத்து சுற்றிகட்டினாள் பின்னர் இரண்டாவது லேஞ்சியில் ஐம்பது மற்றும் நூறு ரூபா தாள்களின் சுருளை எடுத்து சுற்றிக்கட்டினாள்.இறுதியாக இரண்டு இருபது ரூபா தாள்களை சுருளில் இருந்து உருவி எடுத்தாள் பின்னர் மீதி தாள்களை இன்னொரு லேஞ்சியில் சுற்றி மடிமேல் வைத்தாள் . பின்னர் மீண்டு ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் நான் இன்னும் போனை நோண்டிக்கொண்டிருந்தேன் சற்று தள்ளி வேறு சிலர் எங்கேயோ பார்த்து பேசிக்கொண்டிருந்தனர். திருப்தியடைந்தவளாய் .
ஆயிரம் ரூபாய் லேஞ்சி சுருளை எடுத்து தன் மாராப்பை நீக்கி இடது மார்புச்சட்டைக்குள் சொருகினாள் , பின்னர் அடுத்த இரண்டு லேஞ்சி சுருள்களையும் வலது மார்பு கற்சைக்குள் சொருகினாள். மீதமிருந்த லேஞ்சி ஒன்றாள் முகத்தை துடைத்துக்கொண்டாள் . துடைத்த பின் அதனை அமெரிக்கன்  பைக்குள் திணித்து கொண்டாள். பின்னர்  எஞ்சிய லெஞ்சியை எடுத்து ஒருமுறை முகர்ந்து பார்த்தாள் . பின் அதை கைகளில் சுருட்டி வைத்துக்கொண்டு. பைக்குள் கைவிட்டு ஒரு நொக்கியா போனை எடுத்து பார்த்தாள் அது ஓப் ஆகி இருந்தது.
”தம்பி நேரம் என்ன  ?”
“5.46”
சட்டென எழுந்து வேகமாய் கொட்டகையை விட்டு இறங்கி மினிபஸ் தரிப்பிடத்தை நோக்கி சென்று ஒரு மினி பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்வது தெரிந்தது . மெல்ல எழுந்து அந்த மினி பஸ்ஸின் அருகில் சென்றேன் , நான் அதனை நெருங்க அது புறப்பட்டு சென்றது.
அபோதுதான் ஏதோ ஞாபகம் வந்தவனாய் திடுக்கிட்டு 
நேரத்தைப்பார்த்தேன். ”5.55”

என்னுடைய பஸ் புறப்பட்டு பத்து நிமிடம் முடிந்திருந்தது.

-யதார்த்தன் -





ஞாயிறு, 4 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 4:13 AM



அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமாகவும்  இருக்கிறாள் . இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டமையால் மனுஷி என்று அழைக்கப்படுவாள் என்றான்
                                                 -ஆதியாகமம் 2 : 23

அவளை அன்று தற்செயலாகத்தான் கண்டேன், வெள்ளை உடையில்  அந்த மழைநாளின் மாலைப்பொழுதில் எங்கோ போய்க்கொண்டிருந்தாள். சந்தடி இல்லாமல் அவளை பின் தொடர எனக்கு வாய்ப்புகள் அப்போது அதிகம் இருந்தன.

மழைதொடங்கி ஒரு மாதமாகிவிட்டது  . அன்றைய மழை அப்போதுதான்  ஓய்ந்திருந்தது. மேகங்கள் விலகாத வானில்  ஓரிரண்டு பறவைக்கூட்டங்கள் கடந்து சென்றுகொண்டிருந்தன. கரிய நிறப்பறவைகள் தெளிவாய் தெரிந்தன.பெரும்பாலும் அவை நீர்க்காகங்களாக இருக்க வேண்டும்   அல்லது நான் அப்பிடி நினைத்துக்கொள்கிறேன்.வறண்டு கிடந்த தரவைகளெல்லாம் நிரம்பியிருக்கும் எனவே நீர்க்காகங்கள் அதிகம் பறந்துசெல்கின்றன போலும் .எங்கேயோ எதையோ தொலைத்து விட்டு தேடும் மெல்லிய காற்று  அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. செங்கிரவல் பாதை மழையிலூறி ஈரத்தில் பூத்திருந்தது. கால் வைக்க மெதுவாய் சிதைந்து நிலம். ஈரம் நீராய் தெரியுமளவிற்கு அன்று மழை இறங்கியிருந்தது.

டிசெம்பர் 2012

“எனக்கு மழை பிடிக்கும்டா ”
“எனக்கும் பிடிக்கும்”
“ஒரு நாள் நனைவமா ?”
“ம்ம் ஓகே”
“எனக்கு ஐஸ்கிறீம் வாங்கி தருவியா ?”
“ஐஸ்கிறீம் ? என்னடி தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி ?”
“போடா பேய் . நான் போறன்  ”
“சரி சரி வாங்கி தாறன்”
“எவ்ளோ ?”
“எவ்ளோ வேணும்”
“இவ்ளோ கை நிறைய ”



 குளிர்ந்து கிடந்த பச்சை பற்றைக்காட்டுக்கு நடுவேயோடுமந்த செங்கிரவல் பாதை எதிரே நடந்து செல்லுமவளின் ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்தியது. பெரும்பாலும் அடிக்கடி பார்த்தவொன்று , அஹ் .. ஞாபகித்து விட்டேன். அடிக்கடி பார்க்கும் ஒன்று தான். எப்போதாவது அழும்போது மெதுவாய் மெல் விரல்களென் நெஞ்சு ரொமத்தை வருட அவள் சாய்ந்து கொள்வாள் , தன்னிச்சையாய் என் உதடுகள் இறங்கியவள் நேற்றியின் முடிவில் அல்லது  உச்சந்தலையில்  முத்தமிடும் போது நாசி அவள் கேசத்தின் நெடியை நறுமணமாய் உணரும். கண்கள் அவள் வகிட்டில் நிலைக்கும்.  ஆமாம் , அந்த செங்கிரவல் பாதை அவளுடைய கேசத்தை பிரித்தோடும் நெற்றி வகிடை போலத்தான் ஒடியது.

ஏப்ரல் 2013

“ஏண்டா எப்பவும் உச்சில கொஞ்சுறனி ?”
“ குழந்தையின்ர உச்சில கொஞ்சி இருக்கிறியா எப்பவாவது ?”
“ஓம் ஏன் ?”
“அதில் ஒரு துடிப்பு இருக்கும் கண்டிருக்கிறியா ?”
“ஓ அதில தொடக்கூடாதுன்னு சொல்லுவினம்”
“எனக்கு அதில முத்தம் குடுக்க பிடிக்கும் ”
“அதுக்கு என்ர உச்சந்தலையிலும் துடிக்குதோ ?”
”ம்ம் நீ குழந்தை தானே ”
“போடா”


ஈர கிரவலில் புதைந்து புதைந்து நடக்கும் அவளின் வெற்றுபாதங்கள்  விட்டுச்சென்ற சுவடுகளை பின் பற்றினேன். அவளின் மென் காலின் நகர்வுச்சந்தத்தை என் காலுக்குள் திணிக்க பார்த்தேன் . அதே பாதச்சுவடுகளை என் செருப்பணிந்த  கொடுங்காலால் அதன் மீது வைத்து வைத்து நடந்தேன். அவளின் சுவட்டை மிதித்து நடக்கிறேன் என்றொரு பரவசம் பாதங்களில் ஆரம்பித்து இதயம் வரை மேலெழுந்து வந்து காணாமல் போனது.
 பத்தோ பன்னிரண்டோ அடிகளுக்கு பிறகுதான் மனத்திலொன்று உதைத்தது. செங்கிரவல் நிலத்தில் வரையப்படும் அவள் பாதம் நிகழ்த்தும்  ஓவியங்களை சிதைத்தபடி நடக்கிறேன். திரும்ப்பி பார்த்தேன் எவ்வளவு சித்திர தடங்கள் சிதைந்து போய்விட்டன. என் பாவம் , ஒவ்வொரு தடத்தின் குழியிலும் நீரூறி நின்றது. நிலமழுதிருக்கும். இனியும் அவள் பாத ஓவியங்களை சிதைத்தபடி நடந்தால் மேற்படி செங்கிரவலென்னை சபிக்கும். விலகினேன்.

யூன் 2013

”உனர கால தாடி ? “
“ஏண்டா  போ தரமாட்டன்”
“ஏன் ?”
“நீ ஆம்பிளை பெடியனெல்லோ “
“இப்ப தர போறியா இல்லையா ?”
“டேய் நீ படம் பாத்து கெட்டு போன”
“நான் என்ன பம்பரமே விட்டனான் ?”
“சீ நாய்”
”தாடி”
“ம்ம் என்ன கொலிசு போட போறியோ ?”
“இல்ல எனக்கு கொலிசு பிடிக்காது”
“ஏன் ?”
“பிடிக்காது”
“அதுதான் ஏண்டா ?”
“எனக்கு குடை மரக்கொப்புகள்ல உரசுற சத்தம் , கொலிசு சத்தம் , கிபிர் சத்தம்  மூண்டும் பிடிக்காது. கேக்கும் போது படபடப்பா  பதட்டமா ஆகிடுவன்”
“ம்ம் சரி நான் கொலிசு போடமாட்டன்”
“இல்ல போடு பரவாயில்ல”
“இல்ல போடமாட்டன்”


நிமிர்ந்து பார்த்தேன். வேகமாய் தான் போகிறாள்,  கணுக்கால் வரை இறங்கி நின்ற வெள்ளை சல்வாரின் மீது ஒரு துளி கிரவலும் தெறிக்கவில்லை. என் ஜீன்ஸின் பின் புறம் ஏறக்குறைய சிவப்பாகி விட்டது. எனக்கு அது ஒரு பொருட்டாய் தெரியவில்லை. அவளை தொடர்ந்து செல்கிறேன் என்ற பரவசம் , அந்த நிறைந்த வயிற்றுடன் என் தலைக்கு மேலே பறந்து கடக்கும் கூடுதிரும்பும் பறவைகளின் குதூகலத்தை ஒத்திருந்தது.
மெல்ல மெல்ல அவள் வேகம் அதிகப்பட்டது.  அவளுக்காக  மட்டும் தோன்றிய பாதை போல அவளை அது தாங்கிச்சென்றது.   கொஞ்சம் வேகம் கூட்டி அவளை நெருங்கினேன். நெருப்பினை நெருங்கியும் நெருங்காமலும் குளிர்காயும் ஒரு குளிர்காலத்து கிழவன் எனக்கு அப்போது எங்கிருந்தோ ஞாபகத்தில் வந்தான்.
வானம் இன்னும் கனதியாய் மேகங்களை உற்பத்தி செய்வது தெரிந்த்து. மெல்ல இன்னும் கொஞ்ச குளிர் அதிகரித்தது. தூரத்தில் ஒரு மேகத்தின் பின்னால் சிறுமின்னல் இடியின்றி எட்டிபார்ப்பதை நான் கண்டேன். அவளுக் கண்டிருக்க வேண்டும்.  பாதங்கள் அசையும் வேகத்தை சற்றே இன்னும் அதிகம் செய்தன.  பற்றை காடுகள் கடந்து கிரவல் பாதையின்  இரு மருங்கிலும் எழுந்து யாரை யார் தழுவுவது அல்லது முத்தமிடுவது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் கொன்றை மரங்களை கடந்து சென்றாள்.
 கூதல் லேசாய் வீச கொன்றைகளில் இருந்து சொரியும்  சிலுநீரின்  துமிகளையும் துளிகளையும் புறக்கணிக்க நினைந்தவளாய் ஷோலை எடுத்து  முக்காடிட்டாள்.


சனவரி 2014

” டேய் ஏண்டா மரத்த உலுப்புற ?”
“சிலு நீர் தெறிக்க நல்லா இருக்கும்  ”
“வீசிங் வந்து  செத்து போவன் பறுவாயில்லையா”
“ஓ அத மறந்திட்ட  சொறி ராட்சசி”
“ம்ம்”
“இந்தா  துடச்சு விடுறன்”
“ஹலோ எங்களுக்கும் துடைக்க தெரியும் ”
“வெவ்வ்வெவ்வே”
“டேய் ”
“என்னம்மா  ?”
“நான் உனக்கு வேணுமா ?”
“ஏண்டி இப்பிடி ஒரு கேள்வி ?”
“இல்லடா நான் வருத்தகாறி ”
“அதுக்கென்ன ? எல்லாருக்கும் எதோ வருத்தம் இருக்கு ”
“இல்லட்டா வீசிங் இருந்தா கற்ப பை வரைக்கும் பாதிக்குமாம்”
“லூசா நீ எவ்ளோ பேருக்கு இருக்கு”
“போடா  அப்பிடி ஏதும்னா  நான் உனக்கு வேணாம்”
“லூசு போல பேசாத சரியா  , இதெல்லாம் ஒரு பிரச்சினையா ?”
“இல்லடா நான் வேணாம்  உனக்கு”
”சொன்னா கேளுடி “
“இல்ல வேணாம்”
“அப்ப நான் உனக்கு வேணாம் அப்பிடிதானே ? ஏன் பிடிக்கேலயா ?”
“நான் எங்க அப்பிடி சொன்னான்  ? நான் தான் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவள் ”
“இஞ்சபார்  கடைசிவரைக்கும் நீதான் எனக்கு அத ஆரும் மாத்தேலா ”
“இல்லடா வேணாம் நான் உனக்கு”
“……..”
“விம்மாத எருமை , கடைசில என்னை கை நீட்ட வச்சிட்டல்ல , பிசாசு இனி இப்பிடி ஏதும் கதை நானே கொல்லுவன் உன்னை”
“ம்ம் ”
“விம்மாதையடி”
“ம்ம்ம்”
“நோகுதா  ?”
“அடிச்சு போட்டு நோகுதா எண்டு கேக்கிறியா ?”
“இப்பிடிகதைச்சா  அடிக்காம ?”
“ம்ம்”
“ஏய் பிளீஸ் அழாதம்மா”
“போடா”
“பிளீஸ் சொறிடா ”
“ம்ம் போ”
“இனி சத்தியமா அடிக்க மாட்டன் , பிளீஸ் உன்மேல சத்தியம்”
“இல்ல அடி , நான் இனி இப்பிடிகதைச்சா அடி , எனக்கு பிடிச்சிருக்கு ”
“இல்ல அடிக்க மாட்டன்”
“எனக்கு பிடிச்சிருக்குடா அடிடா”
”மாட்டன்”
“அப்ப கோவம் போ”

 
  மேலும் நடந்தாள்  ,  என் கால்கள் பரவசமாக தொடர்ந்தன .அப்போதுதான் ஷோலுக்கு வெளியே முதுகைக்கடந்து தொங்கும் அந்த மென் சுருள் முடிகளிலும் லேசாய் ஈரம் சொட்டுவதை கண்டேன். மழைநாளிலும் முழுகியிருக்கிறாள். என்னையறியாமல் கைகள் ஏதையொ ஞாபகத்து எண்ணின, பின் மெல்ல என் உதடுகள் புன்னகைத்துக்கொண்டன.

சனவரி 2014

”சாப்பிட்டியா ? ”
“ம்ம் “

“என்ன செய்ற ?”
“ம்ம் இருக்கிறன் சொல்லு ?”
“கோவமா ஏதும் ?”
“இல்லைடா தலையிடிக்குது ”
“முழுகின்னியா ?”
“ரொம்ப வலியா ?”
“டெய்ய்ய்”
“என்ன ?”
“உனக்கெப்பிடி ?”

“கொஞ்ச நேரம் தூங்கி எழும்பு சரியாகிடும் . Miss  you ma ”


அப்போது  அவள் பாதையை விட்டு இறங்கி அந்த பச்சை புல்வெளியில் தனியே நிற்கும் தேவாலயத்தின் துருவேறிய பழைய கேற்றை  நகர்த்திக்கொண்டு உள் நுழைந்தாள் . அந்த ஆங்கிலேயர்கால  தேவாலயத்து வளவினுள்  அவள் நுழையவும் வானத்தில் பெரு மின்னலொன்று வெட்டி இடியிடித்தது. அத்தோடு ஒரு நீர்க்காக கூட்டமொன்று வேகமாய் கடந்து தெற்கே மறைந்தது.

மார்ச் 2014

“உனக்கு என்ன பறவை பிடிக்கும் ?”
“நீர்காகம்டி”
“நீர்காகமோ ?”
“ஓம்”
“ஏண்டா ?”
” முதல் முதல் நீ என்ன பாக்க வந்தது ஞாபகம் இருக்கா?”
“ஓம்”
“எவடத்த முதல் முதல் மீட் பண்ணினம் ?”
“யாழ்ப்பாணம் டவுனுக்க ”
“எவடத்த ?”
“அந்த லைரரிக்கு கிட்ட ”
“ம்ம்  அந்த புல்லுகுளத்துக்கு பக்கத்தில , ஞாபகம் இருக்கா ?”
“ஓம் நல்லா ஞாபகம் இருக்கடா”
“அண்டைக்கு உன்ர பஸ்வர 10 மணி ஆகிட்டு  , நான் எட்டு மணிக்கே அங்க வந்திட்டன் , ”
“ஓ”
“உன்ன காணுற சந்தோசத்தில அண்டைக்கு புல்லுகுளக்கரையில இருக்கிற பெஞ்சில இருந்து குளத்த பாத்து கொண்டிருந்தன் ”
“லூசு அந்த குளம் ஓரே சாக்கடையெல்லோ ? மணக்காதோ ?”
“இல்லடி மணக்காது ”
“ஓ”
“அண்டைக்கு குளத்தில நாலஞ்சு நீர்க்காகம் மீன் பிடிச்சு கொண்டு இருந்திச்சு”
“பார்ரா”
“அதுகளை பாத்துகொண்டு இருந்தன்”
“ம்ம்”
“அதுகள் மீன் பிடிக்க ஒருக்கா தண்ணிக்குள்ள மூழ்கினா கொஞ்ச நேரம் கழிச்சு தான் தண்ணிக்கு மேல வரும்”
“தெரியும் நானும் பாத்திருக்கன்”
“எனக்கு அப்ப அது ஆச்சரியமா இருந்திச்சு , அதுட மீன் பிடிக்கிற லாவகம் ஒரு புதிர் போல எனக்கு தெரிஞ்சுது. எந்த இடத்தில மூழ்கும் எந்த இடத்தில எழும்பும் எண்டு என்னால கெஸ் பண்ணவே முடியேல்ல , நான் உன்ர பஸ் எப்ப்ப வரும் எண்டு பாத்துக்கொண்டும் இருந்தன் .
“ம்ம்”
ஏதாவது லோங்  ரிப் பஸ் வந்தா ஓடி போய் பாப்பன் நீ இறங்கிறியோ எண்டு காணவே இல்ல, தீடிர் ரெண்டு சனத்துக்குள்ள நீ இறங்கிற மாதிரி இருக்கும் , ஆனா அது நீயா இருக்க மாட்ட, இப்பிடி நிறைய பஸ்ல நீ தோன்றி தோன்றி மறையிறது போல இருந்திச்சு .சலிச்சு போனன். அப்ப அந்த நீர்க்காகத்தின்ர புதிர் போலதான் நீ எனக்கு தெரிஞ்ச ”
“ஹா ஹா”
“உன்ர பஸ் வந்து நிண்டதும் நீ  இறங்கிறத கண்டிட்டன் . வேகமா எழும்பி ஓடி வந்தன்  , நீ ஒரு சிரிப்போட வந்த , இப்பவும் ஞாபகம் இருக்கு அந்த சிரிப்பு ”
“உன்ன  கூட்டி கொண்டு வெளிக்கிடேக்க ஒருக்கா குளத்தை பாத்தன் ஒரு நீர்க்காகமும் குளத்தில இல்ல. அண்டைக்கு பிறகு நீர் காகம் எண்டா பிடிக்கும்”
“…..”
“ஏய் லூசு ஏண்டி அழுற ”
“போடா எப்ப பாத்தாலும் என்னை அழ வச்சு கொண்டு இருக்கிற”

அவள் தேவலயத்தினுள் நுழையப்போகிறாள் , மழை அப்போது மெல்ல மெல்ல தூறத்தொடங்கியிருந்த்து. தேவாலயத்தின் வெளியே இருந்த சிலுவையில் தொங்கும் தேவகுமாரனின் சொரூபத்தை சுற்றிவந்தாள் , அவருடைய கால்களில் கையை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள் ,சிறிதுநேரம் அவரின் முள்முடியில் இரத்தம் கசிந்து இறங்கும் பரம சாந்தி படைத்த முகத்தை பார்த்தபடியிருந்தாள். மழை இன்னும் லேசாய்தான் இறங்கிக்கொண்டிருந்தது.

யூன் 2015

”எனக்கு ஜீசஸ் எண்டா உயிர்டா”
“தெரியும்டி”
“எல்லா நேரமும் என்னோட ரெண்டே பேர்தாண்டா இருக்கிறவ”
“ஆர் ?”
“யேசப்பாவும்  , கண்ணீரும் ”
“சீ அழாதயடி எதுக்கெடுத்தாலும்’
“எனக்கு அழப்பிடிக்கும்டா .”
“லூசு”’
“எனக்கு அவர்தான் அப்பா ”
“ஹா ஹா  சரி அப்ப இனி உன்னை  டோட்டர் ஒப் ஜீசஸ் எண்டு கூப்பிடுறன்”
“போடா”
“ஏய்”
“என்னடா ”
“உன் கூட இப்பவும் ரெண்டு பேர்தான் இருக்கிறாங்கள் எண்டு நினைக்கிறியா ?”
“இல்லடா இப்ப மூண்டு”
“மிஸ் யூடி

வெளியே இருந்த சொரூபத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தாள் நிமிர்ந்து பாத்தேன் மெதுமெதுவாய் அந்த கறுப்பு வானம் ஒழுகத்தொடங்கிருந்தது. தேவாலயத்தின் வாசலுக்கு நேர்மேலே  மூன்று குழந்தை தேவதைகளின் சிலைகள் மூன்று திசையைப்பார்த்தவாறு நின்றிருந்தன, ஒரு தேவகுழந்தையின் கையில் அம்பும் வில்லும் , இன்னொன்றின் கையில் முள்சுற்றப்பட இதயமொன்றும்  மற்றொன்றின் கையில் விரிக்கப்பட்ட புத்தகமும் இருந்தன. பச்சையாய் பாசி படிந்துபோய் மழை நீரில் நனைந்து ஈரமாய் மூன்று தெவகுழந்தைகளும் தம் இறக்கைகளை அசைத்து பறக்கும் அந்த சிலைக்காட்சியை பார்த்தபடிநின்றேன் மூன்றாவதாய் இருந்த குழந்தையின் கையில் இருந்த புத்தகம் லேசாய் உடைந்திருந்து உள்ளே வைகக்ப்பட்டிருந்த கம்பி கறள் ஏறி வெளித்தெரிந்தபடியிருந்தது.

மார்ச் 2015

“இதான் உன் முடிவா ?”
“ஓம் , பிளீஸ் என்ன ரோச்சர் பண்ணாத ”
“நான் உன்னை ரோச்சர் பண்ணலடி , பிளீஸ் புரிஞ்சுக்கோ என்னை”
“ஐயோ உனக்கு சொன்னா விளங்காதா ?  சீ நீ என்ன மனுசன் என்ன இப்பிடி கஸ்ர படுத்துற ?”
“நான் உன்னை சரியா புரிஞ்சுகலதாண்டி , உன்னிலையும் பிழை இருக்கு ”
“ஐயோ கதைச்சதையே திரும்ப திரும்ப ஒப்பிக்காதடா , என்ன நின்மதியா இருக்க விடு ”
“நான் பண்ணதெல்லாம் பிழைதாண்டி , நான் என்னை மாத்திகிறன்.”
“ஐயோ உன்னில ஒரு பிழையும் இல்ல என்னிலதான் பிழை , பிளீஸ் என்னை விடு இப்பிடியே”
“பீளீஸ்டி என்னை புரிஞ்சுக்கோ ”
“முதல்ல இந்த டி போடுறத நிப்பாட்டு எரிச்சலா கிடக்கு”
“கொஞ்சம் நான் சொல்லுறத கேள் பிளீஸ்”
“ஐயோ பிடிக்காம உன்னை சகிச்சுகிட்டு வாழசொல்லுறியா ?”
“அப்பிடி என்னடி சகிகேலாம இருக்கு என்னில ?”
“ஐயோ பிளீஸ்”
“நீ யேசுன்ர மகள் தானே என்னை மன்னிக்க ,மாட்டியா ?”
“சீ  ஏன் இப்பிடி சினிமா டயலோக் எல்லாம் கதைக்கிற , புத்தகம் படிச்சு படம் பாத்து நீ கற்பனைலையும் கவிதைலயும் வாழுற , இதான் நீ”
“அதுல என்ன தப்பு ?”
“ஐயோ சாமி என்னை விடு பிளீஸ் , என்னை இப்பிடி ரோச்சர் பண்ணின எண்டா நான் செத்து போவன்”
“இல்ல நீ சாக வேண்டாம் நான் போறன்”
பீளீஸ் என்னை இப்பிடியே விடு
”நான் கற்பனைல  வாழல ஒரு நாள் புரிஞ்சுப்ப , உனக்கு அன்பு தெவிட்டி போச்சு ”
“பிளீஸ் பேசாத என்னோட , எனகு இதெல்லாம் பிடிக்கேல ”
”ம்”

நான் தேவகுழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் உள்ளே போய்விட்டாள். கையில் ஒரு மெழுகுதிரியை எடுத்து ஏற்றுவது தெரிந்தது. பின் மெல்ல மண்டியிட்டு பிரார்த்தனையை ஆரம்பித்தாள்.
அவள் பிரார்தனை செய்யும் அழகை பார்க்க வேண்டும் போல இருந்தது. அன்றோருநாள் , நீ பிரார்த்தனை செய்யும் போது எதிரில் நின்று நான் பார்க்க வேண்டும் என்று அவளிடம் கூறியது ஞாபகம் வந்தது கண்கள் கலங்க அவள்   தேவகுமாரனை பார்த்து  , முகம் கெஞ்ச கை விதிர் விதிர்க்க  கொழுத்தப்பட்ட மெழுகின் ஒளி அவள் முகத்தில் படிய , அவள் பெருந்தந்தையின்  கருணைமுகம் அவளுக்கும் தொற்றிக்கொள்ளும் , அந்த கணத்தில் அவள் பிரார்த்தனையை எதிரிலிருந்து தரிசிக்க வேண்டும் என்று மனச்சுவர்களை ஆசை மிருகம் கொடு நகத்தால் பிறாண்டிக்கொண்டிந்தது.
எனினும்
அகால மரணமடைந்த என் சபிக்கப்பட்ட ஆத்மா புனிதம் மிக்க தந்தையும் .மகளும் பேசிக்கொள்ளும் அந்த தூய சன்னிதானத்திற்குள் எப்படி நுழைவது ?
மழை வலுக்க நனைந்து கரைந்து  ,நீராகி , தேவாலய வளவை விட்டு வெளியே ஓடத்தொடங்கியது ஆத்ம வெள்ளம்.

-யதார்த்தன்

08 ஆகஸ்ட் 2015