அவன் மனசு எப்பிடி வலிச்சிருக்கும்
நான் அப்பிடி சொல்லி இருக்க கூடாதோ ?
வேற வழி இல்லையே.
அவனுக்கு கொடுத்த தண்டனை கொஞ்சம் பெரிது தானோ
பொறுமை காத்திருக்க வேண்டும்.
மனசு அலைபாய்ந்தது .எதோ ஒரு ஓரத்தில் குற்ற உணர்வும் யதார்தமும் கட்டிப்புரண்டு சண்டை போட்டன. கண்டிப்பாய் அவனை வெறுப்பது மட்டும் சாத்திய படுவதாய் இல்லை.
அவன் முகம் மனதில் எழுந்தது ,சிரித்தான். பேசினான் ...வழமைபோல கவிதையாய். தான் என்ன எதிர்பார்தாளோ அவை எல்லாம் பேசினான் . குரலில் ஆண் என்னும் அகங்காரம் இல்லை அடிமை உணர்வும் இல்லை. சில சமயம் சிந்திப்பாள் எப்படி முடிகிறது இவனால் ஒரு பெண்பிள்ளையை அதுவும் 2 வயது அதிகமான பெண்பிள்ளையை கனகச்ச்சித மாய் புரிந்து கொண்டு பேச.
பாராட்டுவான் .
“நல்லா இருக்குடி இந்த உடுப்பு...”
அதனூடே நகைச்சுவைப்பான்
‘’கடைக்காரன் பாக்கதப்போ எடுதிட்டியா ...?’’
விவாதிப்பான்
”இல்லை அப்படிச்சொல்லாதே ஆண்களும் மோசமாவர்கள் தான்......நீ பெண்ணா இருந்து உன் வர்க்கத்தை பிழையாய் கதைக்காதே”
நலம் விசாரிப்பான்
”பனடோல்போட்டியா ? இண்டைக்கு கிளாஸ் போகாதே நான் நோட்ஸ் வாங்கிதாறன்”
கவைதையால் கதைப்பான்
கவிதைஒண்டு சொல்லேண்டா
“கம்பன் மகளே கவிதை கவிதை கேக்கிறாள் நான் பாக்ய வான் தான் ”
என்பான்.
இப்படி ஏராளமாய். நூலகசந்திப்பில் அறிமுகமானது முதல் அவன் நல்ல தோழனாக, இருந்தான் இன்றும் அப்படித்தான் என நினைக்கிறேன்.
ஆயினும் காலத்திற்கு பொறுக்கவில்லை அவனுடனான என் பழக்கம்.அவன் மனதில் ஏன் விதைத்தது அந்த அசுரச்விதையை. நெஞ்சில் இன்னும் இருகிறது நேற்றைய உரையாடல் அட்சரம் பிரக்காமல்.
“ஏய் காதல் .இத பத்தி என்ன நினைக்கிறாய் ?
ஏண்டா கேக்கிறாய் ?
சும்மா தாண்டி கேட்டேன் .சொல்லு யாரயாச்சும் லவ் பண்ணி இருக்கியா ?
என்ன நக்கலா ? அப்பிடி ஒண்டும் இல்லை
சும்மா நடிக்காதே !! ஒருத்தனுமா உன் பின்னால சுத்தல ?
இல்லை !
ஐ....எனக்கு தெரியாதா !! சுமாராக இருந்தாலே சுத்துவானுக !! நீ சூப்பர் பிக.....!!!!
சட்டேன நிறுத்தி கொண்டு நாக்கை கடித்து கொண்டு முறுவலித்தான்.
என்னடா !! பேச்சு ஒரு மாதிரி இருக்கு !! (எனக்கு பிடித்திருந்தது என்னை சூப்பர் வகைக்குள் அடக்கியது ஆனாலும் காட்டி கொள்ளவில்லை)
சாரிப்பா !!அத விடு யாருமா உன்கிட்ட புரப்போஸ் பண்ணினதில்லை ?
இல்லைடா!!!
போ நீ பொய் சொல்லுற !! இனி உன் கூட என்ன பேச்சு நான் உன் கிட்ட உண்மையாதானே இருக்கேன்..இன்னிக்கு எத்தின பொண்ண சைட் அடிச்சன்னு கூட சொல்லுறன் ஆனா நீ போய்யா பேசுற பொய்காரி .போ கோவம் !!
எனக்கு தெரியும் அவன் கோபம் ஒரு அஞ்சு நிமிசம் கூட தாங்காதுன்னு .ஆனாலும் அவன் சொல்வதில் உண்மை இருந்தது.
“ம்ம்..சரிசரி .....ஒருத்தன் கேட்டான் டா !!!
யாரு ?
கொபிநாத் த தெரியுமா?
யார் போன மாசம் அவுஸ்டேலியாக்கு கடலால போனானே அவனா ?
ம்ம்ம்..அவன் தான்.
நீ என்ன பதில் சொன்ன ?
அப்ப படிகிற டைம்டா .அத பத்தி யார் நினைச்சா . முடியாதுன்னு சொல்லிடன்.
ம்ம்ம்ம்.....அப்ப நீ யாரையும் லவ் பண்ணல !!
சத்தியமா இல்லை டா .
ம்ம்ம்ம்ம்...
கொஞ்சநேரம் மவுனம்.நான் படிச்சு கொண்டிருந்த புத்தகத்தினுள் மூழ்க தொடங்கினேன்.
அவன் குரல் கலைத்தது.
“நீ ஏன் இரண்டு வருசஷம் முன்னாடி பிறந்தடி ?
ஹா ஹா !! என்னடா இது கேள்வி ? ஏன் இப்பிடி கேக்கிற ?
ஏதோ தோணிச்சு !!
ஏன் அப்பிடி தோணிச்சு ? 2 வருசம் பிந்தி பிறந்தா இந்த வருஷம் உன் கூட சேர்ந்து ஏஎல். எக்ஜாம் எடுத்திருப்பனா ? ஹ்ஹாஹா...(சத்தியமாக அவன் கேள்வியை ஏதோபகிடின்னு நினைச்சு தான் சிரிச்சேன் )
இல்லைடி 2 வருஷம் பிந்தி பிறந்து இருந்தா நானே உன்னை காதலிச்சு இருப்பேன்ல ...!!
(எனக்கு அவன் வழமை போலவே பகிடி விடுறான் என்று தான் தோன்றியது )
ஹா ஹா ஆமாடா இப்பவே உன் இம்சை தாங்கல இதுல உன்னை லவ்வ்வு வேற. சிரித்தேன் .
அவன் முகம் கறுத்தது இருந்ததை விட அதிகம் கறுத்தது .
எனக்க்கு அப்போதுதான் உறைத்தது
“டேய் சீரியசா எடுத்துகிட்டியா !! சும்மா டா சொன்னேன் “
அவன் பேச வில்லை மவுனமா வே இருந்தான் .அவன் தோளை பிடிச்சு உலுப்பினேன் .டேய் சும்மாடா தம்பி !!!
அவன் சொன்னான்
அப்பிடி கூப்பிடாதே இனி!
ஏண்டா ? தம்பி தானே நீ ?
இல்லை அப்பிடி கூப்ப்பிடாதே !!
ஏன் டா ?(இன்னும் அவன் தோளில் இருந்த கைஎடுக்கவில்லை )
ஏன்னா நான் உன்னை விரும்புறன்
தூக்கி வாரிப்போட்டது எனக்கு .சட்டன அவன் தோளை பிடித்திருந்த கை நெருப்புச்சுட்ட வேகத்தில் விலகிற்று.
சட்டென்று என்கண்கள் சிவந்தன .என் வழமையான முன் கோவம் என்னை அசுர வேகத்தில் ஆட்கொண்டது.( என்னிடம் அதுதான் அவனுக்கு பிடித்ததுன்னு முதல் ஒருதரம் அவன் சொன்னதாய் ஞாபகம் )
டேய் நான் உன்னை என்ர தம்பி ந்னு தான் நினைச்ச்சு பழ்கின்னான் ஆனா நீ இவ்வளவு .கேவலமான நினைப்போட என்னோட பழகுவன்னு நினைக்கல. இனி என்னோட கதைக்காதே .
எண்டு சொல்லிட்டு வந்திட்டேன்.
கடைசியாய் அவன் முகத்தை பார்த்த போது கண்கள் சிவந்து கிடந்தன. கண்ணீர் கிரகப்பிரவேசத்துக்கு தயாராக இருந்தது.ஆயினும் எனக்கு கோபமே வந்தது . திட்டி தீர்த்தேன் .என்கண்களும் கலங்கி விட்டது.வேகமாய் வந்து விட்டேன்.
2 வாரங்கள் . கழிந்தன அவனை காணும் சாத்திய பாடுள்ள இடங்களுக்க்கு போவதை தவிர்த்தேன். கோவம் அடங்கி விட்டது.அறிவுக்கு புலன்கள் அனுமதி கொடுத்தன. யோசித்தேன்.பாவமாய் இருந்தது.அவன் சொன்ன அந்த “விரும்புறன் வார்த்தை” தவிர அவனை வெறுக்க எனக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை.அந்த அளவிற்கு அவனுக்கு நல்ல இடத்தில் சிம்மாசனம் போட்டு வைத்திருந்தது மனது.
ஒரு முடிவுடன் கிளம்பினேன். அவனுக்கு புரிய வைக்கலாம்.சமாதானம் சொல்லலாம். பண்பாடு ,சமூகம் என்று எனக்க்கு நிறையச்சோல்லி தரும் அளவிற்க்கு அவன் அறிவாளி.அவன் சொன்னவற்றையே அவனுக்கு உதாரணமாய் சொல்லலாம் . புரிந்து கொள்வான்.அவன் புத்திசாலி.
அவன் வீடு
அன்ரி வந்தா (அவன் அம்மா)
“தம்பி சொன்னவன்”
என்ன அன்ரி ?
..கொம்பியூட்டர்ல ஏதோ டொக்கிமென்ஸ் இருக்கு நீ எடுக்க வருவன்னு.
அவன் எங்க அன்ரி போட்டான் ?
அன்ரி ஆச்சரியமா பார்த்தா
ஏன்ண்டி பிள்ள தெரியாத மாதிரி கேகிற அவன் கொழும்புக்கு கோஸ் படிக்க போனது உனக்கு தெரியாதோ ?
எனக்கு தூக்கி வாரிப்போட்டது
எப்ப அன்ரி ?
போன கிழமை.ஏன் இரண்டு பேரும் சண்டையோ ? என்று கேட்டுக் கொண்டிருந்த அன்ரி வாசலில் யாரோ வர
சரி நீ அவன்ர அறைக்குள்ள போய் கொம்பிய்ய்ட்டர பார்.\
என்று சொல்லிவிட்டு நகர்ந்தா எனக்கு புரிந்தது.கொம்பூட்டர்ல ஏதோ இருக்கு.
போனேன் அதை திறந்தேன் திரையில் ஒரு கோப்பு பாஸ்வேட் போட்டு இருந்தது . அதில் என் பெயர் .
கிளிக் செய்தேன் பாஸ்வேட் கேட்டது.எனக்கு தெரியும் அவன் எப்பொது ஒரே ஒரு ஒரு பாஸ் வேட்தான் பாவிப்பான். “யவனராணி” அவனுக்க்கு விருப்பமான நாவல். எனக்கு (எனக்கு மட்டும் தான் அவன் பாஸ்வேட் தெரியும் ந்னு கர்வமாகவு கூட இருந்தது )
திறந்தேன்
அழகாய் டைப்பண்ணி இருந்தான்.
“மன்னிச்சு கோ..மன்னிப்பு நான் சொன்னதுக்க்கு இல்லை …..நீ இவ்வளவு நாளா எப்பிடியும் பீல் பண்ணி இருப்ப உன் கவலைக்கும் கோவத்துக்கும் நான் காரணாமாயிட்டன் அதுக்கு தான் மன்னிப்பு கேட்டேன்..மற்ற படி நான் கேட்டது ஒன்றும் தவறில்லை…அது எனக்கு நான் கேட்ட நாளுக்கு 2 நாள் முதல் தான் தோணிச்சு……என் நட்பு நிஜம். எந்த கீழ்தனமான எண்ணத்துடனும் நான் பழக்வில்லை……அது உனக்கும் தெரிய்ம்……மனித உண்ர்வுகளுக்கு முன்னால சமூகம் ,வயசு எல்லாம் பெரிய விசயம் இல்லை . உலகத்துக்கு இது ஒண்ணும் புதிதல்ல . எனக்க்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். இது போதும் இதை நான காதல்கடிதமாக்க விரும்பவில்லை . ……உன்னை முழுதாய் புரிந்தன் நான் என்றும் என்னையும் நீ புரிந்து கொள்வாய் என்று நினைத்து இருந்தேன்……ஒரு வாரம் நீ கண்களுக்கு தட்ட்டு படுவாய் என்று காத்திருந்தேன் ..வரல …நான் போறேன்…….இனி உன்கண்களில் படேன்…….”
கடசியாக ஒன்று சொல்கிறேன்…..நான் தோத்து போனேன்.”
முடிந்திருந்தது கடிதம்.
விசைப்பலகையில் கைக்கள் படர பொத்தான் கள் கண்களின் ,கண்ணீர் பிசு பிசுத்த்து.
“பாவி நீ தோற்று தான் போனாய் என் மனம் செத்தே போய் விட்டது எப்படி சொல்ல போகிறேன்…இந்த கணம் முதல் நான் அந்த அசுர விதை என் மனதிலும் விதைக்கப்பட்டதை…..
இனி அதைசொல்லப்போவதும் இல்லை என்பதையும்.
-யதார்தன் -