நீ
மிகச் சாதாரணமாய்
செத்துப் போவாய்
ஏதோ ஒரு கடுகதி ரயிலடியோ
ஆலகால விஷமோ
எதோ ஒன்றால்
மிகச்சாதாரணமாய் அரங்கேறி இருக்கும்
உன் சுய உயிர் கொல்லும் இன்பம்.
எச்ச மாய் ஒரு கடிதம்
இலக்கண தமிழில்
அவளை மையம் கொண்டு
எழுதி இருப்பாய்
அவள்
பெயர் குறிப்பிடாமல்.
இருக்கும் சில சமயம்
இப் பெருந்தன்மை உள்ள
நீ
மிக்சாதாரணமாய் செத்து போய் இருப்பாய்
கடிதம்
காதலியாகி கசிந்துருகி
கிடக்கும்
இறுதி வரிகளில் மட்டும்
பெற்ற கடன்களுக்கும்
கூட பிறந்த கடன்களுக்கும்
வட்டி கட்டி எழுதி இருப்பாய்
ஏதாவது சில வார்த்தைகள்
அதிலும்
ஒன்று ”அவளை திட்டாதீர்கள்” என்று இருக்கும்
ஆயினும்
நீ மிகச்சாதாரணமாய்
செத்து போய் இருப்பாய்
உன்
உடல் காக்கி சட்டைகளும்
நீதிமன்றங்களும்
புடைசூழ கிழிக்கப்படும்
நீ
அவளை வைத்திருந்ததாய் சொல்லப்பட்ட
இதயம் உட்பட,
அதனால்
உனக்கு என்ன
நீ மிகச் சாதாரணமாய்
செத்து போய் விட்டாய்
அவள்
மேல் குற்றமில்லை
பாவம்
ஒரு மாகா கோழையை
காதலித்த பாவம்.
உலகம் எதிர்த்தாலும் நின்னை
கரம்பிடிப்பேன்
என்று வசனம்
பேசிய பாவம்
உனக்கு இது தெரியாது
நீ சாதாரணமாய் செத்து போய் இருப்பாய்
பெரும்பாலும்
அவள் நிலைக்கு
அவள்
பொறுப்பு இல்லை
ஆயிரத்தெட்டு காரணம்
அவள்
சித்தத்தை சிதைத்து
இருக்கும்
பெரும்பாலும்
வழமை போல்
சாதியும் சமயமும்
குலமும் குடுப்பமும் செல்வாக்கு செலுத்தும்
அடி முட்டாளும் பழிக்க தக்க
கோழை நீ
உனக்கு தெரியாது
உன் பெற்ற வயிறும்
தோள்கொடுத்தவனும்
கதறுவது
ஏன் உன் இதயம் வாங்கி
திரும்ப தந்தவளை
குற்ற உணர்வும்
காதலும் ஒப்பந்தம் போடு
தவணை முறையில் கொல்ல போவதை
நீ அறியாய்
உன் நாராசமான பெயர்
ஒன்றும் அறியா அவள் குழந்தைக்கு இடப்பட இருப்பது
அதிக பட்ச கொடுமை
உனக்கு இவை தெரியாது
நீ தான் மிகச்சாதாரண மாய் செத்து
போய் விட்டாயே
வருத்த படாதே
உனக்காக இரங்கவும்
உன்னை காதல் ராஜ்ஜியத்தின்
நிரந்தர இளவலாய்
பட்டாபிஷேகம் செய்யவும்
ஒரு கூட்டம்
கிளம்பும்
ஏன் எனின்
அவர்கள் அகராதியில்
உன் காதல் புனிதமான தாயிற்றே
பாவம் நீ இதைக்கூட அறியாய்
நீ தான் மிகச்சாதாரணமாய்
செத்து போனாயே.
-யதார்தன்