எது வரவே கூடாதென்று நேர்ந்திருந்தேனோ அது எனக்கும் வந்துவிட்டது.எலோரும் அதன் பெயரைச்சொல்வதைக்கூட தவிர்த்துவந்தார்கள் . தெய்வ நம்பிக்கை மீது எழுதப்பட்ட நோய் அது . கோடை வெயிலின் வெம்மை முகாம்களின் தறப்பால் கூடாரங்கள் மீது காய்ந்தது.வெய்யில் வலுக்க வலுக்க ஒவோரு நாளும் பலர் பூவரசங்குளம் வைத்திய சாலைக்கு ஏற்றப்பட்டனர்.
பூவரசங்குளம் வைத்திய சாலை நலன்புரி முகாம்களில் பெரியம்மை வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.எல்லா
எனக்கு உடலில் அவ்வளவாக கொப்பளங்கள் போடவில்லை .உடலில் நான்கைந்து கொப்பளங்கள் சிறிய அளவில் போட்டு உடைந்து காய்ந்து போயிருந்தன .கைகளில் ஒன்றிரண்டு சிறிய கொப்பளங்கள் அவ்வளவு தான்.
பெரிய ஓலை கொட்டகைகள் போட்டு நிலத்தில் ஏராளம் நோயாளர்கள் பன்றி குட்டி போட்டது போல் வெப்பம் இலை படுக்கையில் சுருண்டு கிடந்தனர் .என்னால் அந்த இடத்தில் இருக்கவே முடியவில்லை . ஒவ்வொருதரின் கோப்பளங்களையும் அவர்கள் அலறும் முனகும் வலியோசைகளையும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை எனவே வெளியே வந்து அலைந்து திரிவேன்.
இன்னும் ஒரு சில நாட்களில் என்னை முகாமிற்கு அனுப்பி விடுவார்கள் என்று எனக்கு தெரியும்.அன்றும் அப்படித்தான் வைத்திய சாலைக்கு பக்கத்தில் இருந்த பாடசாலை மைதானத்தில் கிரிகெட் பார்த்து கொண்டிருந்து விட்டு அங்கிருந்த வேப்ப மரத்தில் ஏறி வேப்பம் குழைகளை முறித்துக் கொண்டேன் .என் படுக்கைக்கு பக்கத்தில் இருக்கும் பெரியவர் ஒருவருக்காக அந்த குழைகளை முறித்தேன். பெரும்பாலும் அந்த வைத்திய சாலையை சுற்றி உள்ள அனைத்து வேப்ப மரங்களும் மொட்டையடிக்கப்பட்டு விட்டன. கொப்பளங்களின் வலியையும் எரிச்சலையும் வேப்பங்குழை இல்லாவிட்டால் சமாளிப்பது பரமபிரயத்தனம் .
குழையை முறித்துக் கொண்டு வைத்திய சாலையின் கழிப்பிட தொகுதிகள் இருந்த பக்கமாய் நடந்து வந்து கொண்டிருந்தேன்.அப்போது ஒரு வயதான பெண்மணி பெரிய குரலில் யாரையோ திட்டி கொண்டிருந்தாள்.
“உந்த குமரியளுக்கு வேற வேலையில்லை எல்லாதையும் கழட்டி பிற்றுக்க போடுறாளவை .எல்லாம் அடைச்சு போய் கிடக்கு ”
என்று அந்தம்மா திட்டி கொண்டே போனார். எனக்கு ஓரளவு விடயம் புரிந்தது, கழிப்பிடத்தை சுற்றி நீலம் , றோஸ் நிறங்களில் உறைகளும் வெள்ளை டிசு பேப்பர்களும் முட்புதர்களில் சிக்கிக்கிடந்தன. நான் லேசான சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தேன்.
அப்போது தான் நான் அவளைக்கண்டேன்
ஜனனி
என்பள்ளித் தோழி. கிட்ட தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது அவளை கண்டு. அபோது நாங்கள் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம்.நான் சி வகுப்பு ஜனனி ஏ வகுப்பு . நன்றாக சதுரங்கம் ஆடுவாள், வருடா வருடம் கிளிநொச்சியில் நடக்கும் “ செப்டெம்பர் செஸ் “ போட்டிக்கு எங்கள் பாடசாலை அணியில் நாங்கள் இருவரும் செல்வதுண்டு.எனவே அவள் எனக்கு தோழியானாள். வகுப்பில் பாடம் இல்லா விட்டால் அவளுடன் போயிருந்து சதுரங்கம் ஆடுவேன்.ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன்.
பத்தாம் வகுப்பு இரண்டாவது தவணை ஆரம்பித்த போது கொஞ்சநாட்களாக ஜனனி பள்ளி கூடம் வருவதில்லை. அவள் தோழிகளிடம் விசாரித்துப்பார்த்தேன்.
“ஜனனி கலியாணம் செய்திட்டாள் ”
"ஏன் ?”
“பிடிப்பிரச்சனையாம்”
“யாரை ? ”
“கபிலனை”
“எந்த கபிலன் ?”
“அவளின்ர மச்சானாம் யாரோ ?”
”ஓ ஏல் கபிலனோ ?”
“ஓம் அவன் தான் .அந்த கறுவல் ”
அப்போது வன்னி சனங்களை உலுக்கி கொண்டிருந்த பிரச்சினைகள் இரண்டு ஒன்று கிபிரடி இன்னொன்று பிள்ளைபிடி.
விடுதலைபுலிகள் அப்போதுகட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு இருந்தனர், வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்கு வரவேண்டும் என்று கட்டாயமாக இயக்கத்தில் பிள்ளைகளை இணைத்தனர், இதனால் பல இளைஞர்களும் யுவதிகளும் காடுகளிலும் உறவினர்வீடுகளிலும் ஒழித்து வாழ்ந்தனர். எனினும் புலிகள் பிள்ளை பிடியை நிறுத்துவதாயில்லை. புலிகளின் அரசியல் துறை கடைசி காலம் முழுவதும் “பிள்ளைபிடிகாறர் ”என்ற பெயருடனேயே வழக்கொழிந்து போனது தனிக்கதை.
இவ் ஆட்சேர்பில் இருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர் அவர்களுக்கு அவசரமாக திருமணம் செய்து வைத்து அவர்களை புதுக் குடும்பமாக்கினர். பள்ளிகூடத்தில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் தாலியையும் குழந்தையையும் சுமக்க தொடங்கினர். இந்த அவலம் தான் ஜனனியை திருமணத்தில் தள்ளியது,
எனக்கு கபிலனை தெரியும் எங்களை விட இரண்டு வயது அதிகம். அப்போது அவ்ர் ஏல் எல் படித்துகொண்டிருந்தார். நன்றாக புட் போல் விளையாடுவார்.ஜனனியின் முறை மச்சான் என்று அடிக்கடி ஜனனி சொல்லியிருக்கிறாள்.
அதன் பிறகு நான் சேர்ச்சில் ஜனனியை கண்டேன். தலை வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் குங்குமம் வைத்திருந்தாள். முகம் சற்று பிரகாசமாய் மாறி இருந்தது, கொஞ்சம் குண்டாகியிருந்தாள்.
என்னை கண்டதும் எபோதும் பூக்கும் அதே வெள்ளை புன்னகையுடன் முகத்தால் சிரித்தாள்.அதன் பின்னர் இடம் பெயரும் போது என் தோழன் ஒருத்தன் கபிலன இயக்கத்துக்கு பிடிச்சாச்சாம் என்றான்.எனக்கு ஜனனியின் குங்கும வகிடும் சிரிப்பும் தான் ஞாபகம் வந்தது.
அதன் பிறகு நான் இன்று தான் ஜனனியை காண்கிறேன். வைத்தியசாலை நுழைவாயில் அருகே உள்ள மர நிழலில் நின்றிந்தாள். கறுப்பு நிறத்தில் சட்டை போட்டிந்தாள்
அவள் முன் போய் நின்றேன்
ஆச்சரியத்துடன்
“டேய்ய்ய்ய்”
எப்படி இருக்கிறாயடி ? கேட்டபடி அவளை ஏறிட்டேன்.
மிகவும் மெலிந்து போயிருந்தாள் . கண்களை சுற்றி கருவளையம் . முகத்தில் அங்காங்கே அம்மை கொப்பளங்கள் காய்ந்து கருகிக்கிடந்தன. காதில் தோடுகளில்லை. அதற்கு பதிலாக ஒரு வேப்பங்குச்சியை செருகியிருந்தாள். சிரிப்பு மட்டும் அப்படியே இருந்தது,
“எந்த முகாமடா ?”
”இராமநாதன் …நீ ? “
”கதிர்காமர் “
கண்களை நெற்றிக்கு ஓட்டினேன் வகிட்டில் குங்குமம் இல்லை.கழுத்தில் எதுவுமேயில்லை.
கபிலனை பற்றி கேடக கூடவே கூடாது, முடிவு செய்து கொண்டேன்.
“மாறிட்டோ உனக்கு ? ”
”ஓமடி கையில் ஒண்டு ரெண்டு காயேல்ல ”
”உனக்கு ?”
ம்ம் மாறிட்டு.
”இதில ஏன் நிக்கிற ?:”
””சும்மா தான் டா “
கதைத்தோம் பழைய கதையெல்லாம். யார்யார் உயிருடன் இருக்கிறார்கள் யார் இல்லை என்பது முதற்கொண்டு கதைத்தோம்.நான் கபிலன் பெயரை தவிர எல்லாவற்றையும் கதைத்தேன்.அவளும் எதுவும் சொல்லவில்லை.
நான் புறப்படும் வேளையில் தான் ஏதோ சொல்ல வாயெடுத்தவள்.சட்டென அடங்கினாள்.
“என்னடி ?”
“ஒண்டுமில்லைடா நீ போ ”
“இல்லை சொல்லு ?”
“இல்லை வேண்டாம் நீ போடா ”
தயங்கினாள் .வாய் போவையும் கண்கள் போகாதேயும் வைத்திருந்தன.
“இல்ல பரவாயில்லை சொல்லடி ”
“ஒரு கெல்ப்படா ..குறை நினைக்காதே”
நான் காற்சட்டை பையில் இருந்த பேசை ஒருமுறை தொட்டு பார்த்துக்கொண்டேன். அம்மா பூவரங்குளத்திற்கு அம்புலன்ஸ் ஏறும் முன் தந்த மூவாயிரத்தில் இரண்டாயிரம் இருந்தது.
“காசு ஏதும் ?”
“இல்லையடா காசெல்லாம் இருக்கு ”
“அப்ப என்ன ?”
“ஒருக்கா வெளிக்கடைக்கு போகோணும் ”
”ஹா ஹா இதுக்கு தான் மசுந்தின்னியே லூசு .என்ன வாங்கோணும் ? ”
“அதுடா ..குறை நினைக்காதை பிளீஸ் ”
“கேற்றில ஆமிக்காரர் ”
“அவங்கள் ஒண்டும் சொல்ல மாட்டாங்கள் .என்ன வாங்கோணும் எண்டு சொல்லிட்டு போய் வரலாம் ”
“இல்லையடா அதுதான் பிரச்சினை .கடைலையும் ஒரே பெடியள் ”
“என்ன வாங்கோணும் ? ” குழம்பியிருந்தேன்.
“ஒரு விஸ்பர் வாங்கோணும் டா ”
“…………..”
அவள் கேட்பது எனக்கு நன்றாக புரிந்தது .அப்போது நான் 16 வயது பையன் யெளவனத்தில் அந்தர சமாசாரங்களை அபோதுதான் தெரிந்து கொள்ள தொடங்கியிருந்தேன். கொஞ்சம் அதிகப்பிரசங்கி என்றாலும் என்னால் .அவள் கேட்டதை வாங்கிவரும் தீரச்செயலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.
எனினும் ஒரு பெண்பிள்ளை கேட்கின்றாள்.அதுவும் தோழி.அவள் நிலமை புரிந்தது .அவளிற்கு அது உடனடியாக தேவைப்பட்டு இருக்க கூடும். வேறு வழியில்லை போய்த்தான் ஆக வேண்டும்.
“டேய் ஏலாட்டி சொல்லடா …யாரும் பெரியாக்கள கேட்டுப்பாக்கிறன் ”
அவள் குரலில் பரிதாபம் மிதமிஞ்சி வழிந்தது.
அவள் அதுவரை கையில் வைத்து பிசைந்து கொண்டிருந்த காசை பெற்றுக்கொண்டு .நடந்தேன் . வாசல் சென்ரியில் நின்ற இராணுவவீரன் முகம் இரண்டு மூன்று நாட்களாக நான் கடைக்கு போய் போய் பரிச்சமாகி விட்டது.அவனும் என்னை கண்டதும் புன்னகைத்து. விட்டு
“மல்லி கடைகு போறது ”
என்றான் சிரித்து விட்டு அவனைகடந்தேன்.நல்ல வேளை
“மல்லி என்ன வாங்க போறது ” என்றவன் கேட்கவில்லை.
கடையை நோக்கி நடந்தேன். கடையில் நான்கைந்து இளைஞர்கள் கைகளில் கொக் களுடன் நின்றிருந்தனர். நேராக கடைக்குள் நுழைந்தேன்.
கடைக்கார அம்மா இரண்டு நாள் சினேகத்தில் புன்னகைத்தார்
“என்னப்பன் வேணும் ? ”
“அன்ரி ஏதோ விஸ்பறாம் ?” தெரியாதது போல் இழுத்தேன்.
உடலெல்லாம் விறைத்து. வியர்வை கரை புரண்டு ஓடியது வழைமை போல் என் வலது கை நடுங்கத்தொடங்கியது.
கடைக்கார அம்மா அதனை என் கையில் தந்து விடுவாரோ என்று பயந்தேன். நல்ல வேளை அவர் அதை பேப்பர் ஒன்றில் சுற்றி பையில் போட்டு தந்தார்.
வாங்கி கொண்டு திரும்ப அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருதன்
“தம்பி அது பிஸ்கற் இல்லை ”
கண்டுகொள்ளாமல் வேகமானேன்.
இராணுவ வீரன் அதை பரிசோதிப்பான் என்று நினைத்தேன்.நல்ல வேளை அவன் புன்னகைத்த வாறே கேற்றை திறந்து விட்டான்.
நேராக நடந்து ஜனனி நின்றிருந்த மரத்தின் கீழ் வந்தேன்.
அவள் சங்கடாமாய் புன்னகைத்தாள்
“தாங்ஸ் டா தம்பி ” புதுக்குரல்
திரும்பி பார்த்தேன் கபிலன் நின்றிருந்தான்.
நான் ஜனனியை ப்பார்த்தேன்
சங்கடத்தின் அளவு கூட அவள் நெழிந்தாள்
“சொறிடா இவருக்கு வெக்கம் ”
.என்னிடம் விடை பெற்று இருவரும் புறப்பட்டனர்.
கபிலனின் கை ஜனனியின் கையினை பற்றியிருந்தது. இன்னொரு கையில் நான் வாங்கிவந்தது.
இருவரையும் பார்த்த படி நின்றிருந்தேன் ஜனனி கபிலனுக்கு தெரியாமல் திரும்பி ஒரு முறை கெஞ்சும் தொரணையி முகத்தை வைத்தபடி
“சொறிடா ” என்றாள் .
நான் பரவாயில்லை என்று தலையாட்டினேன். ஜனனியின் வார்த்தைகள் மீண்டும் காதிணுள் ஒலித்தன
“சொறிடா இவருக்கு வெக்கம் ”
அப்போதுதான் நான் முதன் முதலில் பிரபாகரன் மீது கோபப்பட்டேன்.
-யதார்த்தன்