ஞாயிறு, 20 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 1:36 AM



லண்டன்காரர் அறிமுக நிகழ்வில் நடைபெற்ற பிரதிமீதான “விமர்சனம்” எனும் அபிப்பிராய முன்வைப்பு மீதான நான் முன்வைத்த கருத்தினை சாரம் செய்ய முற்படுகின்றேன்.

லண்டன்காரர் மீதான என்னுடைய  அபிப்பிராயத்தினை சனவரியில் வெளிவர இருக்கும் புதிய சொல் இதழில் பதிவு செய்துள்ளேன். அதில்
சமீப நாட்களாக விமர்சனம் என்ற சொல்லின் மீது அதன் பிரயோகத்தில் இருக்கும் அதிகார தொரணை பற்றியும் உடன்பாடற்ற தன்மை என்னிடம் இருக்கிறது. தன்னுடைய முழுமையை  ஒட்டுமொத்தமாக்கி  ஒரு பிரதியை ஆக்குபவனின்மீது அது பிழை இது சரி என்று வாளெடுத்து வெட்டுவது எந்தளவு சரியான செயல் என்பது என்னுடைய கேள்வி. காலம் காலமாக விமர்சனம் என்ற பெயரில் நக்கீரர் தொடங்கி  “நெற்றிக்கண் திற்ப்பினும்” என்று ஆரம்பிக்கின்றோம்
 என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தேன்.

சமீப காலமாக மொழியில் இயங்கும் சில இலக்கிய துறைசார் சொற்களின் மீது கேள்வி எழுப்பத்தொடங்கி இருக்கிறது புதிய சொல் முதலான இதழை மையம் கொண்ட எழுத்துக்கள் .
 குறிப்பாக

விமர்சனம்
படைப்பு
படைப்பாளி
எழுத்தாளர்

முதலான சொற்களின் அர்த்தம் , சாத்தியம் , அதிகாரம் , இயங்குமுறைமை முதலானவற்றின் மீது தர்க பூர்வமான கேள்விகளை கேட்க ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக பின்னை மொழிச்சூழல் இந்த சாத்தியப்பாடுகளை மேற்கொள்வதில் முன்னனி வகிக்கின்றது.
பின் அமைப்பியல் , பின் நவீனத்துவம் , பின்னை மொழிச்சூழல் முதலான வியாக்கியானப்பரப்புகளின் தொடர்ச்சியான வாசிப்பும் விவாதங்களும் “சொற்களின் அதிகாரம்” என்பதனை போட்டுடைத்து அவற்றின் அதிகார மையத்தினை வலுவிழக்கச்செய்யும் முயற்சியை தொடங்கி இருக்கின்றன. 

இந்த பின்னனியில் தான் நேற்றையதினம் அனோஜன் பாலகிருஷ்ணன் , கெளதமி , கலையரசன் த , மூவரும் தம் கருத்தாடல்களை முன் வைத்த பின் கிரிஷாந் , ஜேசுராசா முதலானோர்  மூவரின் விமர்சனங்கள் என்ற தொனிக்கு கீழ் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் மீது பல திசைக்கேள்விகளை எழுப்பியதோடு தம் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து நான் விமர்சனம் என்று சொல்லப்படும் அப்பிராய உருவாக்கத்தின் மீதுள்ள அதிகார தொனியினை நொக்கிய என் கருத்தாடலை முன் வைத்தேன் . அதனை சற்றே தெளிவாகவும் சுருக்கமாகவும் கீழே விளக்க முற்படுகின்றேன்.

விமர்சனம் என்பது தற்போதய தமிழ்ச்சூழலில்( பனுவல் , சினிமா , இசை , ஓவியம்ம் , நடனம் இலக்கியம் யாவற்றின் மீதும் ) பெருவாரியாக எத்தகைய தன்மையினதாக புரிந்துகொள்ளப்படவும் , முன்வைக்கப்படவும் படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கின்றேன்.

சாரு நிவேதிதாவின் ஸுரோ டிகிரி என்ற பிரதியின் மீது ஒரு பிரபல இணயப்பதிவர் ஒருவர் தன்னுடைய “விமர்சனம்” என்பதில்
“சாருவின் புத்தகத்தை மேசையில் வைத்திருந்தேன் தவறுதலாக கை தட்டுபட்டு  அருகில் இருந்த குப்பைகூடைக்குள் வீழ்ந்துவிட்டது.அப்படியே விட்டுவிட்டேன் ”

இத்தகைய வகையறா விமர்சனங்களையே நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் , இவற்றையே விமர்சனம் என்கின்றோம் , சாருவின் பிரதியை சொல்லிவிட்டேன் என்பதற்காக சாருவை நல்ல விமர்சகர் என்று சொல்வதற்கில்லை , தமிழின் மொசமான அதேநேரம் மொழித்தந்திரம் மிக்க “விமர்சகராக” சாருவையே முதலில் சொல்வேன்.  

இங்கே நான்  இரண்டு வகையான விமர்சகர் கூட்டத்தினை இனம்காண்கின்றேன்,
1.   பிரதியை தொட்டும் கூட பார்க்காமல் , எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை , அவர் பற்றி கேள்வியுற்ற கர்ண பரம்பரைக்கதைகள் , அல்லது பிரபலம் ஒன்றின் கருத்து , எழுத்துச்சண்டித்தனம் என்பவற்றின் வழியே எழுதித்தள்ளும் கூட்டம்.
2.   பிரதியை வாசித்தாலும் பிரதியின் விரிந்து செல்லும் சாத்தியங்களை , புறக்கணித்தல் , தம் வாசிப்பு செருக்கு, விவாத மனப்பாங்கு , அறிவு வன்முறை  என்பவற்றை விமர்சனம் என்ற பெயரில் நிகழ்த்துதல்.

இங்கே முதலாவது வகையறாக்களை  உளவியல் சிக்கல்களை தீர்க்கும் மருத்துவர்களுக்கு பரிந்துரைத்துவிட்டு இரண்டாவது வகையறாக்களை எடுத்துக்கொள்வோம்,

சாருவையே எடுத்துகொள்வோம் சாரு அடிக்கடி புலம்பித்தள்ளும் ஒருவிடயம் தமிழில் ஏன் உலகதரமான இலக்கியங்கள் எழுதப்படுவதில்லை , ஆல்பர்காம்யுவும் , மார்வெஸ்சும்  ஏன் தமிழ்ச்சூழலில் பிறப்பதில்லை என்று , அவரிடம் நான் கேட்கும் முதல் கேள்வி
“உங்களால் ஏன் ஓர் உலக இலக்கியத்தைஎழுத முடியவில்லை ?”
எழுதும் ஒவ்வொருவரிடமும் , இதே கேள்வியை கேட்கவேண்டும் , தமிழ்ச்சூழல் நல்ல இலக்கிய சாத்தியங்களை எல்லாக்காலங்களிலும் ஏற்படுத்தியிருக்கின்றது , மிகச்சிறந்த இலக்கியங்கள் எழுதப்படுகின்ற, ஆனால் அவை  எப்படி வியாக்கியானம் செய்யபடுகின்றன , ஒரு எழுத்தர் அடுத்த கட்டத்திற்கு செல்லும்வகையில் நாம் அவருடைய எழுத்த எவ்வளவு தூரம் விவாதித்து இருக்கிறோம் , தமது பிரதியின் மீது எழுத்தர் எத்தனை பேர் மோகமற்று தம் பிரதியையே வெளியே வந்து விமர்சித்து இருக்கின்றனர் ?

விமர்சனத்தை பிரதி வாசிப்புக்கான சாத்தியப்பாட்டிற்கு ஏன் எடுத்துச்செல்வதில்லை , கோபமாகவும் , மற்றவனை முட்டாளெனவும் , பிரதி மலத்திற்கு ஒப்பானது எனவும் சொல்லிக்கொள்ளுவது வன்முறையா விமர்சனமா ?

முழுமை என்பது இறந்த ஒன்றாகும் என்பார் ஓஷோ , முழுமையற்ற ஒன்றே பிரதி , அது வளர்ந்து செல்லும் , இன்னொன்றினை உருவாக்கும் சாத்தியங்களை சொல்லிக்கொடுக்கும் அதன் அளவில் நிறைந்து மீதி வெளியே வழிந்து இன்னொன்றை நிரப்பும் , பிரதி மையமற்ற தளம்பும் நீர்ப்பரப்பாக மாறுவதனை விமர்சனங்களே சாத்தியப்படுத்த வேண்டும்.
மோசமான விடயமொன்றை ஒரு பிரதி கொண்டுவரும் பொது அதனை மோசமானது என்று தவிர்கலாம் , வில்லங்கத்துக்கு அதனை பிரதி என்று சொல்லி எடுத்து பின்னர் அதனை ஏன் போட்டு வெட்ட வேண்டும் , மோசமான பிரதியை விட மோசமானது அது , மோசமானவற்றை புறக்கணிக்கவும் , நல்லபிரதிகளை வியாக்கியானம் செய்யவும் எப்போது கண்டுகொள்ளப்போகின்றோம் ?
சோகம் என்னவெனில் இத்தனை காலமும் விமர்சனம் என்ற ஒரு சொல்லை ஒரு வன்முறை கருவியாக , நஞ்சாக , பழிதீர்க்கும் அரக்கச்சொல்லாக , மாற்றிவிட்டோம் என்பதே .

இப்போது அச்சொல்லை மீள்வாசிப்பு செய்ய முடியாது அது நஞ்சாகி  எல்லா இலக்கிய பிரக்ஞைகளின் மீதும் அதன் நச்சுவாசம் பட்டாகி விட்டது , எனவே அதன் அதிகாரத்தை தோற்கடிக்க பிறிதோர் சொல்லை காத்திரமான அப்பிராய முன்வைப்பினை தர்க்கிக்கப்பட்ட அறச்சொல்லை , விமர்சனம் என்ற சொல்லின் எதிரில் , அதன் அதிகாரத்தின்  எதிரில் நிறுத்துவது தற்போதைய மொழி இலக்கியச்சூழலில் கடமையாகும்.


-யதார்த்தன் -

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 7:08 AM

..................
மின்மினியால் செய்யப்பட மூக்குத்தி
சொன்னது,

நோயுற்ற பொழுதில்
மீண்டும் மீண்டும்
புதைந்தன வார்த்தைகள்

அழாதவைகள்
எப்போது கண்னீரானது
என் சகி

அழுததை
மீண்டும் உறிஞ்சிக்கொண்டனவுன்
கண்கள்.

இப்போது

துரத்தும் போது
எவ்வளவு தூரம் பறந்து
நான் திரும்பவேண்டும்?


நோய்முடிய
மீண்டும்
நம்மிடையே எப்போதும் போல
தேனீர்கோப்பைகளும்
வெள்ளை இறகுகளும் மிச்சமிருக்கும்
நமக்குத்தெரியும்

பாடல்களில்லாத
யுகமொன்றில்
நாட்டியங்கள் பிறந்ததுண்டோ

சமயத்தில் அகவும்
பூனைகளுக்கும்
தேவதைப்பாடல்கள் பரிச்சமுண்டு

ப்ரியம்
வார்த்தைகளின் என்பு

நல்லவேளை
கடைசியாய் அவை
வார்த்தையாக(மட்டும்)
முடிந்து போயின
தலைநீட்டி எழுந்து பற
பறவையே
கூடிழத்தலே ஞானம். *

-ய-
13.12.2015
7.25pm- 7.37pm

செவ்வாய், 8 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 4:08 AM


அவள் சுதந்திரமாகவும் சிருஷ்டிக்கு மிக நெருக்கமானவளாகவும் இருந்தாள்.

மனமென்பது பிறிதோர் உடற் பாகமாக அவளுக்கு வழங்கப்பட்டது. நெஞ்சுக்குழிக்குள் ஒரு  பந்தைனைப்போல அதனை பொருத்தியிருந்தது சிருஷ்டி.  நீல நிற தசைக்கோளமான அதை கைகளில் எடுக்கவும் தொட்டுணரவும் முடியுமாயிருந்தது. எடுக்கும் போது லேசான இரத்த கசிவு கைகளில் ஒட்டிக்கொள்ளும்  அது ஒன்றுதான் அவளை அசெளகரிய படுத்தும் ஒன்றாக இருந்தது.


படைக்கப்பட்ட ஆரம்பத்தில் , அது அவளுக்கு ஆச்சரியம் தரும் ஒன்றாக இருந்தது , அடிக்கடி எடுத்து அதனை தொட்டுணர்ந்து விளையாடுவாள், உடலில் இருந்து அதனை  அகற்றும் போது ஏதேட்சையாக பட்ட காயம் ஒன்றின் மேற்றோல் செதிலை சடேன இழுத்து அகற்றும் போது ஏற்படும் லேசான குறுகுறுப்பினை உணர்வாள். தினமும் நான்கைந்து முறையாவது அந்த குறுகுறுப்பினை உணரவேண்டும் போல் இருக்கும். மனத்தை அகற்றுவதனையும்  உள்ளிடுவதனையும்  ஒரு போதைபோல் பழகிக்கொண்டது அவளுடல். நீல நிற  நரம்புகள் ஓடும் அதனை மார்பிலிருந்து அகற்ற நினைக்கும் போது அவளுடைய மார்பெங்கும் அடர்த்தியாய் வளர்ந்த நீல நிற இறகுகள் சட்டென விரிந்து மார்ப்பின் நடுவில் உள்ள மனக்கோளம் உள்ள இடத்தை காண்பிக்கும். அவள் குளிக்கும் போதும் நீச்சலடிக்கும் போதும் , மழைபெய்யும் போதும் மார்ப்பு இறகுகள் ஒன்றையொன்று இறுக பின்னிக்கொண்டு  தண்ணீர் உட்செல்லாமல் தடுத்துவிடும். இதே செயன்முறையாக்கத்தினை தான் சற்று அதிகமாக வளர்ந்து அவள் இடைவரை பரவி சுற்றியிருக்கும்  இறகுகளும்கொண்டிருந்தன. தன் யொனியை உணரும் போது அந்த சிறகுகள் விரிந்தகன்றன.ஆனால் மனக்கோளத்தினுடைய சிறகுகளைப்போல் அவை அடிக்கடி வேலைக்கமர்த்தப்படுவதில்லை.


 மார்பிலும் இடையிலும் உள்ள சிறகுகளை  தவிர அவள் உடலில் வேறெங்கும் சிறகுகள் காணப்படவில்லை. முன்னொருநாள் சிருஸ்டி அவளிடம்  பறப்பதற்கு ஆசைகொள்கிறாயா அல்லது மனத்தை புன்னங்கமாய் பெற ஆசை கொள்கிறாயா என்று கேட்ட போது , இரண்டாவதை தெரிவு செய்திருந்தாள். எனவே அவளுக்கு முதுகில் சிறகுகள் முளைக்கவில்லை.

எனினும் மனத்தையுடையவள் சுதந்திரமாக இருந்தாள் , மகிழ்ந்திருந்தாள், பெரிய ஆற்றுப்படுக்கைகளில் நீந்துவதும் , காடெங்கும் உலவித்திரிவதும். பெரிய மயில்களுடன்னும்  கலைகளுடனும்  மைதுனம் செய்துகொள்வதும் , சிருஷ்டியுடன்  உரையாடுவதுமாக அவளுடைய யுகங்கள் கடந்துகொண்டிருந்தன. சிருஷ்டி பலருடைய கதைகளை அவளுக்கு சொல்லிக்கொண்டிருக்கும், பெரும்பாலும் அவை மிக வேடிக்கையாக இருக்கும். ஒரு நாள் சிருஷ்டி சொன்ன கதையொன்று அவளை அந்த காட்டை விட்டு செல்ல தூண்டியது.

அது ஒரு இளவரசியினுடைய கதை , அவள் இப்போது ஒரு தேசத்தின் ராணியாக இருக்கிறாள் , இளவரசியாக பிறந்து சில நாட்களில் அவளை அவள் தந்தை காடொன்றில் தவற விட்டுவிட்டார். அவளை ஒரு ஓநாய் கூட்டம் கைப்பற்றியது , வழமை போல பெண் ஓநாய் ஒன்று அவள் மேல் இரக்கம் கொண்டு தன் மயிர் அடர்ந்த முலைகளால் அவளுக்கு பாலூட்டி வளர்த்தது. நிர்வாணியாக அந்த அடர்காட்டில் ஓநாய் குட்டிகளுடன் அவள் வளர்ந்தாள். யெளவனம் எய்தினாள் , ஒரு நாள் அதே வழமை போல அழகும் வீரமும் பொருந்திய இளவரசன் அவளை கண்டு மையல் கொண்டு அவள் முன் வந்து தன் புரவியில் இருந்து குதித்தான். இளவரசி சட்டென தன் மார்புகளை கைகளால் இறுக  மறைத்துக்கொண்டாள் …

இந்த இடத்தில் தீடிரென கதையினை நிறுத்தச்சொல்லிவிட்டு சிருஷ்டியை அனுப்பிவிட்டு , வேகமாக காட்டைவிட்டு வெளியேறி அந்த இளவரசி ராணியாகி ஆளும் நாட்டிற்கு வந்து சேர்ந்தாள் தன்னுடைய உடலை ஆடைகளை கொண்டு மறைத்து தானும் ஒரு நகரத்து மனுஷி போல மாறிக்கொண்டாள். மனக்கோளத்தை எடுத்து தன் சட்டை பைக்குள் போட்டு கொண்டு ராணியைப்பார்க்க புறப்பட்டாள். மிகுந்த பிரயத்தனங்களுக்கு  பிறகு ராணிமுன் தோன்ற அவளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அத்தானி மண்டபத்தில் ராணி கொலுவமர்ந்திருந்தாள் , அவளுடைய சிம்மாசனத்தின் நேர்மெலே ஒரு இளவரசனின் படம் வரையப்பட்டிருந்தது. அதன் மீது இரண்டு கறுப்பு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்டிருந்தன .அது கதையில் கேட்ட இளவரசனாகதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். ராணி அவளிடம் விடயம் என்னவென்று விசாரித்தாள்,

”ராணி என்னிடம் இரண்டு கேள்விகள் இருக்கின்றன இரண்டில் ஒன்று வெளிப்படையாக உங்களிடம் கேட்க வேண்டும் இன்னொன்றை உங்கள் காதுகளுக்கு மட்டும் அறியும்படி கேட்கவேண்டும்.
ராணி சம்மதித்தாள் ,முதல் கேள்வி
“நாம் நேசிக்கு உறவொன்று நம் குணங்குறிகள் பிடிக்காமல் , நம்மை உடைந்து போகுமளவிற்கு செய்துவிட்டு பிரிந்து போனபிறகு அந்த உறவு வேண்டும் என்று நாம் எதற்காக அடம்பிடிக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா ?”


இவ்வாறு ஒரே மூச்சில் முதல் கேள்வியை கேட்டு முடித்து விட்டு சட்டை பயினுள் கையை விட்டு மனக்கோளத்தை தடவிக்கொடுத்தாள்
ராணி

“அழகிய பெண்ணே  , நாம்  எம்மை விட்டுச்சென்றவரை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தும் அவர் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் , நம்முடைய சுயத்தை ஒருவர் புறக்கணித்தார் என்ற அவப்பெயரை நீக்கிகொள்ளவேயாகும் அங்கே பெரும்பாலும் வேறேதுமிருக்கப்போவதில்லை”


இரண்டாவது கேள்வியை கேட்பதற்கு ராணியின் சிம்மாசனப்படிகளில் ஏறி ராணியின் காதருகில் போய் நின்றாள் மெல்லிய குரலில்

”இளவரசர் புரவியில் வந்து தங்கள்  முன் குதித்த போது நீங்கள் மெய்யின் இதர அங்கங்களை மூடாமல் மார்புகளைமட்டும் சட்டென மறைத்து கொண்டதேன் ?”

ராணி மெல்லிய புன்னகை ஒன்றை வீசினாள், பின் அவளுடைய காதுகளிற்குள் குனிந்து, அந்த பதிலை சொன்னாள்.

பதிலைக்கேட்டதும் மண்டபமே அதிரும்படி அவள் பேய்ச்சிரிப்பொன்றை வெளிப்படுத்தினாள் , சட்டை பைக்குள் கையை விட்டு மனக்கோளத்தை எடுத்து , யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தரையில்  வேகமாக எறிந்தாள் ,அந்த நீல தசைக்கோளம் நீலத்திராவகம் தெறிக்க உடைந்து சிதறியது. அது உடைந்து போகவும் அவளுடைய முதுகுப்பக்கம் இருந்து ஆடையை கிழித்தவாறு இரண்டு பெரிய கரிய இறக்கைகள முழைத்தெழுந்தன.
அடுத்தகணம் சிறகுகள் விரிய சிரிப்பை சற்றும் குறைக்காதவளாய் யன்னலொன்றை உடைத்துக்கொண்டு அவள் எழுந்து பறந்தாள்.

-யதார்த்தன் -


சனி, 5 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 4:33 AM


அனுக்குட்டி என்னிடம் கதை கேட்கும் அழகே அலாதியானது. தன் பிஞ்சுக்கால்களை நெஞ்சிலூன்றி  ஏற்றனவே துளையுள்ளவென் இதயத்துக்கு நேரே ஏறி அமர்ந்துகொள்வாள். இரண்டு வயதுக்கு மீறிய எடை அவளிடமிருக்கும் . நன்றாக சப்பணம் இட்டு அமர்ந்துகொண்டு  முட்டைக்கண்ணை சிமிட்டுவாள். லேசாய் மூச்சடைக்கும் மெல்ல அவள் பாரம் பழகிவிடும். நான் உடலை அவளின் தேகத்தை தாங்குவதற்கு தயார்ப்படுத்தும் போது அவள்

“டேய் கச டொல்லு ”

என்பாள்.எப்போது அதே சுர இசையுடன் அவள் கேட்கும் போது மிகப்பிரியமான ஒரு உணர்வு அவள் மெத்தென அமர்ந்திருக்கும் நெஞ்சுக்குள் பரவிச்செல்வதை உணர்வேன்
அன்றைக்கும் அப்படித்தான் , எங்கோ ஒரு மூலையில்  அனார்கியின் டெடிபியரின் கையில் சாத்தப்பட்டிருந்த என்னுடைய பழைய கவிதைகள் அடங்கிய  பிரவுன் கலர் டயரியை எடுத்து வந்து நெஞ்சிலேறிக்கொண்டாள்.

சிறிது நேரம் அவள் என்னுடன் எதுவும் பேசவில்லை, அந்த டயரியை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டாள். முகர்ந்து பார்த்தாள் , தன் சிவந்த பிஞ்சுச்சொண்டினால் (உதடுகள்) அதன் விளிம்பைக்கடித்தாள். சட்டென்று அந்த டயரியை இறுக்கி அணைத்துக்கொண்டாள். இறுதியாய் யாருடைய ஸ்பரிசத்திற்கு அது பழக்கப்பட்டிருந்ததோ அந்த குணங்குறிகளை , மெல்லுணர்வினை , வாசத்தை , சுவையை , அந்த டயரியில் நானும் உணர்ததுண்டு. என்னை விட அனுகுட்டிக்கு அதன் நெருக்கம் ஸ்பரிசம் என்பன இன்னும் கிளர்ச்சியையூட்டி இருக்க வேண்டும் , அதனை இறுக்கமாக நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு தலையை டயரி விளிம்பில் சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.


சிறிது நேரம் அப்படியே இருந்தாள் . மெல்ல கண்மலர்ந்து டயரியை திறந்தாள்

இத படி என்றாள்

முதல் பக்கம்

“ஓர் இதயம் கருக்கொள்கிறது”
-திரடத்தூய்மன் –

“அதென்னா  பேர் ?
“என்ர முதல் புனை பேர் ”
“எத்தினை மாத்துவ ?”
“ரெண்டுதான்”
“லூசு தானே நீ”
“ம்ம்”
“என்ன எழுதி வச்சிருக்க ”
“கவித”
பக்கத்தை உருட்டினாள்”
“ஏன் கொஞ்ச பேப்பர கிளிச்சு வச்சிருக்க ?”
“கிளிச்சதெல்லாம் அனார்க்கிக்கு முதல் எழுதினது”
“ம்ம்”
அனார்க்கிக்கு எழுதியவற்றின் கீழ் நான் என்னுடைய பெயரை எழுதவில்லை என்னுடைய பெயர் இல்லாத அவளுக்கான கவிதைகளின் கீழ் தன் அழகான கையெழுத்தால் என்னுடைய பெயரை கிறுக்கியிருந்தாள்.
அனு தன் பிஞ்சு விரல்களால் அனார்க்கியின் எழுத்துக்களை தடவியபடி
“வடிவான எழுத்து”
”எது அனாக்கிக்கு எழுதின முதல் கவித ? “

அதை அவளே தன் கையால் எழுதியிருந்தாள்

அந்த கானல் நதியை
கடந்து வா
விரைவாய்
என் ஓடத்தின் இரண்டாம் துடுப்பு உனக்காய்
காத்திருக்கு.
-திரடத்தூய்மன் –


மேலும். பக்கங்களை புரட்டினாள்.  

கவிதைகள்

 கவிதைகள்

கவிதைகள்



கடைசிப்பக்கத்துக்கு முதல் பக்கம்

அவள் வைரமுத்துவின் பாடல் வரிகளை பென்சிலால் எழுதி தன் பெயரை கீழே கிறுக்கி திகதியிட்டிருந்தால், அடிக்கடி அவள் முணுமுணுக்கும் பாடல் என்று அனுவிற்கு சொன்னேன் , அனு சிரித்தாள்.


ஏன் இத அவளிட்ட இருந்து வாங்கின்னி ?

எவ்வளவு கொடுமையான நாளாக அமைந்து விட்டது அது. அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டு இறுதியாய் ஒரு பெரிய வாளை எடுத்து வீசினேன். இன்னும் ஆயிரம் வருஷங்கள் நரகத்தில் உழ அந்த வார்த்தை கொண்டுவந்த பாவமே போதுமாயிருந்தது.
“என்ர கவிதை புத்தகம் உன்னட்ட இருக்கு , அத வச்சிருக்கிற தகுதி உனக்கு கிடையாது குடுத்து விடு”

அனு என்னை பார்த்தாள் , அவளுடைய கண்களுடன் என்னுடைய கண்கள் சந்தித்தன, அவளுடைய கண்களை பார்க்க கூசியது, தலைக்குளிருந்து பெருங்கூச்சலொன்று எழுந்தது கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்.
திறந்த போது  ,
அனு அப்போது கடைசி பக்கத்தை சுட்டிக்காட்டினாள், அனார்க்கி ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியிருந்தாள்.


death has got something to be said for it . there is no need to get out of bed for it. wherever you may be
they bring it to you free.


நான் அதை சத்தமாக படித்து முடிக்கவும் , அனு அந்த டயரியை என்னிடமிருந்து  விடுக்கென பிடுங்கிக்கொண்டு வேகமாய் என் நெஞ்சிலிருந்து இறங்கி அருகில் இருந்த கட்டிலில் ஏறி அந்த டயரியை தன் நெஞ்சோடு அணைத்துகொண்டு , கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.



யதார்த்தன்

2015.may.03

திங்கள், 30 நவம்பர், 2015

Posted by விகாரன் On 5:54 AM



The silence depressed ME . its wasn’t the silence of silence.
                              it was my OWN silence.
                                                                                                                                                                                         -  Sylvia plath

01.

ஒரு கனவு. கொஞ்சம் ஞாபகமின்மை காரணமாக புனையப்பட்டதுமாகும். ஒரு பெண் தொடக்கத்தில் ஆடை அணிந்திருந்தாள் ,கறுப்பு நிறமென்று நினைக்கின்றேன் , முதுகில் முள்ளந்தண்டின் இரு புறமும்  இறக்கைகள் இருந்ததற்கான வடுக்களை கண்டேன்.ஒரு வேளை அவை விபத்தொன்றின் காயமாக இருப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு.
ஒரு பெரிய அளுயர மயில் அவளுடன் இருந்தது , அவளுடன் நடந்தது , உண்டது , இராத்திரியில் அதனை அவள் அணைத்த வாறே உறங்கத்தொடங்கினாள். மெல்ல மெல்ல  அவளின் தோலுடன் மயில் மிக நெருக்கமானது . பச்சை , நீலம் , கறுப்பு நிறங்கள் அவளின் தோலில் படியத்தொடங்கின , குறிப்பாக அவளுடயை மார்புகளில் அதிகமாக மயிலின் கழுத்து இழைவதனால் அதன் கழுத்தில் இருந்து மெல்ல உதிரும் ரோமச்செதில்கள் அவளின் தோலின் நுண் துழைகளுக்குள்  உக்கி உக்கி  நுழைந்து படியத்தொடங்கின , எப்போதும் கோடையில் வியர்க்கும் , குளிரில் நடுங்கும் அவளுடைய தேகம் அதன் பின் குளிர் சூடு இரண்டையும் பிரித்தறிய முடியாதவொன்றாய் மாறியது.
இவ்வாறிருக்க தூக்கம் கலைந்தது.


02.

உன்னை மறக்கும் தறுவாயில் இருக்கிறேன்.நிறைய பெண்களுடன் உரையாடுகின்றேன் , பார்க்கின்றேன், நன்றாகப்பார்க்கின்றேன். உள்ளே ஒரு பக்கத்தில் அவர்களையும் இன்னொரு பக்கத்தில் உன்னையும் நிறுத்திவிட்டு  ஒப்பிட்டு  பார்ப்பது தெரிகிறது. சற்று பருமனான சிவப்பு ராணி வண்ணத்துப்பூச்சியை பிடித்து , அதனை உள்ளங்கையில் வைத்து பர பரவெனக்கசக்கி  சிதறும் அதன் தசை கூழை நுகர்ந்து பார்க்கும் உணர்வினை போல அப்போது அது.

03.

இப்போது என்னையும் உன்னையும் நினைக்க எரிச்சலாக உள்ளது. அடிவயிற்றிலிருந்து நெஞ்சுவரை பரவும் உணர்சி அது. இதை எழுதும் போது பிடரியை வேகமாக சொறிந்து கொண்டே வெப்பம் மிக்க பெருமூச்சொன்றை விடுகின்றேன்.

04.

உன்னுடைய பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்து பார்க்கின்றேன். எவ்வளவு மோசமாகிவிட்டது இந்தக்கணம். வியாதி பிடித்த  கம்பிகளை கொண்ட சுவர்கடிகாரம்  அடிக்கடி பார்வை நிலைத்து நிற்கவும் சேர்த்து விலை கொடுத்து வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.


05.

மீண்டும் எரிச்சலாக இருக்கிறது, இதை எழுத வேண்டும் என்று நானே என்னை கட்டாயப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கின்றேன். வெளியே சிணுங்கும் மழை , குளிரில் விறைத்து அறைக்குள் நுழையும் கோழியை  புத்தகம் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்து துரத்தி விட்டு தொடர்ந்தும் எழுதுகின்றேன்.
இந்த மழை
 இரண்டு மணிநேரங்களுக்கு முன் பஸ் யன்னலுக்கு வெளியே அழகாகதான் இருந்தது. ஒரு கவிதைக்குரிய அழகு அதனிடமிருந்தது. அரைப்பசியில் , தனிமையில் , உன் பெயரில் இப்போது அது எவ்வளவு எரிச்சல் மிக்கதாய் பொழிகிறது.


06. 

இதை நீ படிக்கப்போவதில்லை , அவசியமும் இல்லை , உனக்கு என் தொல்லை பழகிவிட்டது , பொருட்டற்ற ஓர் சதை இருப்பு நான் ., பார்தாயா இப்படித்தான்  நான் இருக்கிறேன் , எப்போது என்னை நியாயப்படுத்த எழுதுகிறேன் , என்னை தூயவனாக , தன்னிகரில்லாதவனாக நிறுவ நான் எழுதுகிறேன் , அதன் அரசியல் அதுதான் , என்னிடம் இப்போது  , காதலில்லை , உன்மேல் பிரியமில்லை 

 ஒருவேளை இந்த எரிச்சல் மிக்க கணத்தை நீ நம்பலாம் , அது தூய்மையானது , உன்மேல் ப்ரியமுண்டென்பதையோ  , வார்த்தைகளில் உள்ள உண்மை மற்றும் உண்மைகள் பற்றியோ நீ சிந்திக்கத் தேவையில்லை ,

ஹாஹா

நல்ல வேளை நீ இதை படிக்கப் போவதில்லை.

சொல்லும் சொல்லிய அனைத்தும் பொய்யாகும் , இங்கே எதுமில்லை ஒருவேளையுன் கருணையுள்ளம் என் பொருட்டு நேசிக்க இந்த எரிச்சல் மிக்க பொழுது உனக்கு உதவும்.

எனக்கு

எதேனும் ஒருத்தி வெள்ளிக்கிழமைகளில் எதிர்ப்படுகையில் வரும் பாண்டீன் ஷம்புவின் மணம்  , உன் உச்சந்தலையின் மிகப்பிரியம் மிக்க நெடியை எனக்கு ஞாகப்படுத்தும் .

எரிச்சலற்ற பிரியம் மிக்க கனவது.


-யதார்த்தன் -

திங்கள், 23 நவம்பர், 2015

Posted by விகாரன் On 3:59 AM





ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான்.
அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது.
”ம்ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக மென்மையானதுமான பிடரி முடி , சதைப்பிடிப்பான பளபக்கும் அதன் தேகம் , அவள் அடிக்கடி பீழை எடுத்தும் முத்தமிட்டும் விளையாடும் அதனுடைய தீர்க்கமான கண்கள்.  , நிலத்தில் உதைக்கும் போது கடும் தரையையும் தோண்டியெறியும் கால்களும் அதன் குளம்புகளும் , அப்பிடியே “ம்” ஐ பார்த்த படியே  இருக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
”ம்” ஐ அவள் மேற்கு பகுதியில் உள்ள புல்வெளியிலிருந்து எடுத்து வந்தாள். “ம்” பிறந்து  சில நொடிகளிலேயே அதனுடைய தாய் இறந்து விட்டதாக சொன்னாள். தன் குழந்தையை நக்கி சுத்தம் செய்யகூட திராணியற்று “ம்”மின் தாய் இறந்து போனது , கர்பத்தின் , தசைக்கூழ் ஈரத்துடன் அதனை தூக்கி வந்தாள் , தன் நாக்கினாலேயே ம் மின் உடலை தூய்மையாக்கினாள் , அன்றிலிருந்து அவர்களின் பிரியம் மிக்க செல்ல பிராணிகளில் ம் ஒன்றானது. ம் வந்த பிறகு  அவள் மானையும் கரடிகளையும்  டோ டோ பறவைகளையும் கொஞ்சுவதை  குறைத்து கொண்டாள் , அவளுக்கு ஏனோ ம் மை அதிகம் பிடித்து போனது , அவனுக்கும் தான்.

இவ்வாறு நினைத்தவாறு

அதனருகே சென்று  தேகத்தை வருடிக்கொடுக்கத்தொடங்கினான் “ம்” க்கு கழுத்து பக்கத்தில் தடவுவது பிடிக்கும் என்று அவள் ஒரு நாள் அவனிடம் சொல்லிருக்கிறாள் , அன்றிலிருந்து அதன் கழுத்தில் தடவிக்கொடுக்க தொடங்கினான் ஆதாம். கழுத்தை தடவிக்கொடுக்கும் போது “ம்” தனது தலையை ஆதாமின் இறுகிய தோள்கள் மீது சாய்த்துவிட்டு மெல்ல கனைத்தவாறே கண்களை மூடிக்கொள்ளும். தடவும் போது அதன் உடலில் பரவும்  சிலிர்ப்பை ஆதாம் கொஞ்சநாளில் கண்டு பிடித்திருந்தான். அன்றும் அப்படித்தான் அதன் கழுத்துபக்கமாய் தடவும் போது ஏதோ ஒன்று  அவன் கைகளில் உரசியது , பரிசோதித்தான்  அது ஒரு நகக்காயம் , கழுதைப்புலியினுடையதாய் இருக்கும் , அந்த பகுதியில் கழுதைப்புலிகளை அவன் அடிக்கடி கண்டிருக்கிறான். எங்காவது குன்றுகளில் இருந்து “ம்” மின் மீது இருந்து கழுதைபுலி பாய்ந்திருக்க வேண்டும்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் எல்லாம் குழம்பிப்போனது ,  தேவனின் திருவாயிலிருந்து அக்கினியாய் வந்த சொற்கள் மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவில் வந்தன , புனித தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் முதல் தேவன் சொன்ன வார்த்தைகளவை, அதில் ஒன்று மட்டும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்தது
“மரணம்”
அப்போது  மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் , விருட்ச சாதிகளுக்கு மட்டும் இருந்த மரணம் , மனுஷ மனுஷிக்கும் வழங்கப்பட்டது.  எல்லாம் இடம் மாறின , மரணத்தை போலவே புதிய பல சொற்கள் பிறந்தன.

பசி
தாகம்
வேட்டை
பகை
முத்தம்
கண்ணீர்
சோகம்
முத்தம்
காதல்

இப்படியாக சொற்கள் பெருகிக்கொண்டே சென்றன ,
அதுவரை பசி என்பது  மனுஷ மனுசிக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்த்து  , பறவை மிருகங்களுக்கு  பசி கொடுக்க பட்டிருக்கவில்லை , மாறாக அவைகளுக்கு  புணரவும் இனம் பெருகவும் தெரிந்திருந்தது. ஆனால் அன்றைக்கு பிறகு எல்லாம்  குலைந்து போனது , எல்லோருக்கும் பசித்தது எல்லோருக்கும் தாகமெடுத்தது , எல்லோரும் புணர்ந்தனர் . விலங்குகள்தாவரங்களை புசிக்க பழகிக்கொண்டன ,வேறு சில  வேட்டையாடி உண்ண தொடங்கின , எப்படியோ அவை சுனை நீரைப்போல இரத்தமும் சுவையானது என்று அறிந்து கொண்டன , ஒரு வேளை அந்த பாம்பு தான்  அவற்றிகு அதனை காட்டியிருக்க வேண்டும் என்று ஆதாம் நினைத்தான்.

இவை எல்லாம் மீண்டும் மீண்டும் அவனுக்கு வேதனையை தந்தன , ஆதாம் குற்ற உணர்வுடன் இருந்தான் , அதைவிட அவளின் பிரிவு அவனை வாட்டி எடுத்தது , நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது அவள் அவனுடன் பேசி. இருவரையும் இணைக்கும் ஒரே விடயமாக “ம் ” மட்டுமேயிருந்த்து. பகல் வேளைகளில் ம் ஆதாமுடன் இருக்கும் , ஆதாம் அதன் மீதேறி வலம் வருவான் , உணவு தேடி உண்டது போக  மழைக்காலத்துக்காக சேமித்தல் , பயிரிடல் போன்றவற்றை அவன் அறிந்திருந்தான் , அவள் கடற்கரையில் குடியிருந்தாள் , இரவில் ம் அவளுடன் தங்கும் , அவள் உணவு தேடுவதில்லை  அவள்  பறவைகளுடன் நெருக்கமானவள் , அவை அவளுக்க்காக அப்பிள் தவி ர அனைத்து பழங்களையும் தானியங்களையும் எடுத்துவந்தன.
அவள் நாள் முழுவதும் கடற்கரையில் உலவுவாள்  இலைகளை ஆய்ந்து பதனிட்டு  ஆடைகள் தைப்பாள் , இரவில் மின் மினிகளை அழைத்து அவள் குகைவாசலில் மொய்கச்செய்வாள் , அதன் வெளிச்சத்தில் ம் மின் மீது ஏறி கடல்கரையெங்கும் சவாரி செய்வாள் , இப்படியாக அவள் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தாள் . இவற்றை யெல்லாம் ஆதாம் ஏதாவது ஒரு மரத்தில் மறைந்திருந்து பார்ப்பான் . அவள் அருகில் செல்ல அவன் அச்சமுற்றிருந்தான் ,
அன்றைய சம்பவத்திற்கு பிறகு  அவள் அவனிடம் பேசவில்லை , ஆனால் அவனுக்கு தெரியும் , ஆதாமின் அந்த வார்த்தைகள் அவள் மனதில் இன்னும் இரத்தக்கசிவை ஏற்படுத்திய படிதான் இருக்கும் என்று அவன் அறிவான்.

”தேவ  என்னுடன் இருக்கும் படி நீர் அறிவித்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்கு கொடுத்தாள் நான் புசித்தேன் ”
(ஆதியாகமம் – 3.13 )
தேவனிடம்  நடுங்கிய படி அவன் அந்த வார்த்தைகளை சொன்னது அவள் கதறி அழுத்தொடங்கினாள் , தேவன் சபித்து விட்டு போன பிறகும் அவள் அழுகை நிற்கவில்லை , ஆதி மனுஷியின் முதல் அழுகை ஆதாமை குறுகிப்போகச்செய்தது. தேவன் அவள் மேல் இட்ட சாபம் எதுவும் அவளை வஞ்சிக்கவேயில்லை , வஞ்சித்தவையெல்லாம் ஆதாமின் வார்த்தைகள் மட்டுமே.

ஏடனுக்கு வெளியே அந்த கடற்கரையில் ” ம் ” மை கட்டியணைத்தவாறு பலமாதங்கள் அழுதபடியிருந்தாள் , ஆதாம் அவளை நெருங்கும் போதெல்லாம் அவளுடைய வீறுடுகை அதிகமானது , ஒரு நாள் வீறுடுகையை பொருட்படுத்தாமல் அவளை தேற்ற அருகில் சென்றான். அவன் அருகில் வருவதை உணந்தவள் அருகில் இருந்த பாறையில் தன் தலையை முழுவேகத்தில் மோதினாள் . நெற்றிபிளந்து கொள்ளா சூடான குருதி  ஆதாம் நெஞ்சின் மீது தெறித்தது. இரண்டாம் முறை  அவள் தன் தலையை மோத போக சடாரென மாறைக்கும் அவளுக்கும் இடையே பாய்ந்தது “ம்”  . அதனுடைய வயிற்லில் அவளுடைய  தலை மோதியது , செங்குருதி அதன் வெள்ளை வயிற்றினை நனைத்தது , ஆதாம் நடுங்கி விட்டான் , பைத்தியம் பிடித்தவனைப்போல ஓடி வந்து விட்டான் , அதன் பிறகு அவன் அவள் கண்ணில் படுவதேயில்லை. மறைந்திருந்து பார்ப்பதோடு சரி.
ஆதாம் ம் மிடம் ஒவ்வொரு இராத்திரியும் சொல்லி அழுவான் , குரலற்ற அது அவனை மென்மையாய் தன் தாடையை வைத்து தடவிக்கொடுக்கும் , அவளிடம் போய் சொல் என்று அவன் அழாத இரவுகள் குறைவாகவே இருந்தன, கடவுளுக்கு அனுப்பியதை போல பல ஆயிரம் கடிதங்களை  ம் இன் கழுத்தில் கட்டி ,அனுப்பிவிட்டான் , அவள் கடிதத்தை படிப்பதேயில்லை , பெரும் இலைகளில் எழுதப்பட்ட கடிதச்சருகுகள் அவளுடைய  குகையை சுற்றி அடைந்து கிடப்பதை அவன் மறைந்திருந்து பார்த்திருக்கிறான்.

அன்றும் அவளுக்காக ஒரு கடிதத்தை  எழுதிக்கொண்டிருந்தான் , அப்போது காட்டின் நடுவே   ம் மின் அவலக்குரல் ஒன்று எழுந்தது , மிகப்பெரிதாக அந்த அவலக்குரல் கேட்டது அவன் பதறிக்கொண்டு ஓடினான் , காட்டின் நடுவே உள்ள புல்வெளியில் இருந்துதான் ம் இன் அவலக்குரல் எழுந்திருக்க வேண்டும் , அவன் புல்வெளிக்கு வந்து சேரும் போது அவளும் ஓடி வந்திருந்தாள் . ம் தரையில் கிடந்து பெரிதாக  வீறிட்டு கனைத்தபடி கிடந்தது. அதன் யொனி பகுதியில்  சிறிய தலையொன்று வெளிப்பட்டு கொண்டிருந்தது. அப்போதுதான் ஆதாம் இத்தனை நாள் ம் வயிற்றில் ஒரு சிசுவை கொண்டிருந்ததை அறிந்தான். அவன் செய்வது அறியாது திகைத்து நிற்க அவள் பர பரவென காரியத்தில் இறங்கினாள் மெல்ல ம் மின் யொனிப்  பகுதியில் வெளிப்படும் அதன் சிசுவை உருவி எடுக்கத்தொடங்கினாள் , ம் பெரிதாக வீறிட்டது . கால்களை உதைத்து கதறியது  தலையை நிலத்தில் அடித்துக்கொள்ள தொடங்கியது , அவன் தலையை ஆதரவாக பிடித்து அதன் கழுத்தில் தடவிக்கொடுக்க தொடன்ங்கினான் , அத்தனை வேதனையிலும்  ஒரு கணம் அதன் உடலில் தடவலின் சிலிர்ப்பு ஊடுருவதனை இருவரும் உணார்ந்தனர், அவள் ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்தாள் , அவன்கண்களும் அவள் பார்வையை சந்தித்தது. அப்போது ம் பெரிதாக வீறிட்டு தன் சிசுவை வெளியேற்றியது ,
அதன் சிசுவை அவள் கைகளில் துக்கிக்கொள்ள  அதன் முகம் மெல்ல மெல்ல சோர்ந்து போனது கண்கள் சொருகத்தொடங்கின , ஆதாம் பதறிப்போய் அதன் தலையைல் தடவி  ம் ம்ம் ம்ம் என்று அரட்டி பார்த்தான். ம் பூரணாமாய் இறந்திருந்தது.



 அவள் அருகில் வந்து ம் இன் தலையை தன் மடிக்கு மாற்றினாள் , ம் இன் சிசுவை அவன் வாங்கிக்கொண்டான் , அவள் அழத்தொடங்கினாள் , மெல்ல மெல்ல அவள் அழுகை தொடங்கியது . அவன் ம்மின் சிசுவின் மீதிருந்த ஈரத்தை நக்க தொடங்கினான் . அவள் அவனை அந்த சிசுவுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் , அந்த சிசு அவனுடைய கைகளில் இருந்து நழுவி தன் தாயின் மடியை நோக்கி தவழத்தொடங்கியது அவள் மீண்டும் அழத்தொடங்கினாள் , இம்முறை மிகப்பெரிதாக இறந்து போன ம் மின் மடியை நோக்கி நகரும் அதன் சிசுவை பார்த்து அவள் அழுதுகொண்டிருந்தாள் அவன் மீது இன்னும் நெருக்கமாய் சாய்ந்து கொண்டாள் ஒரு நூறு வருஷத்தின் பின்னரான அந்த அணைப்பை இருவரின் உடல் சூடும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. 

,அவன் இன்னும் அணைப்பை அதிகமாக்கினான் , 
அவள் ம் இறந்து கிடக்கும் ம் மையும் அதன் மடியை மோதும் சிசுவையும் வெறித்துப்பார்த்தபடியிருந்தாள் . வயிற்றின் அடியிலும் விக்கி அழும் தொண்டைக்குள்ளும் ஏதோ கனத்து கிடந்ததை உணர்ந்தாள் , கண்ணீரை அவள் கண்கள் இன்னும் இன்னும் உகுந்தன , கண்ணீரில் பார்வை லேசாய் மங்க ம் மின் பெரிய வெள்ளை உடல் அவள் கண்களுக்குள் மறைந்தது , இமைகள் இழுத்து சாத்தி கண்ணீரை பிழிந்து விட்டன,
மெல்ல

தேவனுடைய மற்றைய இறுதி வார்த்தைகள்  அவளின் காதுக்குள் ஒலிப்பதை உணர்ந்தாள்

“நீ கர்ப்பவதியாய் இருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன் , வேதனையோடே பிள்ளை பெறுவாய் , உன் ஆசை உன் புருஷனை பற்றியிருக்கும் , அவன் உன்னை ஆண்டுகொள்வான்”
-ஆதியாகமம் -3.16

 -யதார்த்தன் -

ஞாயிறு, 22 நவம்பர், 2015

Posted by விகாரன் On 9:10 PM

சமீப நாட்களாக விமர்சனம் என்ற சொல்லின் மீது அதன் பிரயோகத்தில் 

இருக்கும் அதிகார தொரணை பற்றியும் உடன்பாடற்ற தன்மை என்னிடம் 

இருக்கிறது. தன்னுடைய முழுமையை  ஒட்டுமொத்தமாக்கி  ஒரு பிரதியை 

ஆக்குபவனின்மீது அது பிழை இது சரி என்று வாளெடுத்து வெட்டுவது எந்தளவு

 சரியான செயல் என்பது என்னுடைய கேள்வி.

-சேனனின் லண்டன்காரருக்கு எழுதிய அபிப்பிராயத்தில் -





நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும்  பீரங்கிகளும்  கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும்  போர்கள் மாற்றியமைத்தன . ஈழம் அதற்கு விதி விலக்கல்ல.
ஈழம் தோற்ற தரப்பிற்கும் வென்ற தரப்புக்கும் இடையே முப்பது வருடங்களாக மாற்றப்படாத அதே முகங்களுடன்  இன்னும் பொலிவிழந்து கிடக்கின்றது.  கொள்ளைகள் கற்பிதங்கள் எல்லாம் மேற்புல் மேயும் நம்பிக்கையீனம் கொண்ட  மிருகங்களாகவே நிற்கின்றன. போராடியவர்களில்  ஒரு தரப்பு உடல் உளம் இரண்டும்  விதம் விதமாய் சிதைக்கப்பட்டு போர் மிருகத்தின் பல்லிடுக்குகளில் இருந்து நழுவி வீழ்ந்து கிடக்கின்றார்கள். யாரும் கடந்த காலத்தை ஞாபப்படுத்த தயாராக இல்லை , மறக்கவும் தான்.
தோற்று போனவர்களின் பிணங்களை வாசனை திரவியமிட்டு அரசியல் நடக்கின்றது . பிணங்களின் உள்ளே  தேசத்தின்  குற்றங்களும்  காழ்புகளும்   , தர்மமும் , அதர்மமும் , அறமும்  , கொண்டாட்டமும்  சீழ் பூசிக்கிடக்கின்றன.  விட்ட பிழைகளையும்  தீர்வுகளையும் உயிருள்ள வெற்று மூளைகளுள் தேடுகின்றது மனிதம் . இன்னும் அவை கடந்த காலத்தின் இடைவெளியில் நசுங்கி கிடப்பதை ஒரு சிலரே உணர்கின்றனர்.
போருக்கு பிந்திய இலக்கியங்கள் இன்று மெல்ல மெல்ல நம் பிணங்களை பிரேத பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆறிப்போன வடுக்களுக்கு பின்னால்  இன்னும் கட்டிபோய் கிடக்கும் சீழ்குப்பிகளை மெல்லம்மெல்ல உடைத்து பேனாக்கள் எழுத தொடங்குகின்றன. இவ்விடத்தில் தான் சயந்தனின் ஆறாவடுவும் நிற்கின்றது.
விடுதலை போராட்டத்தின் நேரடி சாட்சிகளில் பலதும் ஊமையாகி விட்டன. ஏனையவை தமக்கென தரப்புகளை தெரிவுசெய்து கொண்டிருக்கின்றன. போர்கால மற்றும் போருக்கு பிந்திய இலக்கியங்களில் பெரும்பாலானவை தரப்புகளை  உன்னதமாக்கும் நுண்ணரசியலையே பேசுகின்றன, தனிமனித அறவுணர்வும் நேர்மையும் சோரம் போன இலக்கியங்களை சகட்டு மேனிக்கு கொண்டாடி தள்ளுகின்றது நம் சமூகம். ஆனால் அடிப்படை  மனிதத்துவம் வாய்க்கப்பட்ட படைப்பாளிகள்  மேற் சொன்ன மாசுக்களை நீக்கி விட்டு மேலெழுகின்றனர். சயந்தனை நான் இவ்வகையாறாக்குள் நிறுத்துகின்றேன்

சயந்தன்

ஆறாவடு பற்றி  கதைக்க முதல் அண்மையில் வாசித்த இரண்டு போருக்கு பின்னரான இலக்கியங்களை நான் இங்கு குறிப்பிட வேண்டும் ஒன்று  தமிழ்கவி யின் “ஊழிக்காலம் ” இன்னொன்று சாத்திரியின் ஆயுத எழுத்து . என்னை பொறுத்த வரை அடிப்படை மனித அறம் , நல்ல இலக்கிய பரிச்சயமற்ற நபர்களால் எழுதப்பட்டவை இவை இரண்டும் . இரண்டும் செய்வது மேலே சொன்ன பிண அரசியலை தான். தமிழ்கவியின் குழப்பம் மிக்க தரப்பு தொடர்பான நிலையும் , சாத்திரியின் வீரசாகச மனநிலையும் மட்டும் எஞ்சும் படைப்புக்கள் இவ்விரண்டும். ஒரு வேளை இனிவரும் காலங்களில் சாத்திரியும் , தமிழ்கவியும் இதனை கலை நிலைப்பாட்டுடன் வேறுவகையில் பிரதியாக்கம் செய்ய முற்படலாம்.




















                  இதை நான் இங்கே சுட்டிகாட்ட காரணம்  ஊழிக்காலமும் , ஆயுத எழுத்தும்  சயந்தனின் ஆறாவடுவிற்கு பிற்பட்டவை. அண்மையில் சயந்தனை சந்தித்த போது
“நாவல் எழுதி  மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது  அதன் கருத்தியல் சார் நிலைப்பாடுகளில் நான் இன்னும் மாற்றமடைந்து விட்டேன் ” 

என்றார். நாவலை வாசித்து முடித்ததும் எனக்கும் அவர் சொன்னது சரி என்றே பட்டது.

நான் ஆறாவடு நாவலை இரண்டு நிலைப்பாடுகளில் வைத்து பார்க்க முற்படுகின்றேன்.


01. நாவலின்  எடுத்துரைப்பு முறை
02. நாவலின் நுண்ணரசியல்

01 

நாவலின் எடுத்துரைப்பு முறை சமீபத்திய ஈழத்து நாவல் வளர்ச்சியில்  முன் நிற்கின்றது என்று சொல்லலாம் .ஆனால் கதை சொல்லியின் அமைப்பு சார் நிலைபாட்டில் இன்னு  நுணுக்கம் தேவைப்படுகின்றது. பெயர்கள் மூலம் முடிச்சுக்களை அவிழ்த்து செல்ல முற்படுகின்றார் சயந்தன்  , ஷோபாசக்தியின் கதை சொல்லும் பாணியை இடைக்கிட தொட முற்படுகின்றார். லீனியர் வகை எழுத்திற்கும் நொன் லீனியர் வகை எழுத்திற்கும் இடையில் நகர்கின்றது நாவல் . யாழ்ப்பாண மக்களின் பிரத்தியேக  காலப்பின்னணியில் அமைந்த மொழிநடையை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார். போராளிகளுக்கும் –மக்களுக்கும்-காலத்துக்கும்  இடைவெளி கொடுக்கும் இடங்களில் சயந்தனின் சொல்லாட்சிகள் நின்று வேலைசெய்கின்றன. நான் படித்த அளவில் ஷோபாவிற்கு பிறகு சயந்தனிற்கு யாழ்பாண மொழி இயல்பாய் வருகின்றது.

கதை சொல்லும் போது இடையறும் இடங்களில்  அங்காங்கே சில இடங்களில் நொன்லீனியர் தன்மை குழப்பங்களை ஏற்படுத்துகின்றது ,சாதாரண வாசகன் அவ்விடங்களில் புத்தகத்தை பிறகு படிக்கலாம் என்று மூடிவைத்து விட்டு போகக்கூடும்.


02

 அடுத்து நாவலில் பேசு பொருளில் நுண்ணரசியலை அவதானிக்க வேண்டும்  தமிழ்கவியின் சந்தர்ப்பவாத புலி எதிர்ப்பு குழப்பமோ , சாத்திரியின் பழைய புலி சாகசமோ இங்கே பேசப்படாதது  இந்நாவல் எனக்கு தந்த மிகப்பெரும் மனத்திருப்தி.

சயந்தன்  தரப்பொன்றில் நிற்பதை விரும்பவில்லை கடந்த காலத்தை  மனிதத்துவத்தின் மீது நின்று பார்கின்றார் . தவறுதலாக குற்றம்  செய்து விட்ட ஒரு குழந்தையின் வீறுடுகை நாவலெங்கும் இடைக்கிட எழுகின்றது . சம்பவங்களை சொல்லி முடிக்கும் போதெல்லாம் சொல்லிய சம்பவங்களில்  மேலெழும் அதர்மங்களுக்கும் , குற்றங்களுக்கும்  மேலே தன் குற்ற உணர்வை ஊற்றி  அவற்றை மூடிவிடப்பார்க்கிறார்.சயந்தனின் கதாநாயகன் மீது  காலம் திணித்ததையும் சரி  அவனே எடுத்து கொண்டவையையும் சரி  ஒரே  தளத்தில் நிறுத்துவது நெருடுகின்றது.

முன்னுரையில்
“பதுங்கு குழியற்றவாழ்வினை பாரதம் தந்துவிடுமென  அவர்கள் எதிர் பார்த்திருந்தார்கள்  முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன ,சனங்களின் முகங்களில் போர் அமிலமாய் தெறித்தது  ”
ஆனால் இங்கே மக்களின் கருத்து நிலை குழப்பமான ஒன்றாகவே நிலைகின்றது. தலைமைகளும் காலமும் சிதைத்த போராளி ஒருவன் ஆற்றாமையின் முடிவில் குற்ற உணர்வின் மூலமாக ஞானமடைய துடிக்கிறான். அவனுடைய முடிவே அவனுடைய ஞானம் என்கின்றார் ஆசிரியர்.

கடைசி அத்தியாயம் அமைப்பு ரீதில் நன்றாக இருந்தது. அதேபோல் காலபெருவெளியில் கரைந்து போகும்  ஒட்டுமொத்தத்தின் வடிவமாய் அதனை செய்திருக்கிறார் சயந்தன் . போர்காலம் பற்றிஎழுதப்படும் அத்தனை நாவலுக்கும் அந்த அத்தியாயத்தின் கருத்து நிலையை பொருத்தி விடலாம் .
சயந்தனின் ஆறாவடு என்பது புறக்காயம் மட்டும் ஆறிய, அடிக்கடி தோண்டி தோண்டி குருதி  ஒழுகும்  மனித குற்ற உணர்வினதும் தீர்வற்ற முடிவிலியாகிவிட்டவாழ்வினதும் கூக்குரலின் பிரதியாக்கம்.

-யதார்த்தன் –


ஞாயிறு, 15 நவம்பர், 2015

Posted by விகாரன் On 6:17 AM

அசுரவிதை 


அவன் மனசு எப்பிடி வலிச்சிருக்கும்
நான் அப்பிடி சொல்லி இருக்க கூடாதோ ?
வேற வழி இல்லையே.
அவனுக்கு கொடுத்த தண்டனை கொஞ்சம் பெரிது தானோ
பொறுமை காத்திருக்க வேண்டும்.
மனசு அலைபாய்ந்தது .எதோ ஒரு ஓரத்தில் குற்ற உணர்வும் யதார்தமும் கட்டிப்புரண்டு சண்டை போட்டன. கண்டிப்பாய் அவனை வெறுப்பது மட்டும் சாத்திய படுவதாய் இல்லை.


அவன் முகம் மனதில் எழுந்தது ,சிரித்தான். பேசினான் ...வழமைபோல கவிதையாய். தான் என்ன எதிர்பார்தாளோ அவை எல்லாம் பேசினான் . குரலில் ஆண் என்னும் அகங்காரம் இல்லை அடிமை உணர்வும் இல்லை. சில சமயம் சிந்திப்பாள் எப்படி முடிகிறது இவனால் ஒரு பெண்பிள்ளையை அதுவும் 2 வயது அதிகமான பெண்பிள்ளையை கனகச்ச்சித மாய் புரிந்து கொண்டு பேச.
பாராட்டுவான் .


“நல்லா இருக்குடி இந்த உடுப்பு...”
அதனூடே நகைச்சுவைப்பான்
‘’கடைக்காரன் பாக்கதப்போ எடுதிட்டியா ...?’’
விவாதிப்பான்
”இல்லை அப்படிச்சொல்லாதே ஆண்களும் மோசமாவர்கள் தான்......நீ பெண்ணா இருந்து உன் வர்க்கத்தை பிழையாய் கதைக்காதே”
நலம் விசாரிப்பான்
”பனடோல்போட்டியா ? இண்டைக்கு கிளாஸ் போகாதே நான் நோட்ஸ் வாங்கிதாறன்”
கவைதையால் கதைப்பான்
கவிதைஒண்டு சொல்லேண்டா
“கம்பன் மகளே கவிதை கவிதை கேக்கிறாள் நான் பாக்ய வான் தான் ”
என்பான்.
இப்படி ஏராளமாய். நூலகசந்திப்பில் அறிமுகமானது முதல் அவன் நல்ல தோழனாக, இருந்தான் இன்றும் அப்படித்தான் என நினைக்கிறேன்.
ஆயினும் காலத்திற்கு பொறுக்கவில்லை அவனுடனான என் பழக்கம்.அவன் மனதில் ஏன் விதைத்தது அந்த அசுரச்விதையை. நெஞ்சில் இன்னும் இருகிறது நேற்றைய உரையாடல் அட்சரம் பிரக்காமல்.
“ஏய் காதல் .இத பத்தி என்ன நினைக்கிறாய் ?
ஏண்டா கேக்கிறாய் ?
சும்மா தாண்டி கேட்டேன் .சொல்லு யாரயாச்சும் லவ் பண்ணி இருக்கியா ?
என்ன நக்கலா ? அப்பிடி ஒண்டும் இல்லை
சும்மா நடிக்காதே !! ஒருத்தனுமா உன் பின்னால சுத்தல ?
இல்லை !
ஐ....எனக்கு தெரியாதா !! சுமாராக இருந்தாலே சுத்துவானுக !! நீ சூப்பர் பிக.....!!!!
சட்டேன நிறுத்தி கொண்டு நாக்கை கடித்து கொண்டு முறுவலித்தான்.
என்னடா !! பேச்சு ஒரு மாதிரி இருக்கு !! (எனக்கு பிடித்திருந்தது என்னை சூப்பர் வகைக்குள் அடக்கியது ஆனாலும் காட்டி கொள்ளவில்லை)
சாரிப்பா !!அத விடு யாருமா உன்கிட்ட புரப்போஸ் பண்ணினதில்லை ?
இல்லைடா!!!
போ நீ பொய் சொல்லுற !! இனி உன் கூட என்ன பேச்சு நான் உன் கிட்ட உண்மையாதானே இருக்கேன்..இன்னிக்கு எத்தின பொண்ண சைட் அடிச்சன்னு கூட சொல்லுறன் ஆனா நீ போய்யா பேசுற பொய்காரி .போ கோவம் !!
எனக்கு தெரியும் அவன் கோபம் ஒரு அஞ்சு நிமிசம் கூட தாங்காதுன்னு .ஆனாலும் அவன் சொல்வதில் உண்மை இருந்தது.
“ம்ம்..சரிசரி .....ஒருத்தன் கேட்டான் டா !!!
யாரு ?
கொபிநாத் த தெரியுமா?
யார் போன மாசம் அவுஸ்டேலியாக்கு கடலால போனானே அவனா ?
ம்ம்ம்..அவன் தான்.
நீ என்ன பதில் சொன்ன ?
அப்ப படிகிற டைம்டா .அத பத்தி யார் நினைச்சா . முடியாதுன்னு சொல்லிடன்.
ம்ம்ம்ம்.....அப்ப நீ யாரையும் லவ் பண்ணல !!
சத்தியமா இல்லை டா .
ம்ம்ம்ம்ம்...
கொஞ்சநேரம் மவுனம்.நான் படிச்சு கொண்டிருந்த புத்தகத்தினுள் மூழ்க தொடங்கினேன்.
அவன் குரல் கலைத்தது.
“நீ ஏன் இரண்டு வருசஷம் முன்னாடி பிறந்தடி ?
ஹா ஹா !! என்னடா இது கேள்வி ? ஏன் இப்பிடி கேக்கிற ?
ஏதோ தோணிச்சு !!
ஏன் அப்பிடி தோணிச்சு ? 2 வருசம் பிந்தி பிறந்தா இந்த வருஷம் உன் கூட சேர்ந்து ஏஎல். எக்ஜாம் எடுத்திருப்பனா ? ஹ்ஹாஹா...(சத்தியமாக அவன் கேள்வியை ஏதோபகிடின்னு நினைச்சு தான் சிரிச்சேன் )
இல்லைடி 2 வருஷம் பிந்தி பிறந்து இருந்தா நானே உன்னை காதலிச்சு இருப்பேன்ல ...!!
(எனக்கு அவன் வழமை போலவே பகிடி விடுறான் என்று தான் தோன்றியது )
ஹா ஹா ஆமாடா இப்பவே உன் இம்சை தாங்கல இதுல உன்னை லவ்வ்வு வேற. சிரித்தேன் .
அவன் முகம் கறுத்தது இருந்ததை விட அதிகம் கறுத்தது .
எனக்க்கு அப்போதுதான் உறைத்தது
“டேய் சீரியசா எடுத்துகிட்டியா !! சும்மா டா சொன்னேன் “
அவன் பேச வில்லை மவுனமா வே இருந்தான் .அவன் தோளை பிடிச்சு உலுப்பினேன் .டேய் சும்மாடா தம்பி !!!
அவன் சொன்னான்
அப்பிடி கூப்பிடாதே இனி!
ஏண்டா ? தம்பி தானே நீ ?
இல்லை அப்பிடி கூப்ப்பிடாதே !!
ஏன் டா ?(இன்னும் அவன் தோளில் இருந்த கைஎடுக்கவில்லை )
ஏன்னா நான் உன்னை விரும்புறன்
தூக்கி வாரிப்போட்டது எனக்கு .சட்டன அவன் தோளை பிடித்திருந்த கை நெருப்புச்சுட்ட வேகத்தில் விலகிற்று.
சட்டென்று என்கண்கள் சிவந்தன .என் வழமையான முன் கோவம் என்னை அசுர வேகத்தில் ஆட்கொண்டது.( என்னிடம் அதுதான் அவனுக்கு பிடித்ததுன்னு முதல் ஒருதரம் அவன் சொன்னதாய் ஞாபகம் )
டேய் நான் உன்னை என்ர தம்பி ந்னு தான் நினைச்ச்சு பழ்கின்னான் ஆனா நீ இவ்வளவு .கேவலமான நினைப்போட என்னோட பழகுவன்னு நினைக்கல. இனி என்னோட கதைக்காதே .
எண்டு சொல்லிட்டு வந்திட்டேன்.
கடைசியாய் அவன் முகத்தை பார்த்த போது கண்கள் சிவந்து கிடந்தன. கண்ணீர் கிரகப்பிரவேசத்துக்கு தயாராக இருந்தது.ஆயினும் எனக்கு கோபமே வந்தது . திட்டி தீர்த்தேன் .என்கண்களும் கலங்கி விட்டது.வேகமாய் வந்து விட்டேன்.
2 வாரங்கள் . கழிந்தன அவனை காணும் சாத்திய பாடுள்ள இடங்களுக்க்கு போவதை தவிர்த்தேன். கோவம் அடங்கி விட்டது.அறிவுக்கு புலன்கள் அனுமதி கொடுத்தன. யோசித்தேன்.பாவமாய் இருந்தது.அவன் சொன்ன அந்த “விரும்புறன் வார்த்தை” தவிர அவனை வெறுக்க எனக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை.அந்த அளவிற்கு அவனுக்கு நல்ல இடத்தில் சிம்மாசனம் போட்டு வைத்திருந்தது மனது.
ஒரு முடிவுடன் கிளம்பினேன். அவனுக்கு புரிய வைக்கலாம்.சமாதானம் சொல்லலாம். பண்பாடு ,சமூகம் என்று எனக்க்கு நிறையச்சோல்லி தரும் அளவிற்க்கு அவன் அறிவாளி.அவன் சொன்னவற்றையே அவனுக்கு உதாரணமாய் சொல்லலாம் . புரிந்து கொள்வான்.அவன் புத்திசாலி.
அவன் வீடு
அன்ரி வந்தா (அவன் அம்மா)
“தம்பி சொன்னவன்”
என்ன அன்ரி ?
..கொம்பியூட்டர்ல ஏதோ டொக்கிமென்ஸ் இருக்கு நீ எடுக்க வருவன்னு.
அவன் எங்க அன்ரி போட்டான் ?
அன்ரி ஆச்சரியமா பார்த்தா
ஏன்ண்டி பிள்ள தெரியாத மாதிரி கேகிற அவன் கொழும்புக்கு கோஸ் படிக்க போனது உனக்கு தெரியாதோ ?
எனக்கு தூக்கி வாரிப்போட்டது
எப்ப அன்ரி ?
போன கிழமை.ஏன் இரண்டு பேரும் சண்டையோ ? என்று கேட்டுக் கொண்டிருந்த அன்ரி வாசலில் யாரோ வர
சரி நீ அவன்ர அறைக்குள்ள போய் கொம்பிய்ய்ட்டர பார்.\
என்று சொல்லிவிட்டு நகர்ந்தா எனக்கு புரிந்தது.கொம்பூட்டர்ல ஏதோ இருக்கு.
போனேன் அதை திறந்தேன் திரையில் ஒரு கோப்பு பாஸ்வேட் போட்டு இருந்தது . அதில் என் பெயர் .
கிளிக் செய்தேன் பாஸ்வேட் கேட்டது.எனக்கு தெரியும் அவன் எப்பொது ஒரே ஒரு ஒரு பாஸ் வேட்தான் பாவிப்பான். “யவனராணி” அவனுக்க்கு விருப்பமான நாவல். எனக்கு (எனக்கு மட்டும் தான் அவன் பாஸ்வேட் தெரியும் ந்னு கர்வமாகவு கூட இருந்தது )
திறந்தேன்
அழகாய் டைப்பண்ணி இருந்தான்.
“மன்னிச்சு கோ..மன்னிப்பு நான் சொன்னதுக்க்கு இல்லை …..நீ இவ்வளவு நாளா எப்பிடியும் பீல் பண்ணி இருப்ப உன் கவலைக்கும் கோவத்துக்கும் நான் காரணாமாயிட்டன் அதுக்கு தான் மன்னிப்பு கேட்டேன்..மற்ற படி நான் கேட்டது ஒன்றும் தவறில்லை…அது எனக்கு நான் கேட்ட நாளுக்கு 2 நாள் முதல் தான் தோணிச்சு……என் நட்பு நிஜம். எந்த கீழ்தனமான எண்ணத்துடனும் நான் பழக்வில்லை……அது உனக்கும் தெரிய்ம்……மனித உண்ர்வுகளுக்கு முன்னால சமூகம் ,வயசு எல்லாம் பெரிய விசயம் இல்லை . உலகத்துக்கு இது ஒண்ணும் புதிதல்ல . எனக்க்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். இது போதும் இதை நான காதல்கடிதமாக்க விரும்பவில்லை . ……உன்னை முழுதாய் புரிந்தன் நான் என்றும் என்னையும் நீ புரிந்து கொள்வாய் என்று நினைத்து இருந்தேன்……ஒரு வாரம் நீ கண்களுக்கு தட்ட்டு படுவாய் என்று காத்திருந்தேன் ..வரல …நான் போறேன்…….இனி உன்கண்களில் படேன்…….”
கடசியாக ஒன்று சொல்கிறேன்…..நான் தோத்து போனேன்.”
முடிந்திருந்தது கடிதம்.
விசைப்பலகையில் கைக்கள் படர பொத்தான் கள் கண்களின் ,கண்ணீர் பிசு பிசுத்த்து.
“பாவி நீ தோற்று தான் போனாய் என் மனம் செத்தே போய் விட்டது எப்படி சொல்ல போகிறேன்…இந்த கணம் முதல் நான் அந்த அசுர விதை என் மனதிலும் விதைக்கப்பட்டதை…..
இனி அதைசொல்லப்போவதும் இல்லை என்பதையும்.
-யதார்த்தன் -

வியாழன், 29 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 6:58 AM

மானும் மரை இனமும் மயிலினமுங் கலந்தெங்கும்
தாமே மிக மேய்ந்து தடஞ் சுனை நீர்களைப்பருகி
பூமாமரம் உரஞ்சி பொழி ஊடே சென்று –புக்குத்
தேமாம் பொழில் நிழல் துயில் சீபர்பதம்லையே.
-சுந்தரர்-
மேற்படி தேவாரம் சுந்தர மூர்த்தி நாயனார் சீபர்பத மலைச்சிவன் உறைகின்ற கோயிலின் சூழல் அழகை வர்ணிக்க பாடியதாகும்.
இப்படி ஒரு தலைப்பை (நான் பத்தியின் தலைப்பை- அப்பப்பா ஒரு மொழிக்கு எத்தனை மீனிங்குகள்) வைத்து விட்டு இவன் சம்பந்தமே இல்லாமல் சுந்தரர் தேவாரம் பாடுகிறானே என்று ஆச்சரியப்படுவதை இந்த செக்கனே நிறுத்தி கொள்ளலாம்.
இன்று மாலையில் பொழுது போகவில்லை . கமராவை எடுத்துக்கொண்டு ஊரின் எல்லையில் இருக்கும் தரவைப்பக்கம் சைக்கிளை மிதித்தேன். ஒரு இடத்தில் வீதியோரமாக ஒரு பாழடைந்த பழைய கேணி இருந்தது
, மூன்று நாள் பெய்த மழை கேணியை நிரம்பிவழியச்செய்திருந்தது ,அதன் அருகே ஒரு சில மாடுகள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. கேணியின் ஒரு மூலையில் பற்றைகளுக்கு நடுவே மயோசின் சுண்ணக்கல்லை பொழிந்து மாட்டுயரத்திற்கு ஒரு ஆவுரஞ்சி கல் நின்றது. அந்த ஆவுரஞ்சி கல்லில் மாடுகள் தம் உடலைத்தேய்த்தன.
2011 மார்கழி மாதம் வரை யாழ்ப்பாணத்தின் அனைத்து பொதுக்கிணறு , பொதுத்தொட்டிகள் , கேணிகள் , குளங்களுக்கு அருகில் நன்று பொளியப்பட்ட கல் ஒன்று நிமிர்ந்திருப்பது ஏன் என்று நான் யோசித்ததே கிடையாது. அந்த கல்லைப்பற்றி தெரிய வந்தது 2011 மார்கழி மாசத்தில் தான் , அதற்கு காரணம் தான் மேலே வந்த சுந்தரர் தேவாரம்.
(ஒரு முறை மூச்சை விட்டு விட்டு தொடர்ந்து வாசிக்கலாம்)
அப்போது நான் க.பொ.த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். தமிழை ஒரு பாடமாக படித்துக்கொண்டிருந்தேன். மானிப்பாயிலுள்ள புகழ் டியூசனில் சத்தியவேந்தன் சேரிடம் தமிழ் படித்துக்கொண்டிருந்தேன். உயர்தர தமிழ்ப்பாட அலகில் சுந்தரரின் “திருப்பருப்பதம் அல்லது சீபர்ப்பதம் ” என்ற பதிகத்தொகுதி (பதிகம் – பத்து பாடல்கள் கொண்டிருக்கும்) சேர்க்கப்பட்டு இருந்தது.
அதில் முதலாவதாக வரும் இந்த பதிகத்தை சத்தியவேந்தன் சேர் விளங்கப்படுத்தினார்
மானும் மரை இனமும் மயிலினமுங் கலந்தெங்கும்
தாமே மிக மேய்ந்து தடஞ் சுனை நீர்களைப்பருகி
பூமாமரம் உரஞ்சி பொழி ஊடே சென்று –புக்குத்
தேமாம் பொழில் நிழல் துயில் சீபர்பதம்லையே.
பாடலின் பொருள் இதுதான்
மான்களும் , மயில் இனங்களும் ஒன்றாக கலந்து நின்று அப்பிரதேசம் எங்கும் உலாவி தாமாகவே மேய்ந்து , பின்னர் அங்குள்ள நீர் நிலைகளில் தம்தாகத்தை தீர்த்துக்கொண்டு வயிறு நிறையப்பெற்றவைகளாய் பூக்களை பொழிகின்ற பெரிய மரங்களில் தம் உடலை உரஞ்சிச் சென்று நிழலை பொழியும் சோலை மரங்களின் கீழ் படுத்துறங்கும் அழகை பெற்றது சீபர்பத மலையாகும்.
என்று பொருள் சொன்னார் சேர். நான்
“அதேன் சேர் சாப்பிட்டு முடிஞ்சதும் மரத்தில போய் தேய்க்குதுகள் ?”
“தம்பி யாழ்ப்பாணத்திலதானே இருக்கிறீங்கள் ?”
“ஓம் சேர்”
“யாழ்ப்பாணத்தில கிணறுகள் குளங்களுக்கு பக்கத்தில
ஒரு கல் நட்டிருக்கும் கண்டிருக்கிறியளோ ?”
“ஓம் சேர்”
“அதேன் அங்க நட்டிருக்கெண்டு தெரியுமோ ?”
“…….”
“என்னடாப்பா நீங்கள் , அதுக்கு பேர் ஆவுரஞ்சிக்கல்”
“அப்பிடியெண்ட்டா ”
முன்வாங்கில் இருந்த ஏதோ ஒரு அழகான பிள்ளை.
“ஆ எண்டா என்ன ?”
“பசு மாடு”
“வெரிகுட் இப்ப அர்த்தம் சொல்லுங்கோ”
”பசுமாடு தேய்க்கிற கல்லோ சேர் ?” என்றேன்
கிளாஸ்ல எவனோ ஒரு நண்பன்
“என்னத்தையடா ?”
வகுப்பே கொல் என்று சிரித்து அடங்கியது
“தம்பி மாடுகளுக்கு பசி தாகம் தீர்ந்தா பிறகு உடம்பில் ஒரு வித தினவு எடுக்கும் , அப்ப மரத்திலையோ இப்பிடி கல்லிலையோ தமது உடலை தேய்த்துக்கொள்ளும் அதுக்காக தான் அந்த கல்லை எங்கட பாட்டன் பூட்டன் எல்லாம் நட்டிட்டு போனவை”
“ஓ அந்த தேய்ப்பு தான் சுந்தரர்ட தேவாரத்தில வருகுதோ ?”
“அதே தேய்ப்பு தான் ”
வகுப்பு முடிந்ததும் சேர் எங்களுடன் இருளும் வரை பேசிக்கொண்டிருப்பார். அவரிடம் நாங்கள் மறுபடியும் ஆவுரஞ்சி கல்லைப்பற்றி கேட்டோம். அப்போது சேர்,
எல்லா மிருகமும் அப்பிடிதான் தம்பியள் , உணவு முடிந்ததும் உடல் தினவெடுக்கும் அதுக்கு பிறகு இனப்பெருக்கம் செய்ய முயலும் , இது இயற்கையான ஒன்றுதான். என்று சொன்னார். அப்போது அருகில் இருந்த நண்பன் ஒருத்தன் ,
(அனேகமாக ரதனாக இருக்கும்)
”அப்ப மனுசர் என்னமாதிரி சேர் ?”
“ஏண்டா மனிசனும் மிருகம் தானே ”
அன்றுடன் அந்த உரையாடல் மறந்து போனது.

ஆனால் இன்று மாலையில் அந்தகல்லை பார்த்தவுடன் ரதன் கேட்ட கேள்விதான் ஞாபகத்திற்கு வந்த்து .


மனிதனுக்கு அடிப்படை தேவைகள் , உறையுள் ,உணவு எல்லாம் கிடைத்த பிறகு மனிதன் அடுத்ததாக கையாள நினைப்பதே உடலாகத்தான் இருக்கும்.
முந்தநாள் வடமராட்சிக்கு கிரிஷாந் ,அனோஜன் ,குமாரதேவன் ஐய்யா வுடன் பஸ்சில் புறப்பட்டோம், சுதந்திரத்தை பற்றியும் , மனித தேவைகளைப்பற்றியும் கிரி அனோஜனிடமும் என்னிடமும் கேள்விகளை கேட்டு விவாதித்தபடி வந்தான்.
ஒரு சந்தர்ப்பத்தில் “மனிசண்ட வாழ்கை எண்டுறது அடிப்படையான வாழ்தலுக்கான தேவையும் செக்ஸ்சும் தாண்டா மிச்சம் எல்லாம் அதன் பொருட்டு கட்டமைக்கப்பட்ட , புனையப்பட்ட உண்மைகள் தான். மற்றபடி எல்லாமே For Fucking தான் “

என்று சொல்லியபடி வந்தான். அதுவும் நினைப்பில் வந்து சென்றது.
எங்கட ஊர்ல குருவிக்காடு என்று சொல்லும் ஒரு சிறுகண்டல் காடு இருக்கின்றது, கோடைகாலங்களில் ஊரில் ஒரு கலாசார பாதுகாவலர் குழு எப்போதும் ஊருக்குள் யார் வருகிறார்கள் , எந்த ஜோடி குருவிக்காட்டுக்குள் இறங்குகின்றது என்ற கண்காணிப்பில் இயங்கிக்கொண்டிருக்கும். குருவிக்காட்டுக்குள் ஐட்டம் அடிப்பவர்களை பிடிப்பதற்கு அந்த குழு எப்போதும் தயாராகவே இருக்கும். அவ்வாறு அவர்கள் பிடித்த புணர்தல் ஜோடிக்கள் ஏராளம் , அதனை ஏதோ பெரியசாதனையாக ஊர் முழுக்க கதைப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரின் செல்போன்களின் Browsing History இலும் அத்தனை ப்ரோனோ தளங்களின் வரலாறு கொட்டிக்கிடக்கும். இது அவர்களின் தவறில்லை , கலாசாரம் பண்பாடு என்ற பெயரில் மனிதத்தினவுகளை அடக்கி அடக்கி நமது சமூகம் பாலியல் என்பதனையோ சக பாலின உடல் என்பதையோ புரிந்து கொள்ளாத ஒன்றாகவே வளர்க்கப்பட்டிருக்கின்றது.


சக பாலுடலை கடத்தல் அல்லது புரிந்து கொள்ளல் என்பது 40 வயதுக்கு மேல்தான் நடக்கிறது , அல்லது அதுவும் இல்லை. ஒழுங்கான பாலியல் கல்வியும் பாலியல் சுதந்திரமும் வழங்கப்பட்ட சமூக அமைப்பை கட்டாதவரை , ஐந்து வயது குழந்தை மேலும் மனித உடல் தினவு ஏற்பட்டபடிதான் இருக்கும் , இது மாற்றமுடியாத இயற்கையாகும்.


ஏன் வெளிநாடுகளில் விபச்சாரத்தை அரசு அங்கீகரிக்கின்றது , ஏன் ஒரு ஆணும் பெண்ணும் விரும்பும் பட்சத்தில் தம் உடல்களை பரிமாறிக்கொள்ளல்லாம் என்பதற்கு அனுமதி இருக்கிறது என்று நாம் சிந்தப்பதேயில்லை. அதுவும் வெப்ப வலைய நாடுகளில் இருந்து கொண்டு நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் சிக்கலான பாலியல் நடத்தை கோலங்கள் வன்முறைக்கே கொண்டு சென்று நிறுத்தும்.
சக தோழியின் சட்டை விலகி உள்ளாடைப்பட்டி தெரிந்தால் கூட கண் ஒருமுறை அதனை தடவிப்பாக்கும் இயல்புமுறைக்கு பழக்கப்பட்ட ஆண்களாகவே நாம் ஒவ்வொருத்தரும் வளர்ந்து நிற்கின்றோம்.
அடிப்படை பாலியல் சுதந்திரமும் அடிப்படை பாலியல் கல்வியும் இருக்கும் பட்சத்தில் கற்பழிப்புக்களுக்கோ இதர பாலியல் வன்முறைகளுக்கோ இடமிருக்காது. மனிதஉடல்த்தினவு என்பது மனிதர்களுக்கு இயற்கையான ஒன்றாகும் , அது உணவு முறையைப்போல , சுவாசத்தை போல இயல்பானதும் சாதாரணமானதுமாகும்.
ஆனால் காதலிக்கும் பெண்ணை கூட குருவிக்காட்டுக்குள் கூட்டி வரவேண்டிய சமூக அமைப்பை நாம் தான் உருவாகி வைத்திருக்கின்றோம். பரஸ்பரம் எழும் பாலியல் தேவைகளை இயல்பாக்கவும் சுதந்திரமாகவும் மாற்றும் பட்சத்தில் , யாரோ இருவர் புணர்வதை செல்பேசியில் பார்த்து சுயமைதுனம் செய்யவும் , கற்பழிக்கவும் , உடலிச்சைக்காக கொலை செய்யவும் தயாராகும் மனித மிருகத்தை சாதுவாக நடக்கசெய்ய இயலும்.


ஆனால் பண்ணை கடல்கரையில் காலம் காலமாய் காதலித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை போட்டோ எடுத்து தலைப்புசெய்தியாய் போடும் யாழ்ப்பாண அச்சு மற்றும் இணைய ஊடகங்களும் , பண்பாடையோ பாலியலையோ எப்படி புரிந்துகொள்ளகூடாதோ அப்படி புரிந்து கொண்டிருக்கும் எங்கள் ஊர் குருவிக்காட்டு காவலர்களுக்கும் அறிவூட்டுவதும் அடிப்படையான பாலியல் கல்வி பாலியல் சுதந்திரம் என்பவற்றை தெளிவாக்குவதும் தான் சரியாக இருக்கும்.
மற்றபடி. இல்லை முடியவே முடியாது பெய்யென பெய்யும் மழை , இராமன் சீதை, கண்ணகி மதுரை எண்டு ஆரம்பிச்சியள் எண்ட்டா உங்களுக்கு கிரிஷாந் சொன்னதைதான் சொல்லலாம்.


புரிஞ்சுக்க ராசா எல்லாமே For Fucking தான்


(மூச்சை விடுங்கள்)
மற்றபடி நீ திறமோ ? நீ பிட்டு படம் பாக்கிறதானே என்பவர்களுக்கு,
”பத்தி எழுதினதே எனக்காக தான்.”

-யதார்த்தன் -