திங்கள், 30 நவம்பர், 2015

Posted by விகாரன் On 5:54 AM



The silence depressed ME . its wasn’t the silence of silence.
                              it was my OWN silence.
                                                                                                                                                                                         -  Sylvia plath

01.

ஒரு கனவு. கொஞ்சம் ஞாபகமின்மை காரணமாக புனையப்பட்டதுமாகும். ஒரு பெண் தொடக்கத்தில் ஆடை அணிந்திருந்தாள் ,கறுப்பு நிறமென்று நினைக்கின்றேன் , முதுகில் முள்ளந்தண்டின் இரு புறமும்  இறக்கைகள் இருந்ததற்கான வடுக்களை கண்டேன்.ஒரு வேளை அவை விபத்தொன்றின் காயமாக இருப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு.
ஒரு பெரிய அளுயர மயில் அவளுடன் இருந்தது , அவளுடன் நடந்தது , உண்டது , இராத்திரியில் அதனை அவள் அணைத்த வாறே உறங்கத்தொடங்கினாள். மெல்ல மெல்ல  அவளின் தோலுடன் மயில் மிக நெருக்கமானது . பச்சை , நீலம் , கறுப்பு நிறங்கள் அவளின் தோலில் படியத்தொடங்கின , குறிப்பாக அவளுடயை மார்புகளில் அதிகமாக மயிலின் கழுத்து இழைவதனால் அதன் கழுத்தில் இருந்து மெல்ல உதிரும் ரோமச்செதில்கள் அவளின் தோலின் நுண் துழைகளுக்குள்  உக்கி உக்கி  நுழைந்து படியத்தொடங்கின , எப்போதும் கோடையில் வியர்க்கும் , குளிரில் நடுங்கும் அவளுடைய தேகம் அதன் பின் குளிர் சூடு இரண்டையும் பிரித்தறிய முடியாதவொன்றாய் மாறியது.
இவ்வாறிருக்க தூக்கம் கலைந்தது.


02.

உன்னை மறக்கும் தறுவாயில் இருக்கிறேன்.நிறைய பெண்களுடன் உரையாடுகின்றேன் , பார்க்கின்றேன், நன்றாகப்பார்க்கின்றேன். உள்ளே ஒரு பக்கத்தில் அவர்களையும் இன்னொரு பக்கத்தில் உன்னையும் நிறுத்திவிட்டு  ஒப்பிட்டு  பார்ப்பது தெரிகிறது. சற்று பருமனான சிவப்பு ராணி வண்ணத்துப்பூச்சியை பிடித்து , அதனை உள்ளங்கையில் வைத்து பர பரவெனக்கசக்கி  சிதறும் அதன் தசை கூழை நுகர்ந்து பார்க்கும் உணர்வினை போல அப்போது அது.

03.

இப்போது என்னையும் உன்னையும் நினைக்க எரிச்சலாக உள்ளது. அடிவயிற்றிலிருந்து நெஞ்சுவரை பரவும் உணர்சி அது. இதை எழுதும் போது பிடரியை வேகமாக சொறிந்து கொண்டே வெப்பம் மிக்க பெருமூச்சொன்றை விடுகின்றேன்.

04.

உன்னுடைய பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்து பார்க்கின்றேன். எவ்வளவு மோசமாகிவிட்டது இந்தக்கணம். வியாதி பிடித்த  கம்பிகளை கொண்ட சுவர்கடிகாரம்  அடிக்கடி பார்வை நிலைத்து நிற்கவும் சேர்த்து விலை கொடுத்து வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.


05.

மீண்டும் எரிச்சலாக இருக்கிறது, இதை எழுத வேண்டும் என்று நானே என்னை கட்டாயப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கின்றேன். வெளியே சிணுங்கும் மழை , குளிரில் விறைத்து அறைக்குள் நுழையும் கோழியை  புத்தகம் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்து துரத்தி விட்டு தொடர்ந்தும் எழுதுகின்றேன்.
இந்த மழை
 இரண்டு மணிநேரங்களுக்கு முன் பஸ் யன்னலுக்கு வெளியே அழகாகதான் இருந்தது. ஒரு கவிதைக்குரிய அழகு அதனிடமிருந்தது. அரைப்பசியில் , தனிமையில் , உன் பெயரில் இப்போது அது எவ்வளவு எரிச்சல் மிக்கதாய் பொழிகிறது.


06. 

இதை நீ படிக்கப்போவதில்லை , அவசியமும் இல்லை , உனக்கு என் தொல்லை பழகிவிட்டது , பொருட்டற்ற ஓர் சதை இருப்பு நான் ., பார்தாயா இப்படித்தான்  நான் இருக்கிறேன் , எப்போது என்னை நியாயப்படுத்த எழுதுகிறேன் , என்னை தூயவனாக , தன்னிகரில்லாதவனாக நிறுவ நான் எழுதுகிறேன் , அதன் அரசியல் அதுதான் , என்னிடம் இப்போது  , காதலில்லை , உன்மேல் பிரியமில்லை 

 ஒருவேளை இந்த எரிச்சல் மிக்க கணத்தை நீ நம்பலாம் , அது தூய்மையானது , உன்மேல் ப்ரியமுண்டென்பதையோ  , வார்த்தைகளில் உள்ள உண்மை மற்றும் உண்மைகள் பற்றியோ நீ சிந்திக்கத் தேவையில்லை ,

ஹாஹா

நல்ல வேளை நீ இதை படிக்கப் போவதில்லை.

சொல்லும் சொல்லிய அனைத்தும் பொய்யாகும் , இங்கே எதுமில்லை ஒருவேளையுன் கருணையுள்ளம் என் பொருட்டு நேசிக்க இந்த எரிச்சல் மிக்க பொழுது உனக்கு உதவும்.

எனக்கு

எதேனும் ஒருத்தி வெள்ளிக்கிழமைகளில் எதிர்ப்படுகையில் வரும் பாண்டீன் ஷம்புவின் மணம்  , உன் உச்சந்தலையின் மிகப்பிரியம் மிக்க நெடியை எனக்கு ஞாகப்படுத்தும் .

எரிச்சலற்ற பிரியம் மிக்க கனவது.


-யதார்த்தன் -

0 கருத்துகள்:

கருத்துரையிடுக